பப்பில் பாடும் பேராசிரியை!



நிர்த்தியாவைப் பார்த்து நிதானிக்கவே முடியவில்லை. எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில் புடவையின் பாந்தத்தில் அசர வைக்கிறார். தாஜ் ஹோட்டல் பப்பில் பாப் காஸ்ட்யூமில் அலற வைக்கிறார்.

காலையில் வீட்டுக்குப் போனால் சுடிதாரில் சுப்ரபாதமாய் வந்து நிற்கிறார். காலேஜ் புரொபஸர், பாடகி, இசையமைப்பாளர் என எடுத்த கனவுகள் எல்லாம் காட்சிகளாக தடம் பதித்து தடதடவென வந்து நிற்கிறது அடுத்த தலைமுறை!

‘‘எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். ‘எப்படிங்க ஒரு புராபஸர் இப்படி? நம்பவே முடியலை’ என்றார்கள். ஒண்ணும் அதிசயம் இல்லை. நான் இதில் எதையும் போட்டு குழப்பிக்கறதில்லை. காலேஜில் நான் நிர்த்தியா மேம். என்னை ஈஸியா மாணவிகள் அணுகலாம். தோழி மாதிரிதான் இருப்பேன். ஆனால், கொடுத்த வேலைகள், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லையென்றால் கறாராக கண்டிப்பேன்.

பொண்ணுங்க என்னை ரொம்பவும் ரசிப்பாங்க. அவர்களுடைய ரசனைக்குப் பக்கத்தில் இருக்கிறேன் என்ற சந்தோஷம். ‘எப்படி அடுத்த கட்டத்திற்குப் போவது? என்ன படிக்கலாம்?’ என்று சந்தேகங்கள் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்க அன்புப் பிடியில், அக்கறையில் ஒவ்வொரு நிமிடமும் ஒன்றியிருப்பேன்.

வெளியில் வந்துட்டா, எனக்கு ஸ்ப்ளிட் பர்ஸனாலிட்டிதான். அப்புறம் முழுக்க மியூசிக்தான். பியானோவில் எட்டாம் க்ரேடு வரைக்கும் படித்தது எல்லாம் பெரிய விஷயம்னு சொல்லுவாங்க. ஆனால், இசையைப் பொறுத்த வரை அதன் நீள, அகலங்கள் அதிகம்.யுவன்ஷங்கர் ராஜா மியூசிக்கில் பாடிய ‘சிக்கி சிக்கி’ என்னை நல்ல இடத்திற்கு கொண்டு போச்சு. அப்புறம் ‘சிவா மனசுல சக்தி’ல ‘எப்படியோ மாட்டிக்கிட்டேன்...’ பாட்டு எல்லார் உச்சரிப்பிலும் இருந்தது.

இப்போ, ‘ஆம்பள’ படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ இசையில் மோஹித் சௌகானுடன் டூயட் பாடியது பெரிய கௌரவம். நான் தமிழ்ப் பாடல்களை தேர்ந்தெடுக்கத்தான் செய்யறேன். இரட்டை அர்த்தமெல்லாம் இருந்தா ‘தொண்டை சரியில்லை’, ‘என்னமோ எனக்கு குரல் எடுப்பா அமையலை’ன்னு நழுவிடுவேன்.சன் டி.வி.யின் ‘ஊலலல்லா’ நிகழ்ச்சியிலதான் அறிமுகம் ஆனேன். அனிருத்தும் அங்கேதான் ஆரம்பித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் சார்தான் நடுவர். நான் பாடியதைப் பார்த்துட்டு ‘ஜோதா அக்பரி’ல் பாட அழைச்சார். இன்னிக்கும் அது எனக்கு பெரிய ப்ளஸ்.

அப்பா, அம்மா கொடுத்த சுதந்திரமும் அதிகம். அதை எந்த விதத்திலும் தப்பா பயன்படுத்திடக் கூடாது என்ற எண்ணம் அதிகமாவே இருக்கு. என்னால் புடவை கட்டிக்கொண்டு, மாணவிகளுக்கு பாடம் நடத்த முடியும். ஒரு உற்சாகமான மனநிலையில், ‘பப்’பில் ஒரு ராப் பாட முடியும். என் சுதந்திரத்தில், உணர்வில், நெறியில் யாரும் உள்நுழைய அனுமதிக்க மாட்டேன். ‘பப்’பில் பாட வந்ததற்காக ‘உங்கள் எல்லை குறைந்து விட்டது’ என யாரையும் நினைக்க விட மாட்டேன். வெஸ்டர்ன் மியூசிக்கில் என் புகழ் என்னை இங்கு இழுத்து வருகின்றது.

பெண்களுக்கு நாம் ஒரு எல்லை வைத்துப் பழகி விட்டோம்; அல்லது பழக்கி விட்டோம். இன்னிக்கு பெண்கள் தங்களின் வாழ்க்கையை அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் உலகத்தை சிருஷ்டிக்க அவர்களுக்கு இடம் வேண்டும். ஒரு பெண்ணின் சுதந்திரம் நல்லபடியாக பேசப்படுகிற எல்லா இடங்களும் எனக்கு சௌகரியமான இடங்கள்தான்!’’

‘‘கல்யாணமெல்லாம் ஐடியாவே இல்லையா?’’ எனக் கேட்டால், ‘‘வீட்டில் அப்பாவும், அம்மாவும் இப்போ தீவிரமாகத் தேடுகிறார்கள். நம்ம ஸ்ப்ளிட் பர்ஸனாலிட்டிக்கு தலை
யசைக்கிறவர் வரணுமே. எல்லாத்திற்கும் மேல ஒரு நண்பன் மாதிரி அமையணுமே’’ என சிலுங்குகிறார் நிர்த்தியா மரியா ஆண்ட்ரூஸ்.இந்த ஏஞ்சலுக்கு யாரப்பா வெயிட்டிங்?

இன்னிக்கு பெண்கள் தங்களின் வாழ்க்கையை அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் உலகத்தை சிருஷ்டிக்க அவர்களுக்கு இடம் வேண்டும்.

- நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்