உலகம் சுற்றும் டீக்கடை தம்பதி
சத்தியமாய் இந்தத் தலைப்பு மூலம் நாம் மோடியை கலாய்க்க வரலைங்க. ‘நன்றாக டீ விற்றால்தான் அடுத்த டூர் போக முடியும்’ என்ற உத்வேகத்தோடு கொச்சி நகரில் டீக்கடை நடத்திக்கொண்டிருக்கும் ஒரு தம்பதிதான் இங்கே நம் ஹீரோ, ஹீரோயின். இருவருமே அறுபதைக் கடந்தவர்கள். சின்னஞ்சிறு கடையில் சிறுகச் சிறுக பணம் சேர்த்து, போதாததற்குக் கடன் வாங்கி உலக சுற்றுலா போகிறார்கள் இவர்கள். இப்படி இதுவரை இவர்கள் டூர் அடித்திருப்பது 16 நாடுகளுக்கு!

கொச்சி, காந்தி நகரில் விஜயன் - மோகனாவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. நகரமெங்கும் எட்டு ரூபாயை எட்டிப் பிடித்துவிட்ட டீ, இவர்கள் கடையில் மட்டும் ரூபாய் ஐந்து தான். பூரி நான்கு ரூபாய், இடியாப்பம் ஐந்து ரூபாய் என இவர்கள் கடையில் விலை எல்லாமே ‘அள்ளிக்கோ... எடுத்துக்கோ...’ ரகம்.
ஆனால், ஏதோ டாக்டரின் ஆலோசனை நேரம் மாதிரி இந்தக் கடை திறந்திருப்பது காலை 6.30-11 மற்றும் மாலை 4-9 மணி வரைதான். ‘‘ஏன் சார்?’’ என விஜயனைக் கேட்டால், ‘‘போதும் சார்... எங்களுக்கு என்ன? அடுத்த டூர் போக அடுத்த வருஷம் பணம் சேர்த்தா போதாதா?’’ எனச் சிரிக்கிறார்.
‘‘டீ, பலகாரத்தை சைக்கிளில் கொண்டு போய் விக்கிற தொழிலைத்தான் எங்கப்பா செய்தார். நான் பத்தாவது வரைதான் படிச்சேன். அப்ப வரலாறு, புவியியல் பாடங்கள்ல வர்ற நாடுகளை எல்லாம் பற்றி படிச்சுப் பார்த்து, ‘இங்கெல்லாம் நாம போக முடியுமா’ன்னு ஏங்கியிருக்கேன். ஒரு தடவை எங்க ஏரியாவுல சில பேர் வட இந்தியாவுக்கு புனிதப் பயணம் போனாங்க. அவங்களுக்கு சமையலில் உதவியா இருக்க, என்னையும் அவங்களோட அனுப்பி வச்சார் அப்பா. ஒரு மாச டூர். அதுதான் என் முதல் பயணம்.
அதுக்கப்புறம் பெரியவனாகி கல்யாணமெல்லாம் முடிஞ்ச பிறகு, என் அண்ணன் ஒருமுறை ஹரித்வாருக்குக் கூப்பிட்டார். கையில காசில்லை... வீட்டிலிருந்த நகைகளை எல்லாம் வித்து குடும்பத்தோட கிளம்பினேன். இது ரெண்டாவது சுற்றுப்பயணம். உலகம் சுத்துற ஏக்கம் அப்போதும் ஏக்கமாவே இருந்துச்சு.
ஏன்னா, எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. அவங்களைப் படிக்க வைக்கணும், கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு கடமைகள் நிறைய. ‘இப்படி சைக்கிள்ல டீ வித்தா கடமையும் முடியாது, கனவும் நிறைவேறாதுன்னுதான் இந்தக் கடையையே ஆரம்பிச்சோம். ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணியாச்சு. சிறுகச் சிறுக சேர்த்து வீடும் ரெண்டு வாங்கியாச்சு!’’ என்கிற விஜயன், வெறிகொண்டு வெளிநாடு போக அவர் மனைவி மோகனாதான் முதல் காரணமாக இருந்திருக்கிறார்.
‘‘2007ல ஒரு தடவை திருப்பதி போயிருந்தப்போ, வானத்தில் போன ஃப்ளைட்டை அதிசயமா பார்த்தா மோகனா. அப்ப எங்க கூட வந்திருந்தவர், ‘ஃப்ளைட்டெல்லாம் பணக்காரர்களுக்கு... நம்மளை மாதிரி ஆளுங்க அதை அண்ணாந்துதான் பார்க்கணும்’னு சொன்னார்.
