சகுனியின் தாயம்



‘‘வாட்... ஸ்டே வாங்க முயற்சிக்கிறோமா?’’ - தேன்மொழியின் குரலில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து ஒலித்தது.‘‘ஆமா...’’ ரங்கராஜன் நிதானமாக பதிலளித்தான்.
‘‘யூ மீன்... கேஸ் போட்டிருக்கோமா?’’‘‘யெஸ்...’’

‘‘அப்ப சட்டவாதத்தை நாம ஏத்துக்கறோமா?’’
‘‘அப்படீன்னு யார் சொன்னது?’’
‘‘அப்புறம் எதுக்காக இந்த வழக்கு?’’
‘‘சட்டம் ஆளும் வர்க்கத்துக்குத்தான் சாதகமா இருக்குன்னு மக்களுக்கு உணர்த்த...’’
‘‘புரியல...’’

‘‘தெளிவாவே சொல்லிடறேன் தோழர். தர்மபுரில ‘மெடிகோ’ நிறுவனம் கால் பதிக்கக் கூடாது. இதுக்காக மக்களை திரட்டி முழுவீச்சோட போராடப் போறோம். இதுதான் நம்மோட முதல் அஜண்டா. அதே நேரம் சட்ட ரீதியாவும் தடை வாங்க முயற்சிக்கிறோம்...’’
‘‘அதுதான் ஏன்?’’

‘‘ஏன்னா தீர்ப்பு உழைக்கும் மக்களுக்கு சாதகமா இருக்காது. இந்த யதார்த்தத்தை மக்கள் மத்தில அம்பலப்படுத்த வேண்டாமா... அதுக்குத்தான் இது...’’‘‘அதாவது நிலவும் சட்டங்கள் எல்லாமே பணம் படைத்தவர்களுக்குத்தான் சாதகமா இருக்குன்னு புரிய வைக்கப் போறோம். அதுக்காகத்தான் நீதிமன்றத்தை நாடப் போறோம். இல்லையா?’’
‘‘கரெக்ட்...’’

‘‘அப்ப உண்மையை உணர்ந்ததும் மக்கள் நம்ம பக்கம் திரும்பிடுவாங்க இல்லையா?’’
‘‘உறுதியா சொல்ல முடியாது...’’ சுவரொட்டிக்கான வாசகங்களை எழுதியபடியே தமிழரசன் பதிலளித்தார்.
‘‘பிறகு ஏன் நாம போராடணும்..?’’
‘‘மக்கள் விடுதலைக்காக...’’
‘‘எதுக்காக இப்படி குழப்பறீங்க?’’
‘‘கற்பனாவாதத்துல மிதக்காம இருக்க...’’
‘‘தோழர்...’’

‘‘சொல்லுங்க என்ன விஷயம்...’’ புன்னகைத்தபடி நிமிர்ந்தார். எதையோ கேட்க முற்படுவதும் பிறகு உதட்டை கடிப்பதுமாக இருந்தாள் தேன்மொழி. அவளைப் பார்க்கவே தமிழரசனுக்கு பாவமாக இருந்தது. அருகில் வந்து தலையைக் கோதினார். ‘‘ஒரு விஷயத்தை புரிஞ்சுக்குங்க தோழர். ரயில் வர்றப்ப ஏறிக்கலாம்னு நினைக்கிறா மாதிரி புரட்சி இல்லை. இது ஒரு ப்ராசஸ். விடுதலைக்குப் பிறகும் அது தொடர்ந்துகிட்டுதான் இருக்கும். ஏன்னா நாம ஓரடி எடுத்து வைச்சா, ஆளும் தரப்பு நம்மை இரண்டடி பின்னுக்கு இழுக்கும்.

இதுக்காகவே பணத்தைத் தண்ணீரா வாரி இறைக்கும். நாம எதிர்பார்க்காத இடத்தில் இருந்தெல்லாம் தாக்குதல் தொடுப்பாங்க. உதாரணத்துக்கு இந்த மக்கள் திரள் போராட்டத்தையே எடுத்துப்போம். இதுல நமக்கு பத்து ஆதரவாளர்கள் கிடைச்சா பெரிய விஷயம். அதுல ஒண்ணு, இல்லைன்னா இரண்டு பேர்தான் அமைப்புல இணைவாங்க. சொல்றதுக்கில்லை. இணையாமயும் போகலாம். அதுக்காக நாம சும்மா இருக்க முடியுமா?’’
‘‘...’’

