இந்தியாவின் கால்பந்து கனெக்க்ஷன்!



உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் சர்ச்சைகளும் சுவாரசியங்களும் ஒரு டீ ஸ்பூன் தூக்கலாகவே கலந்திருக்கும். இப்போது விறுவிறுப்பான இறுதிக் கட்டம். பல ஸ்டார்கள் ஜொலிக்காமல் போனது, சாம்பியன் அணிகளின் வெளியேற்றம், மேட்ச் ஃபிக்சிங் என பரபரப்புகளுக்கும் சோகங்களுக்கும் பஞ்சமில்லை.

 மைதானங்களில் விளையாட்டை விட அதிக கவனம் கேலரியில் எப்போதும் இருக்கும். ஸ்பெயின், ஈரான், சிலி, மெக்சிகோ அணிகளுக்கு ஆதரவளிக்க கலர்ஃபுல் கவர்ச்சி ஆடைகளில் ரசிகைகள் நிரம்புவார்கள். அந்த அணிகள் வெளியேறியதால் ரசிகர்களுக்கு இரட்டை சோகம்! 

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் எத்தனை கோல் போடுகிறார் என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக இருக்க, உலகக் கோப்பையை நடத்தும் ‘ஃபிபா’ அமைப்போ அவர் அணியும் உள்ளாடை மீது கவனமாக இருக்கிறது. கேமரூன் அணியுடனான லீக் ஆட்டத்தில், அவர் அணியும் ‘புளூ மேன்’ உள்ளாடைப் பட்டை வெளியில் தெரிந்தது பிரச்னையாகி உள்ளது. போட்டிக்கான ஸ்பான்சர் நிறுவனங்கள் பட்டியலில் அது இல்லை.

‘மற்ற நிறுவனங்களின் லோகோவை வெளியில் தெரியும்படி காட்டக்கூடாது’ என்பது விதி. இந்த விதியை மீறிவிட்டாரா நெய்மார் என்கிற விசாரணை தீவிரமாக நடக்கிறது. ஏற்கனவே, சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ‘லூபோ’ பிராண்ட் உள்ளாடைகளை பப்ளிசிட்டியாக ஐந்து முறை காட்டியவர் நெய்மார்.

அப்போதும் சர்ச்சை பெரிதானது. இதேபோல் சாம்பியன்ஸ் லீக்கில் விதியை மீறி உள்ளாடை நிறுவனப் பெயரை காட்டிய டென்மார்க் வீரர் நிக்லஸ் பென்ட்னருக்கு 74 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது ஃபிபா அமைப்பு. இப்போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நெய்மாருக்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ? தெரியவில்லை! 

இந்த உலகக் கோப்பையில் இந்தியா ஆடவில்லை என்றாலும், போட்டிகளில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருக்கிறது. போட்டி நடக்கும் பிரேசில் கால்பந்தில் மட்டுமல்ல, ‘அந்த’ விஷயத்திலும் ஸ்ட்ராங்தான்! உலகிலேயே காண்டம் அதிகம் இறக்குமதி செய்கிற நாடு அதுதான். அவர்களுக்கு சப்ளை செய்வது இந்தியா! கொச்சியைச் சேர்ந்த ஹெச்.எல்.எல். லைஃப்கேர் நிறுவனம், இந்தப் போட்டியை முன்னிட்டு பிரேசிலுக்கு ஒன்றரைக் கோடி காண்டம்களை ஏற்றுமதி செய்திருக்கிறது.

இதயத்துடிப்பை எகிற வைத்த பிரேசில்சிலி போட்டியின்போது சத்தமில்லாமல் கணினி உலகில் ஒரு சாதனையும் நடந்திருக்கிறது. ஒரு கோடியே 63 லட்சம் பேர் ட்விட்டர் இணையதளத்தில் இந்தப் போட்டியைப் பற்றி ட்வீட் செய்தார்களாம். இது ஒரு புதிய சாதனை என்கிறது ட்விட்டர் நிறுவனம்.

 வெற்றியை நிர்ணயித்த ‘பெனால்டி ஷூட்’டின்போது ஒரு நிமிடத்தில் 3 லட்சத்து 88 ஆயிரத்து 985 பேர் ட்வீட் செய்திருக்கின்றனர். இதுவும் புது சாதனை. மொத்தமாக உலகக் கோப்பை தொடங்கி லீக் ஆட்டங்கள் வரை 30 கோடி தகவல்கள் ட்வீட் செய்யப்பட்டுள்ளன!

