டெக்னாலஜி



‘‘வாடா மருமகனே, என்னா உயரமா வளர்ந்துட்டே! உள்ள வந்து இப்படி உக்கார். மாமாவுக்கு கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்கு... ஒரு மெயிலுக்கு ரிப்ளை பண்ணிட்டு வந்துடுறேன்!’’ - தாய்மாமன் என்னை வரவேற்றார்.

‘‘அத்தே... எப்படி இருக்கீங்க...’’ - நான் அழைத்தபோது அத்தை தன் ஸ்மார்ட் போனில் மூழ்கியிருந்தார். ‘‘ஒரே நிமிஷம்டா... ஒரு ரெசிபி மட்டும் ஷேர் பண்ணிட்டு வந்துடறேன்’’ என்றார் கெஞ்சலாக!

‘‘ஆமாம்... மீனுக்குட்டி எங்கே? ஓ மாடிப்படிகிட்ட இருக்கியா? 8 வயசுல உனக்கு என்ன லேப் டாப்?’’ - மாமன் மகளிடம் கேட்டேன். ‘‘புராஜக்ட் ஒர்க் மாமா... கூகுளிலிருந்து டவுன்லோடு பண்றேன்!’’ என்றாள் அவள்.‘‘யாரது?’’ - பாட்டியின் குரல் உள்ளேயிருந்து பலவீனமாய் ஒலித்தது.‘‘ஆமா, இதுக்கு வேற வேலை இல்லை. சும்மா நொய்யி... நொய்யின்னு...’’ - மாமாவின் அதிகாரம் ஹாலில் இருந்து உச்சஸ்தாயியில் கேட்டது.

ஒரு மனுஷியை கவனிக்காமல் கணினியில் ஊறிக்கிடக்கிறார்களே, என்ன மனிதர்கள் இவர்கள்? - எனக்குக் கோபமே வந்தது.‘‘பேராண்டி, இங்க யாரும் என்னைக் கண்டுக்கறதில்ல. நீயாச்சும் என் ஃப்ரெண்டு போட்டிருக்கிற ஃபேஸ்புக் கமென்ட்டை கொஞ்சம் படிச்சி சொல்றியா?’’ என செல்லை நீட்டினாள் பாட்டி!        
 
ஆர்.கணேசன்