விஷாலுடன் செம லவ்!



New Talk ஸ்ருதி

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் மெஸ்ஸியின் காலில் சிக்கிய பந்தும் உலகநாயகன் மகளின் கால்ஷீட்டும் பரபரப்பாகவே இருக்கிறது. ஐதராபாத், மும்பை என மாறி மாறி சுற்றுபவர் தற்போது மையம் கொண்டிருப்பது காரைக்குடியில். பாலீஷ் போட்ட பளிங்கு சிலை போல ‘பூஜை’ படப்பிடிப்பில் பளிச்சிடுகிறார். ‘‘தமிழ்நாட்டில் உங்களைப் பார்ப்பதே அரிதாகிடுச்சே?’’

‘‘என்ன பண்றதுங்க... என் வேலை அப்படி. கமிட்மென்ட்கள் பின்னாடி ஓடிக்கிட்டே இருக்கேன். ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தா பெயர், புகழ், சம்பாத்தியமெல்லாம் எப்படிக் கிடைக்கும். இப்போ ‘பூஜை’ ஷூட்டிங்கில் இருக்கேன். இது முடிஞ்ச கையோட, இந்திப் படத்துக்காக மும்பை போகணும். நல்ல பெயரோட என்னை பிஸியாவும் சந்தோஷமாவும் வச்சிருக்குற இந்த ஃபீல்டை நான் மதிக்கிறேன்.’’

‘‘ ‘பூஜை’யில் உங்களோட கேரக்டர்?’’‘‘டைட்டிலே மங்களகரமா இருக்குல்ல? ‘3’ படத்துக்கு பிறகு நான் தமிழ்ல நடிக்கிற படம். ஹரி சார் படம்னா ஒரு வேகம் இருக்கும்னு சொல்வாங்க. அவர் படங்களைப் பார்க்கும்போது அதை ஃபீல் பண்ணியிருக்கேன். இப்போ ஷூட்டிங்கிலும் அதே வேகத்தை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு.

இதில் எனக்கு ரொம்ப யூத்ஃபுல்லான, எனர்ஜெடிக்கான கேரக்டர். காலேஜ் படிக்கிற மாடர்ன் கேரக்டர். படத்தைப் பற்றி இதுக்கு மேல சொன்னா ஹரி சார் அப்செட் ஆகிடுவார். விஷால் புரொடக்ஷனில் அவருக்கு ஜோடியா நடிக்கிறது சந்தோஷம்.’’ ‘‘காரைக்குடியில் ஷூட்டிங்னா, இது கிராமத்துக் கதையா?’’

‘‘அப்படின்னும் சொல்ல முடியாது. ஹரி படத்தில் ஒரு அழகான கிராமத்துக் குடும்பத்தைப் பார்க்க முடியும். ‘பூஜை’யிலும் அது இருக்கு. ரொம்ப நாளைக்குப் பிறகு நான் தமிழில் நடிக்கும் படம் ஸ்பெஷலா இருக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். அது ‘பூஜை’யாக அமைந்ததில் சந்தோஷம். பொதுவா கிராமம் சார்ந்த நகரம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

 ஷூட்டிங்குக்காக கடைசியா பொள்ளாச்சி போயிருந்தேன். அந்த லொகேஷன் இன்னமும் என் கண்ணிலேயே இருக்கு. இந்திப் பட ஷூட்டிங்குக்காக உத்ரகாண்ட்ல ஒரு மலைக் கிராமத்துக்குப் போயிருந்தபோதும் ரொம்ப அமைதியா ஃபீல் பண்ணினேன். சிட்டி வாழ்க்கையிலிருந்து விலகி இருக்கும் கிராமத்து அனுபவமே அலாதிதான். இப்போ காரைக்குடியில் இருக்கேன். வெரி நைஸ் எக்ஸ்பீரியன்ஸ்!’’