‘‘தன் குழந்தை சாப்பிடணும்னு ஒரு தாய் பட்டினி கிடக்கா இல்லையா... அதுமாதிரி எதிர்கால சமூகம் நல்லா இருக்கணும்னு நாம போராடிக்கிட்டு இருக்கோம். இதுக்கு முடிவே கிடையாது. ஏன்னா, நாம கம்யூனிஸ்ட்டுகள்...’’
‘‘...’’

‘‘புரட்சிங்கறது தேதி சொல்லி குலுக்கல் நடத்தற லாட்டரி இல்ல. உழைப்போட பயனை உறுதி செய்யறதுதான் பொதுவுடமை. அதாவது உழைப்பையே இன்பமாக்குகிற வாழ்க்கை நெறி...’’
‘‘...’’‘‘ஒண்ணு தெரியுமா தோழர்... வெட்டியெடுத்த நிகழ்காலம்னு எதுவுமே இல்லை. கடந்தகாலம் தோற்றுவிக்கிற உணர்ச்சிகள் நெஞ்சுல வாழற வரைக்கும் அது இறந்த காலமில்லை. எதிர்கால சிந்தனைகள் தலைல பூக்கிற வரை அது வெறும் கனவில்லை.

இந்த இரண்டையும் சுமக்கிற வாழ்க்கைதான் நிகழ்காலம். இந்த உண்மை தெரிஞ்சவங்க தங்களோட லட்சியத்துக்காக கொடுக்கிற ‘விலை’தான் ‘துன்பம்’. இதுதான் வாழ்க்கை. இடைவிடாத போராட்டங்களாலதான் மனித குலம் தன்னோட வாழ்க்கையையும், மதிப்பீடுகளையும், பண்பாட்டையும் செழுமைப்படுத் துது...’’‘‘இதைத்தான் ‘மகிழ்ச்சி என்பது போராட்டம்’னு காரல் மார்க்ஸ் சொன்னாரா?’’

‘‘ஆமா. அடுத்த நொடி மட்டுமில்ல, அடுத்த நூற்றாண்டும் எதிர்காலம்தான். ஸோ, எதிர்காலத்துக்காக நிகழ்காலத்தை நிறுத்தறவங்க... ஒரே வார்த்தைல சொல்லணும்னா கடைந்தெடுத்த சுயநலவாதிகள்...’’‘‘ம்...’’‘‘கடந்த காலத்தோட ஒழுக்க நெறிகளையும், காலாவதியாகிப் போன மதிப்பீடுகளையும் இன்றைய சமூகம் சுமந்துக்கிட்டு இருக்கு. இந்த சமூகத்துல இருந்துக்கிட்டு புதிய மாற்றங்களுக்காக போராடறதும், அதையே வாழ்க்கையா மாத்தறதும் சுலபமில்லை. நிச்சயம் நம்மை கேலி செய்வாங்க. பரவால்ல. ஆனா, புதிய குருத்துக்கள் மேல நாம தொடர்ந்து கவனம் செலுத்தணும். இதுல பலது தவிர்க்க முடியாதபடி மடிந்து போகலாம். ஸோ வாட்? பொத்திப் பொத்தி இளம் குருத்துக்களை பாதுகாப்பதுதான் இங்க முக்கியம்...’’
‘‘ம்...’’

‘‘சின்ன உதாரணம் சொல்றேன். மேக நோயை ஒழிச்சுக் கட்ட 605 மருந்துகளை ஜப்பானிய விஞ்ஞானி தயாரிச்சார். ஆனா, எதுவுமே வேலை செய்யலை. அதுக்காக அவர் சோர்ந்து போயிடலை. 606வது மருந்தை பொறுமையா தயாரிச்சார். வெற்றி பெற்றார். ஒரு சயின்ட்டிஸ்ட்டுக்கே இவ்வளவு பொறுமை தேவைன்னா பொதுவுடமைக்காக போராடுகிற நமக்கு எவ்வளவு பொறுமை தேவை.

ஆயிரக்கணக்கான போராட்ட முறைகளையும், வழிகளையும் விடாமுயற்சியோட சோதித்துப் பார்த்துக்கிட்டே இருக்கணும். அப்படி கடந்த காலத்துலேந்து நாம கற்ற பாடங்களை வச்சுத்தான் இப்ப ‘மெடிகோ’ நிறுவனத்துக்கு எதிரா மக்களைத் திரட்டி போராடப் போறோம்...’’   தமிழரசன் சொல்லி முடித்ததும் -‘‘மனிதகுல விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த அனைத்து தியாகிகளுக்கும்...’’ என்று உணர்ச்சிப்பெருக்குடன் ரங்கராஜன் கையை உயர்த்தினான்.

