நாடகம்



ஆனந்தன் ரொம்பவும் உயர்ந்த ரசனைக்காரன். அவன் படிக்கிற இலக்கியப் புத்தகங்களின் தலைப்புகளைக்கூட அவன் மனைவியால் புரிந்துகொள்ள முடியாது. கலாபூர்வமான, விருது பெற்ற திரைப்படங்களைத்தான் பார்ப்பான். டி.வியில் செய்தி, விளையாட்டு தவிர வேறெதுவும் ஓடாது.

அன்று அவன் மனைவியின் அம்மா, அப்பா, அண்ணன் என எல்லோரும் வந்திருந்தார்கள். நகரில் பிரபல நடிகரின் காமெடி நாடகம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. எல்லோரும் அதற்கு போகலாம் என்று முடிவெடுத்தார்கள்.

‘‘ச்சே... அதெல்லாம் ஒரு நாடகமா... வெறும் துணுக்குத் தோரணம்! என்னால அங்கயெல்லாம் அஞ்சு நிமிஷம் உக்கார முடியாது!’’ என வர மறுத்துவிட்டான் ஆனந்தன். எல்லோரும் கிளம்பிப் போனபின் ஆனந்தனின் செல்போன் அலறியது.

ஆபீஸ் மேனேஜர் பேசினார்...‘‘நண்பரோட பார்க்கலாம்னு காமெடி நாடகத்துக்கு ரெண்டு டிக்கெட் புக் பண்ணியிருந்தேன். திடீர்னு அவரால வர முடியாம போயிடுச்சி. கம்பெனியா நீ வர்றியா...’’‘‘என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க... நகைச்சுவைன்னா எனக்கு உயிர். உடனே வர்றேன்!’’ என்றான் ஆனந்தன். பதவி உயர்வு அவன் கண் முன்னே வந்து சென்றது.

சுபாகர்