இதுவும் இந்திய கிரிக்கெட் அணிதான்



உலகின் சிறந்த ஃபீல்டர்... கோப்பையை வென்ற ஃபைனல்!

கடந்த வாரம் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக கோப்பையை வென்று வாகை சூடியிருக்கிறது இந்திய அணி. ஃபைனலில் 389 ரன்கள் எடுத்த பாகிஸ்தானின் இமாலய இலக்கை சூப்பராக சேஸ் செய்து அசத்தினார்கள் நம்மவர்கள். ஏற்கனவே, டி20 உலகக் கோப்பையை தன் வசம் வைத்திருக்கும் இந்திய அணிக்கு, இந்த மகுடம் மேலும் ஒரு பொக்கிஷம். ‘‘என்னங்க உளர்றீங்க...

 எங்களுக்குத் தெரியாத கிரிக்கெட்டா?’’ என டென்ஷன் ஆகிறீர்களா? இது உங்களுக்குத் தெரியாத கிரிக்கெட்தான். பார்வையற்றோருக்கான கிரிக்கெட்! உலகமே தங்களை உற்றுப் பார்க்கச் செய்திருக்கும் இந்த பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த ஒரே தமிழக வீரர், மதுரைப் பையன் ரமேஷ்! ‘உலகின் மிகச் சிறந்த ஃபீல்டர்’ என்கிற பட்டத்தைப் பெற்றுத் திரும்பியிருக்கிறார்.

‘‘இது என் சின்ன வயசுக் கனவு. என் உலகமே கிரிக்கெட்தான். அதுக்காக படிப்பை விட்டேன். வீட்டுல எப்பவும் திட்டு வாங்கிட்டே இருப்பேன். ஆனா, இன்னைக்கு எல்லாரையும் சந்தோஷப்படுத்தியிருக்கேன்’’ - உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறார் ரமேஷ். ‘‘எனக்கு சொந்த ஊர் மதுரை பக்கத்துல தேனூர் கிராமம். அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டாரு. அம்மாதான் விவசாயம் செஞ்சு படிக்க வச்சாங்க. அண்ணன், அக்கா, தங்கச்சின்னு கூடப் பிறந்தவங்க மூணு பேர். எனக்கு கண் பார்வை குறைவா இருந்ததால, மதுரையில இருக்கிற பார்வையற்றோர் பள்ளியில சேர்ந்து படிச்சேன். அங்கதான் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் விளையாட்டைக் கத்துக்கிட்டேன்.

 8ம் வகுப்பு படிக்கும்போதே தமிழ்நாடு டீம்ல விக்கெட் கீப்பரா செலக்ட் ஆனேன். அப்பல்லாம் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவைதான் மேட்ச்சே நடக்கும். ஆனா, நான் விடாம ப்ராக்டீஸ் பண்ணிட்டே இருந்தேன். அந்த நேரத்துல ஒவ்வொரு மாவட்டத்திலும் டீம் ரெடி பண்ணுனாங்க. நான், மதுரை டீம் கேப்டன் ஆனேன். அதுல சிறப்பா விளையாடி, 2011லதான் இந்தியா டீம்ல இடம்பிடிச்சேன்’’ என்கிறவர், இந்த விளையாட்டின் நுணுக்கங்களையும் விவரிக்கிறார்...

‘‘நார்மல் கிரிக்கெட் ரூல்ஸ்தான் எங்களுக்கும். ஆனா, சில மாறுதல்கள் இருக்கும். எங்க விளையாட்டில் பந்து சத்தம் கேட்கிற மாதிரி இருக்கும். பந்தை உருட்டித்தான் போடணும். எவ்வளவு வேகமா வேணும்னாலும் போடலாம். இதுல, ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின் எல்லாம் போடுவாங்க. அப்புறம், டீம்ல இருக்கிற 11 பேர்ல நாலு பேர், பி1 வகையினர். அதாவது, முழுவதும் பார்வையற்றவங்க. 3 பேர் பி2 வகையினர். இவங்களுக்கு 30 சதவீதம் பார்வையிருக்கும்.

அடுத்த நாலு பேர், 50 சதவீதம் பார்வையிருக்கிற பி3 வகையைச் சேர்ந்தவங்களா இருப்பாங்க. நான் இந்த வகைதான். பி1 வகையில உள்ளவங்க கையில வெள்ளை கலர் பேண்டும்; பி2 நீலக் கலர் பேண்டும்; பி3 சிவப்பு கலர் பேண்டும் போட்டிருப்பாங்க. இதை வச்சு யார் எந்த வகையினர்னு ஈஸியா கண்டுபிடிச்சிடலாம். பி1 காரங்களுக்கு மட்டும் சில சலுகைகள் உண்டு. அவங்க ஒரு ரன் அடிச்சா, 2 ரன் கணக்குல ஏறும். 4 ரன்னுன்னா 8 ரன்னுனு அர்த்தம். அதே சிக்ஸ் அடிச்சா, 12 ரன்கள் ஏறும். அவங்க ஒன் பிட்ச் கேட்ச் பிடிச்சாலும் அது அவுட்!’’ என்கிறார் ரமேஷ் சிரித்தபடி.

‘‘2012ல் ட்வென்ட்டி20 பைனலில் இதே பாகிஸ்தான் டீமைத்தான் தோற்கடிச்சு கோப்பையைத் தட்டினோம். அப்போ, யாருமே எங்களை கவனிக்கல. இப்போ, நிறைய பேர் பாராட்டுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நானெல்லாம் சச்சினைப் பார்த்துப் பார்த்து விளையாடினவன். இப்போ, அவரே தன்னோட பாராட்டைத் தெரிவிச்சிருக்கார். அதோட பிரதமர் மோடி எங்களைக் கூப்பிட்டு, தனித்தனியா பாராட்டினார்.

கோப்பை வாங்கினாலும், எந்த பணப் பரிசும் கிடையாது. கோப்பை மட்டும்தான். ஆனா, மத்திய அரசு 7 லட்சம் ரூபாய் கொடுத்து கௌரவிச்சது. அப்படியே பார்வையற்றோர் கிரிக்கெட்ல இருக்குறவங்களுக்கு அரசே வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தா நல்லா யிருக்கும். எங்க எதிர்பார்ப்பு, கோரிக்கை எல்லாமே அதுதான்!’’ என்கிறார் அவர் பணிவோடு!‘‘ஒரு ரன் அடிச்சா, 2 ரன் கணக்குல ஏறும். 4 ரன்னுன்னா 8 ரன்னுனு அர்த்தம். அதே சிக்ஸ் அடிச்சா, 12 ரன்கள் ஏறும். அப்புறம், அவங்க ஒன் பிட்ச் கேட்ச் பிடிச்சாலும் அது அவுட்!’’

- பேராச்சி கண்ணன்
படங்கள்: கிஷோர்ராஜ்