ஒப்பீடு



‘‘ஏண்டா முகிலா... உன் க்ளாஸ்மேட்தானே அந்த ரவி. அவன் மட்டும் எப்பவும் க்ளாஸ் ஃபர்ஸ்ட் வர்றான். எல்லா பாடத்துலயும் 95 மார்க்குக்கு மேலதான் வாங்கறான். நீ அவனை மாதிரி வரணும்னு ஒரு நாளாவது நினைக்கிறியா? உன்னை மாதிரியா அவன் எந்நேரமும் பால் விளையாடிக்கிட்டிருக்கான்!’’ - மகனிடம் இரைந்தாள் மாதவி.கையிலிருந்த பந்தை தூக்கியெறிந்த முகிலன் பேசத் தொடங்கினான்...

‘‘ஏம்மா... ரவியோட அம்மா தினமும் ஸ்கூலுக்கு வந்து, மதியம் சுடச்சுட சாப்பாடு ஊட்டி விடறாங்க. காலையிலயும் சாயந்திரமும் ஸ்கூட்டியிலே கூட்டிவந்து விட்டு அழைச்சிட்டுப் போறாங்க. வீட்டுல பாடம் சொல்லித் தர்றாங்க. அவங்க படிச்சிட்டு வேலைக்குப் போறதில்ல. ஆனா, நீங்க வேலைக்குப் போறீங்க... நான் ஸ்கூல் வேன்ல போறேன்.

ஆறிப்போன சாதமும், பூட்டின கதவும்தான் எனக்கு. உங்களை நான் எப்போவாவது ரவியோட அம்மா கூட கம்பேர் பண்ணியிருக்கேனா... நீங்க ஏன் என்னை ரவி கூட கம்பேர் பண்றீங்க..!’’பன்னிரெண்டு வயதுப் பையன் கேட்ட அந்தக் கேள்வியில் மாதவி அதிர்ந்து போனாள். உண்மைதானே... ஒப்பீடு என்பது எந்த ரூபத்தில் இருந்தாலும் வலிக்கத்தானே செய்யும்!றீ

ஜே.செல்லம் ஜெரினா