மனசு பாரமாகிடுச்சு. கொச்சி திரும்பினதும் முதல் வேலையா வெளிநாட்டு சுற்றுலா ஏஜென்ட்டைப் பிடிச்சேன். கடன் வாங்கி அவங்ககிட்ட பணத்தைக் கட்டி, தட்கல்ல பாஸ்போர்ட் எடுத்து, இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து நாடுகளுக்குப் போயிட்டு வந்தோம். அதுதான் தொடக்கம்!’’ என்கிற விஜயனின் ரெகுலர் தோற்றம் கைலியும் பனியனும்தான். பேன்ட் போட்டு பழக்கமில்லை. வெளிநாட்டு டூர்களுக்காகவே 4 பேன்ட் மட்டும் தைத்து வைத்திருக்கிறார் மனிதர்.
‘‘கடையில கடுமையா உழைச்சு பணம் சேர்ப்போம். வெளிநாட்டு டூருக்கு ப்ளான் போடுவோம். சேமிப்பு பத்தலைன்னா நகைகளை விப்போம்... அதுவும் பத்தலைன்னா கடன் வாங்குவோம். போற இடத்துல படு சிக்கனமா இருப்போம். பத்து டாலருக்கு மேல எந்த நாட்டுலயும் செலவு செய்ததில்ல. டூர் முடிஞ்சு திரும்பினதும் ஹோட்டலைத் திறந்து பிசாசா உழைப்போம். அப்பத்தானே கடனை அடைக்க முடியும்.
இப்படியே மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஐரோப்பிய நாடுகள்னு எல்லாம் பார்த்தாச்சு. 2015ல அமெரிக்கா போக ப்ளான் பண்ணியிருக்கோம்!’’ என அசரடிக்கிறார் விஜயன்.
‘பொதுவாக இதையெல்லாம் பொம்பளைங்க ஆதரிக்க மாட்டாங் களே... ஊதாரித்தனம்னு இல்ல சொல்வாங்க?’ என சந்தேகத்தோடு அவர் மனைவியைப் பார்த்தால், அவர் இவரை விடவும் உற்சாகமாகப் பேசுகிறார்.
‘‘சின்ன வயசுல எனக்கும் ஊர் சுத்த ஆசையா இருக்கும். ஆனா, வீட்டுல எங்கேயும் கூட்டிப் போக மாட்டாங்க. அதுக்காக வருத்தப்படும்போது எங்க பாட்டி, ‘கவலைப்படாதடி... உன்னைக் கட்டிக்கிறவன் நீ போதும் போதும்ங்கிற வரை உன்னை எல்லா இடத்துக்கும் கூட்டிப் போவான்’னு சொல்வாங்க. அதுதான் இப்ப பலிச்சிருக்கு.
எனக்கு சீனா போகணும்னு ரொம்ப நாள் ஆசை. இவர்தான், ‘அது பக்கத்துல இருக்கு... எப்ப வேணும்னாலும் போகலாம். தெம்பு இருக்கும்போதே அமெரிக்கா, ஆஸ்திரேலியாவெல்லாம் பார்த்துடணும்’ங்கிறார்’’ எனச் செல்லக் கோபம் காட்டுகிறார் அவர்.‘‘சரி, எல்லா நாடுகளுக்கும் போய் வந்தாச்சுன்னா... அதுக்கப்புறம் என்ன?’’
‘‘முதல் வேலையா, போயிட்டு வந்த லிஸ்ட்டையும் எடுத்த போட்டோக்களையும் அழிச்சிடுவேன். மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிப்போம். எங்களுக்கு இது அலுக்கவே அலுக்காது. வயசாகி நடக்க முடியாம போனாலும் ஒருத்தர் இன்னொருத்தரை வீல் சேர்ல வச்சி தள்ளிக்கிட்டு டூர் போவோம். இத்தனை நாள்ல மோகனாவை விட்டுட்டு ஒரு இடத்துக்குக் கூட நான் போனதில்ல. எங்க அன்பு இதில் இருக்கு!’’ - ஃபைனல் டச்சில் நெகிழ வைக்கிறார் விஜயன்.
ஃப்ளைட்டெல்லாம் பணக்காரர்களுக்கு... நம்மளை மாதிரி ஆளுங்க அதை அண்ணாந்துதான் பார்க்கணும்’’னு ஒருத்தர் சொன்னார். மனசு பாரமாகிடுச்சு. அதுதான் எங்க பயணங்களுக்கு காரணம்!
- பிஸ்மி பரிணாமன்