‘‘வீர வணக்கம்...’’ என பதிலுக்கு தமிழரசன் தன் வலது கையை உயர்த்தினார்.தன்னையும் அறியாமல் தேன்மொழி அதை வழிமொழிந்தாள்.அதே நேரம் - ‘‘இதெல்லாம் ஒண்ணுமேயில்லை ஸ்காட் வில்லியம்ஸ். இப்ப என்ன... தமிழரசன் கோஷ்டி கேஸ் போட்டிருக்கு. அவ்வளவுதானே? டெல்லிலேர்ந்து சிபில் கபில் இல்லைனா லக்ஷ்மண் ஜெத்மலானியை சில கோடிகள் கொடுத்து வரவழைப்போம். இந்தியாவுலயே இவங்க ரெண்டு பேரும்தான் ஃபேமஸான வக்கீல்கள். இவங்க ஒரு கேஸை எடுத்தாங்கன்னா ஜெயிக்காம விட மாட்டாங்க. வெற்றி நமக்குத்தான்...’’ மீசையை முறுக்கினார் வால்டர் ஏகாம்பரம்.

‘‘ம்...’’ என்றபடி லேப்டாப்பை பார்த்தான் ஸ்காட் வில்லியம்ஸ். மனித உறுப்புகளைக் கேட்டு, வளர்ந்த நாடுகளிலிருந்து ஆர்டர்கள் குவிந்திருந்தன...‘‘இன்னமும் என்ன யோசனை?’’சிந்தனையிலிருந்து மீண்ட இளமாறன், திரும்பாமல் பெருமூச்சு விட்டான். ‘‘கடமை முடியவில்லை ராணி...’’‘‘முடியவில்லையா? என்ன விளையாடுகிறாய்... போரில் பாண்டிய மன்னர்தானே வெற்றி பெற்றிருக்கிறார்?’’ கேட்டபடி யவன ராணி அவன் அருகில் அமர்ந்தாள். ‘‘ஆம்...’’

‘‘அவருக்குத் துணையாக களத்தில் நீதானே சதிராடினாய்?’’
‘‘ஆம்...’’‘‘அதன் பிறகுமா இப்படி சொல்கிறாய்..?’’
‘‘அதனால்தான் சொல்கிறேன்...’’
‘‘புரியவில்லையே?’’

‘‘புரிவதற்கு என்ன இருக்கிறது ராணி... நடைபெற்ற யுத்தத்தில் சீனர்களும், யவனர்களும் பங்கேற்கவில்லை. சோழனையும், சேரனையும், வேளிர்களையும் தன்னந்தனியாக பாண்டிய மன்னர் எதிர்த்து நின்றார்... வாகை சூடினார். ஆனால்..?’’
‘‘ஆனால்?’’

‘‘இந்த வெற்றியினால் மக்களுக்கு என்ன பலன் சொல்லுங்கள்? சீன சக்கரவர்த்தியும், யவன மன்னரும் தங்களுக்கு உதவினால் கைமாறாக என்ன செய்வதாக சோழ மன்னர் தலைமையிலான அணி உறுதியளித்ததோ, அதையேதான் இப்பொழுது பாண்டிய மன்னர் நிறைவேற்றப் போகிறார்...’’
‘‘அதாவது...’’

‘‘சந்தையைத் திறக்கப் போகிறார்...’’
‘‘இது முன்பே தெரிந்ததுதானே?’’
‘‘அறிந்ததுதான் ராணி...’’

‘‘பிறகு ஏன் பாண்டிய மன்னருக்கு உதவினாய்?’’
‘‘வயதைக் காரணம் காட்டி வேளிர்கள் துணையுடன் இரு அரசர்கள் யுத்தத்தைத் தொடுக்கும்போது தன்னந்தனியாக நிற்கும் பாண்டியர்களுக்கு உதவ வேண்டியது கட்டாயமாயிற்று...’’
‘‘அதாவது..?’’

‘‘ஆடு ஓநாயாக மாறுவதும், ஓநாய் ஆடாக மாறுவதும் அந்தந்த சூழலைப் பொறுத்தது...’’
‘‘அப்படித்தானே இதுவும்...’’
‘‘எதுவும்?’’ 

