பெட்டிக்குள் உறங்கும் பெரிய படங்கள்!



திணறுது திரையுலகம்

டிஜிட்டல் தொழில்நுட்பம் சினிமாவை ரொம்பவே சிம்பிளாக்கிவிட்டது. செல்போன் கேமராவிலேயே குறும்படம் முதல் பெரும்படம் வரை எடுக்க முடியும் என்கிறார்கள். தயாரிப்பு சிம்பிள்தான்.

ஆனால் ரிலீஸ்..?நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ரெடியாகியும் இன்னும் திரைக்கு வராத பட்டியலில் முன்னணி ஹீரோக்கள், இயக்குநர்களின் படங்களே இருக்கின்றன. வெளிச்சத்தில் எடுக்கப்பட்டு இருட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் அப்படிப்பட்ட படங்களைப் பற்றி ஒரு இன்வெஸ்டிகேஷன்!

ஆர்யா தயாரித்த, ‘படித்துறை’, ஆர்யா தம்பி சத்யா - ‘குத்து’ ரம்யா நடித்த ‘காதல் டு கல்யாணம்’, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’, தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ‘களவாடிய பொழுதுகள்’, ஜெய் - பூர்ணா நடித்த ‘அர்ஜுனன் காதலி’, விவேக்கின் ‘சொல்லி அடிப்பேன்’,

நடிகை ரோகிணி இயக்கிய ‘அப்பா வின் மீசை’, ‘தமிழ்ப்பட’த்தை அடுத்து அமுதன் இயக்கிய ‘ரெண்டாவது படம்’, ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கிய ‘ஏன் இப்படி மயக்கினாய்’, ‘கஜினி’ தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் தயாரிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில், பரத், நிலாவை வைத்து எடுத்த ‘கில்லாடி’ என பல பெரிய படங்களே ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கின்றன.

‘‘இது காலம் காலமாக சினிமாவில் உள்ள சாபக்கேடு!’’ எனத் துவங்குகிறார், தயாரிப்பு நிர்வாகியான வெங்கட்.  ‘‘1998ன்னு நினைக்கிறேன்... மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் மகன் முரளி தயாரிச்ச படம், ‘அனந்தகிருஷ்ணா’. ராதாமோகனின் முதல் படம். பிரகாஷ்ராஜ் ஹீரோ.

அவர் பல வகையில் உதவி யும், முரளி எவ்வளவோ போராடியும், வெளியீட்டுக்குத் தேவையான பணம் கிடைக்காததால, படம் நின்னுடுச்சு. அதேபோல் எம்.ஜி. பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரகாஷ்ராஜ், அபிதா, வடிவேலு நடிச்ச ஒரு படம் 10 வருஷமா நிக்குது. இப்ராஹிம் தயாரிப்பு, ஆர்.கே.செல்வமணி டைரக்ஷன், பிரசாந்த் ஹீரோ... இப்படி ஒரு கூட்டணியில் ரெடியான ‘புலன்விசாரணை பார்ட் 2’ இன்னமும் பெட்டியிலதான் இருக்கு.

பிரமிட் சாய்மீரா நிறுவனம் வாங்கி, தயாரிச்சு, விநியோகிச்சு அமர்க்களப்படுத்தி என்ன பயன்? ‘ஏன் இப்படி மயக்கினாய்’, ‘வானம் பார்த்த சீமையிலே’ ரெண்டும் எப்போ வெளியாகும்னு யாருக்கும் தெரியாது. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘நான் கடவுள்’ படங்களைத் தயாரிச்ச நிறுவனம் சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் - ரம்யா கிருஷ்ணனை வைத்து தயாரித்த ‘அத்தை மகன்’, 18 வருஷமாகியும் இன்னும் வெளிவரவே இல்லை.

முரளி நடிப்பில் ‘கண்டக்டர் மாப்ளே’ என்ற படத்தை அம்மா கிரியேஷன்ஸ் தயாரித்தது. அதுவும் வரலை. ரம்பாவின் சகோதரர் ‘விடியும்வரை’ன்னு ஒரு படத்தை எடுத்து முடிச்சு டி.வி ரைட்ஸ் கூட வித்துட்டார். ரம்பா நடிச்சு பல மொழிகள்ல எடுக்கப்பட்ட அந்தப் படம், ஒரு மொழியில கூட ரிலீஸ் ஆகலை’’ எனப் புள்ளிவிபரம் அடுக்குகிறார் வெங்கட்.