உருகுவே அணியின் முன்கள வீரர் சுவாரஸ், பந்தை கோல் வளையத்தில் சரியாக அடிப்பதில் மட்டுமல்ல; எதிரணி வீரர்களைக் கடிப்பதிலும் ஸ்பெஷலிஸ்ட். இறுதி லீக் ஆட்டத்தில் இத்தாலி வீரர் சியல்லினியின் தோள்பட்டையில் கடித்து விட்டார்.

இதற்காக இவருக்கு 4 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. சுவாரஸ் கடிக்கவே இல்லை என அவருக்காக உருகுவே தேசமே வாதாட, ‘கடித்ததற்காக சியல்லினி மற்றும் அனைத்து கால்பந்து குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என இப்போது உருகியிருக்கிறார் சுவாரஸ். 

எல்லோரும் விளையாடி கால் இறுதிக்குள் நுழைந்தால், நெதர்லாந்து ‘நடித்து’ நுழைந்து விட்டது. மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியின்போது, ஆட்டம் முடியும் தருவாயில் மெக்சிகோ கோல் கம்பத்தின் அருகே அந்த அணி வீரர்கள் நெதர்லாந்தின் முன்கள வீரர் ராபனை தடுத்தனர். உடனே அவர் ஒரு டைவ் அடித்து கீழே விழுந்தார்.

மெக்சிகோ வீரர் ரபேல் மார்க்யூஸ் தள்ளியதால் ராபன் விழுந்ததாக நினைத்து நடுவர் பெனால்டி தர, அதுவே மெக்சிகோவின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது. இதே போட்டியில் இதற்குமுன் இரண்டு முறை இப்படி விழுந்து நடித்தார் ராபன். அப்போதெல்லாம் உஷாராக இருந்த நடுவர், மூன்றாவது முறை ஏமாந்து விட்டார். ‘‘அப்படி டைவ் அடித்திருக்கக் கூடாதுதான்’’ என இப்போது வருத்தம் தெரிவிக்கிறார் ராபன்.  

உலகக் கோப்பையின்போது வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. ‘போட்டிக்குத் தயாராகும் நாட்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளக்கூடாது’ என ரஷ்யா, போஸ்னியா, சிலி, மெக்சிகோ நாட்டு கோச்கள் கட்டுப்பாடு விதித்தனர். களைப்பாகி விடுவார்கள் என்பதே காரணம். இந்த அணிகள் எதுவுமே கால் இறுதிச் சுற்றுக்கு வரவில்லை. இதை அனுமதித்த பிரேசில், ஜெர்மனி, நெதர்லாந்து, கோஸ்டா ரிகா அணிகள் முன்னேறின. எனவே ‘வெற்றிக்கு செக்ஸும் ஒரு காரணம்’ என சொல்கிறார்கள் இந்த கோச்கள்.

போட்டிகள் முடிவதற்கு முன்பே கேமரூன் அணி வீரர்கள் ‘மேட்ச் ஃபிக்சிங்’ குற்றச்சாட்டில் சிக்கிவிட்டனர். இதற்கு தூபம் போட்டவர், சிங்கப்பூரைச் சேர்ந்த சூதாட்ட புக்கி வில்சன் ராஜ்பெருமாள். அவர் ஒரு ஜெர்மனி பத்திரிகையாளரிடம், ‘ஏழு அழுகிய ஆப்பிள்கள்’ கேமரூன் அணியில் இருப்பதாகச் சொன்னாராம். அவர் சொன்னதைப் போல கேமரூன் அணி தான் ஆடிய மூன்று ஆட்டங்களிலும் தோற்றது.

குறிப்பாக குரோஷியா அணியிடம் 40 என்கிற கோல் கணக்கில் தோற்றதோடு, கேமரூன் அணி வீரர் அலெக்ஸ் சாங், ‘ரெட் கார்டு’ வாங்கி வெளியேறினார். இதையெல்லாம் வில்சன் முன்பே கணித்துச் சொன்னதாக ஜெர்மன் பத்திரிகையில் செய்தி வந்தது. ஆனால், ‘‘இதற்கு எந்த ஆதாரமும் இல்லை’’ என இப்போது ரிவர்ஸ் கியர் எடுக்கிறார் வில்சன்.
 
 பேராச்சி கண்ணன்