‘‘சந்தையைத் திறப்பது. இது பரிவர்த்தனைக்கு நல்லதுதானே?’’
‘‘வணிகர்களுக்கு நல்லது என்று சொல்லுங்கள்...’’ இளமாறனின் குரல் சீற்றத்துடன் வெளிப்பட்டது. ‘‘சாதாரண மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் உயரப் போவதில்லை. மன்னரும், அமைச்சர் பிரதானிகளும், வணிகர்களும் மட்டுமே மேலும் மேலும் பயனடையப் போகிறார்கள்...’’
‘‘அப்படியானால் இதை எதிர்த்தும் போராடப் போகிறாயா?’’
‘‘ஆம் ராணி...’’

‘‘வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த உன்னிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை...’’
‘‘வேறு எதை எதிர்பார்த்தீர்கள்? மறுக்கவில்லை. காவிரிப்பூம்பட்டினத்து பெருவணிகரான மாநாய்க்கனின் தம்பி வம்சத்தைச் சேர்ந்தவன்தான் நான். அதனாலேயே வணிக ரத்தம் என்னுள்ளும் ஓடும் என்று கருதுகிறீர்களா..? இல்லை ராணி. மாநாய்க்கனின் மகளான, என் அன்னைக்கு சமமான கண்ணகியின் குருதியே என்னுள்ளும் பாய்கிறது. அதனாலேயே சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறேன்...’’ என்றபடி எழுந்தான்.

‘‘எங்கு செல்கிறாய்?’’
‘‘மக்களைத் திரட்டிப் போராட...’’
‘‘உனக்கு யார் உதவப் போகிறார்கள்?’’
‘‘பங்காளிகளுக்குள் நடந்த யுத்தத்துக்காக தங்கள் உயிரைக் கொடுத்த அப்பாவிகளின் வாரிசுகள்...’’
‘‘என்ன சொல்கிறாய்..?’’

‘‘குருக்ஷேத்திரப் போரில் கலந்து கொண்ட பாண்டிய வீரர்களின் வம்சாவளியினர்...’’
திரும்பிப் பார்க்காமல் அடர்ந்த தோப்புக்குள் இளமாறன் நுழைந்தான். அதன் மத்திய பகுதியில் ஒரு கூடாரம் முளைத்திருந்தது. அதன் மீது முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஆட்டின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி பறந்து கொண்டிருந்தது...

‘‘சாப விமோசனம் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்...’’ நீருக்கடியில் அலாவுதீன் தழுதழுத்தான்.மகேஷ் எதுவும் பேசவில்லை. சூனியக்கார பாட்டியை ஒரு கையால் பிடித்த படியே மறுகையால் தன் மார்புக் கவசத்தைப் பிளந்தான். கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த முத்து மாலையை எடுத்து இமைக்கும் நேரத்தில் பாட்டியின் கழுத்தில் அணிவித்தான்.
அந்த மாலையின் நடுவில் இருந்த சிவப்புக்கல் சரியாக சூனியக்கார பாட்டியின் மீது பட்டதும் -அவள் ராஜகுமாரியாக மாறினாள்.
அடுத்த விநாடி, மூவரும் மந்திரவாதியின் முன்னால் நின்றார்கள்.

‘‘தாத்தா நான் ஜெயிச்சுட்டேன்...’’
‘‘என்னடா சொல்ற?’’
‘‘இதோ ராஜகுமாரியை மீட்டுட்டேன்...’’


‘‘இல்ல... இவ சூனியக்காரக் கிழவி...’’ கர்ஜித்த மந்திரவாதி கண்களை மூடி மந்திரங்களை உச்சரித்தார். ஆனாலும் ராஜகுமாரியின் உருவம் மாறவில்லை.
‘‘இனிமே உங்க இஷ்டத்துக்கு ஆளை மாத்த முடியாது தாத்தா... சகுனியோட தாயத்தை எப்படி வெல்லணும்னு விக்கிரமாதித்த மகாராஜா எனக்கு புரிய வைச்சுட்டார்...’’
‘‘எப்படி மகேஷ்..?’’ அலாவு தீன் பரபரத்தான்.

‘‘சிம்பிள். எது நடக்குதோ, உண்மைல அது நடக்கலை. வேற ஒண்ணு சைலன்ட்டா நடக்கறதை மறைக்கவே இது நடக்குது...’’‘‘அதாவது..?’’‘‘கண் முன்னாடியே ராஜகுமாரி ஜெயில்ல இருந்ததை நாம அறியாம இருக்க ஹாரி பார்ட்டர், ஸ்பைடர் மேன், அது, இதுன்னு தாத்தா இஷ்டத்துக்கு நம்மை அலைய விட்டிருக்கார்...’’‘‘இதை எப்படிக் கண்டுபிடிச்ச?’’