‘படித்துறை’யில் நாற்பதுக்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர். முதன்முதலில் ஆர்யா தயாரித்த படம். பாலுமகேந்திரா வின் உதவியாளரும் எழுத்தாளருமான சுகா இயக்குநராக அறிமுகம். இளையராஜா இசை. எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் இருவரும் முதன்முறையாக பாடல்கள் எழுதிய படம். இப்படி ஆயிரம் சிறப்புகள் இருந்தும் படம் ரிலீஸ் ஆக முடியவில்லை! ஆர்யாவே இதில் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. ஆர்யாவின் அதிர்ஷ்டத்தில் பாதி கூட அவர் தம்பிக்கு இல்லை. அவர், ‘குத்து’ ரம்யாவுடன் நடித்த ‘காதல் டு கல்யாணம்’ படத்தைத் தயாரித்த நிறுவனமே மூடப்பட்டு விட்டது.

‘சொல்லி அடிப்பேன்’ என்று ஒரு படத்தில் நடித்ததை அநேகமாக விவேக்கே கூட மறந்திருப்பார். ‘இந்தியன் தியேட்டர்ஸ்’ கிருஷ்ணகாந்த், துணிச்சலாகத்தான் இந்தப் படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். அப்போது அவர் தயாரித்துக்கொண்டிருந்த சிம்புவின் ‘மன்மதன்’ ஏகப்பட்ட செலவுகளை இழுத்து விட, அதில் சிக்கிக்கொண்டார் கிருஷ்ணகாந்த். விவேக்கும் இந்தப் படத்தை வெளியிடும் முயற்சியில் தோற்றுவிட்டார். 

விஷாலின் ‘மதகஜராஜா’ எப்போது வெளிவந்தாலும் ஹிட்தான். காரணம், ‘கலகலப்பு’ மாதிரியே சுந்தர்.சியின் கலர்ஃபுல் காமெடி படம் அது. ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்தான் படத்தைத் தயாரித்தது. ‘மன்மதன் அம்பு’, ‘மயக்கம் என்ன’, ‘ராஜபாட்டை’, ‘கடல்’ போன்ற படங்களை விநியோகம் செய்ததில் அவர்களுக்கு எக்கச்சக்க அடி.

அந்த நெருக்கடி யிலிருந்து மீண்டாலே இந்தப் படத்துக்கு விமோசனம் கிடைக்கும். ‘கஜினி’ வெற்றிக்குப் பிறகு தொடங்கப்பட்ட படம், ‘கில்லாடி’. படத்தின் ஹீரோயின் நிலா கூட ஃபீல்ட் அவுட். தற்போது ஃபைனான்ஸ் பிரச்னையிலிருந்து மீண்டு, படத்தை தூசு தட்டி வெளியிட பிரயத்தனம் செய்கிறார்கள். 

இப்படி நான்கு ஆண்டு களுக்கு முன்பே ரெடியாகி, இன்னும் ரிலீஸ் செய்ய முடியாத படங்களின் எண்ணிக்கை மட்டும் நூறைத் தாண்டும். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்த வாரம் வரை 180 படங்கள் திரைக்கு வந்துவிட்டன. ஆனால், நடப்பாண்டில் சென்ஸார் சர்டிஃபிகேட் வாங்கிய படங்களின்எண்ணிக்கை முந்நூறுக்கும் மேல். அந்த வகையில், 160க்கும்
மேற்பட்ட படங்களால் திரையைத் தொட முடியவில்லை. வரும் நான்கு மாதங்களில் மட்டும் திரைக்கு வர ரெடியாக உள்ள படங்களின் எண்ணிக்கை 70.

சேரன் தனது ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை தனது ‘சி.டு.எச்’ மூலம் வெளியிட விருக்கிறார். ரோகிணியின் படத்தையும் சேரனின் நிறுவனம்தான் வெளியிட இருக்கிறது.

2015ல் தமிழ் சினிமா நிறைய மாற்றங்களைச் சந்திக்க இருக்கிறதாம். ‘‘இப்போதெல்லாம் அனுபவம் இன்றி களத்தில் இறங்கிவிட்டு, பாதியிலேயே தொலைந்து போகும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால், எங்கிருந்தோ முளைக்கும் இப்படிப்பட்ட புரொடியூஸர்களால்தான் திரைத்துறை தொழிலாளர்களும், நடிகர்களும், கலைஞர்களும் பலன் அடைந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் வருகை நிற்கும்போது, படங்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். ஆனால், தரமான படங்கள் மட்டும் வரும்’’ என்கிறார்கள் சினிமா வல்லுநர்கள்!

- மை.பாரதிராஜா