‘‘உங்க அப்பா பிறந்த பரமக்குடிக்கு பக்கத்து ஊர் காரைக்குடி. என்ன ஃபீல் பண்றீங்க?’’‘‘ஒரு வருஷத்துக்கு முன்னாடி பரமக்குடி ஏரியாவுக்கு வந்துட்டு போயிருக்கேன். இந்த மண், மனிதர்கள், அவர்கள் தரும் மரியாதை, பாசம் எல்லாம் என்னை உருக வைக்குது. முக்கியமா காரைக்குடியின் செட்டி நாடு ஸ்டைல் சாப்பாடு தூள். சிக்கன் கறி, மீன் வறுவல், குழிப் பணியாரம்னு தினமும் நாக்குக்கு ருசியா சாப்பிடுறேன்.

ம்... சிக்கன் உப்புக்கறியும் சூப்பரா இருக்கும்னு கேள்விப்பட்டேன். இங்கிருந்து போறதுக்குள்ள அதையும் டேஸ்ட் பண்ணிடணும். பரமக்குடிக்கு ஒரு எட்டு போய் வரணும்னு ஆசை இருக்கு. பட், நேரம் இருக்குமான்னு தெரியலை.’’ ‘‘ ‘பூஜை’ போட்டோ ஷூட்டில் கிளாமர் ஹெவியா இருந்ததே..?’’

‘‘ஓஹோ! கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் நான் பண்றேன். டைரக்டர் சொல்றதை செய்யுறதுதானே ஆர்ட்டிஸ்ட்டோட வேலை? அப்புறம், ‘இந்தப் படத்தில் நீங்க பாடுவீங்களா’ன்னு நிறைய பேர் கேட்கிறாங்க. ஹரி என்ன ஐடியா வச்சிருக்காருன்னு தெரியல. அவர்தான் முடிவு பண்ணனும். பாடச் சொன்னா
சந்தோஷம்.’’

‘‘விஷாலோட செம லவ் இருக்காமே?’’ ‘‘படத்தில்தானே? ஆமா, இருக்கு. ரியல் ஃலைப்பில் லவ் இருக்கான்னு கேட்டா அதுக்கு எங்கிட்ட பதில் இல்லை. ‘பூஜை’ தவிர்த்து தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியா ஒரு படம், இந்தியில் ‘வெல்கம் பேக்’ படத்துக்குப் பிறகு ஜான் ஆப்ரகாமுடன் ஒரு படம். இது தவிர இன்னும் ரெண்டு இந்தி படங்கள்னு மொத்தமா இப்போ ஆறு படங்கள் கையில் இருக்கு. இவ்வளவு வேலை இருக்கும்போது காதலுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியுமா?’’

‘‘ஒரு ஆடியோ ஃபங்ஷனில்,

‘‘தசாவதாரம்’ படத்தில் அமெரிக்க கேரக்டரில் ஆங்கிலம் பேசி நடிக்கச் சொல்லிக் கொடுத்தது ஸ்ருதிதான்’ என்று கமல் உங்களை மெச்சினாரே?’’ ‘‘தேங்க்ஸ் டாடி.. ‘தசாவதாரம்’ சமயத்தில் நான் அமெரிக்காவில் ரெண்டு வருடங்கள் படிச்சிட்டு சென்னை திரும்பியிருந்தேன். அந்த நேரத்தில் இது பற்றி டிஸ்கஷன் வந்தப்போ, அமெரிக்கர்களின் மேனரிஸத்தை பார்த்த அனுபவத்தில் சின்னதா சில ஐடியாஸ் சொன்னேன்.

 அவ்வளவு தான். மற்றபடி, அவருக்கு தெரியாத விஷயங்களா? அந்த நிகழ்ச்சியில், ‘இளைஞர்களிடம் நான் கற்றுக்கொள்கிறேன்’ என்று அப்பா பேசினது, அவரது தன்னடக்கத்தையும் அறிவையும் காட்டுது. ஒரு ரசிகையா அவரை பிரமிப்பாகவும், மகளாக பெருமையாகவும் பார்க்கிறேன்!’’

 அமலன்