‘‘முழங்கை அளவுக்கு கொம்பு இருக்கிற ஆட்டை எப்ப கண்ணாடிக் கூண்டுக்குள்ள விக்கிரமாதித்த மகாராஜா காட்டினாரோ அப்ப...’’
சொல்லி முடித்த மகேஷ், திரும்பினான்.

மந்திரவாதியைக் காணவில்லை!
‘‘மை காட்...’’
‘‘என்ன விஷயம்?’’ அலாவு தீன் கேட்டான்
‘‘தாத்தா எங்க?’’

யாரோ முதுகில் அடித்தார்கள். அலறி அடித்து எழுந்தான்.
‘‘எக்சாமுக்கு படிக்காம என்ன தூக்கம்?’’ அம்மா காதைப் பிடித்துத் திருகினாள்.
‘சே... எல்லாம் கனவு...’ சலித்தபடி முகத்தைத் கழுவிக் கொண்டு புத்தகத்தைத் திறந்தான்.
அதனுள்ளே -

ஹாரி பார்ட்டரும், ஸ்பைடர் மேனும், எதைப் படித்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என கற்றுத் தர மந்திரவாதி தாத்தா வின் உருவில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தார்கள்.
‘‘இங்கதான் இருக்கீங்களா? உங்களை எப்படி ஜெயிக்கணும்னு எனக்குத் தெரியும்...’’ மகேஷ் விசிலடித்தான்.  ‘‘இடையனே, எங்கு செல்கிறாய்?’’ கிருஷ்ணரை வழிமறைத்தபடி சார்வாகனர் கேட்டார்.

‘‘தர்மத்தை விளக்க...’’‘‘இன அழிப்புக்கு என்று தெளிவாகச் சொல்...’’ தொடையைத் தட்டியபடி சார்வாகனர் கர்ஜித்தார். ‘‘காலத்தின் முன் தர்மம், அதர்மம் என்று எதுவுமில்லை. இந்த உண்மையை மக்கள் உணரக் கூடாது என்றுதான் நாடகமாடுகிறாய். உன்னை நீயே அவதார புருஷன் என்று அறிவிக்கிறாய்...’’
‘‘சார்வாகனரே...’’

‘‘இரையாதே. உன்னை நம்புபவர்களை உன்னால் ஒருபோதும் காக்க முடியாது. துவாரகை உன் கண்முன்னே அழியப் போகிறது... பாண்டவர்கள் நீ பார்க்கும்போதே துண்டு துண்டாக சிதறப் போகிறார்கள்...’’‘‘என்ன ஆரூடமா...’’‘‘இல்லை. உண்மை...’’‘‘எது உண்மை...’’‘‘சகுனியும் நீயும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை...’’ ‘‘...’’

‘‘என்ன விழிக்கிறாய்? நீங்கள் இருவரும்தான் ஓநாயும் ஆடுமாக சமயத்துக்குத் தகுந்தபடி மாறி மாறி காட்சியளிக்கிறீர்கள். பாண்டவர்களின் தாய் மாமன் நீ. கௌரவர்களின் தாய் மாமன் அவன். ஆனால், இருவருமே தாய்க்கு சமமானவர்கள் அல்ல. உங்கள் இருவரின் நோக்கமும் ஒன்றே ஒன்றுதான். அது, அரசாட்சி.

பேரரசன் என்ற அங்கீகாரம். இதற்காகத்தான் தாயத்தை உருட்டுகிறீர்கள். உருட்டுவது சகுனி. உருள்வது நீ. வெட்டுப்படுவது மக்கள். இதற்கு நீங்கள் சூட்டியிருக்கும் பெயர் கர்மா. உங்களது சுயரூபம் மக்களுக்குத்
தெரியும் வரை உங்கள் நாடகம் தொடரும். தாயம் உருளும்...’’

‘‘நீங்க ஏன் டி.வி.யில பாடக் கூடாது..?’’
‘‘அவ்வளவு நல்லா பாடுறேனா..?’’
‘‘டி.வி.ன்னா ஆஃப் பண்ணிடலாமே... அதான் சொன்னேன்!’’

‘‘நீங்க ஏன் இந்த வருஷம் கச்சேரி பண்ணலை..?’’
‘‘எனக்கு வாயில வாஸ்து சரியில்லை... அதான்!’’

‘‘அந்த பாடகர் வாயைத் திறந்தாலே கைதட்ட ஆரம்பிச்சிடுவாங்க...’’
‘‘அதுக்காக, அவர் கொட்டாவி விட்டா கூட கைதட்டறது ரொம்ப ஓவர்!’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

(முற்றும்)

கே.என்.சிவராமன்