பாடல் வெளியீட்டு விழாவுக்கு உலகநாயகன் வருகை தந்து ஆத்மார்த்தமாக வாழ்த்திய மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கிறது ‘வாலிப ராஜா’ யூனிட். இந்த சூட்டோடு ஹீரோ சேது, ஹீரோயின்கள் விசாகா சிங், நுஸ்ரத், இயக்குனர் சாய் கோகுல் ராம்நாத் நால்வரையும் ஓரிடத்தில் ஒன்றிணைத்தோம்... ‘‘படத்தின் கேப்டன் என்கிற முறையில் கடலைக் கச்சேரியை நீங்களே கொடி அசைத்து வைங்க’’ என ஹீரோ, ஹீரோயின்கள் டைரக்டரிடம் கோரஸ் குரல் கொடுக்க... ‘‘ஜாலியா ஏரியாவுக்கு போறதுக்கு முன்னாடி படத்தோட கதையை சொல்லிடுறேன்’’ என கோகுல் சீரியஸ் காட்ட... ‘மறுபடியும் கதையா..’ என காதைப் பொத்தினார்கள் விசாகாவும் நுஸ்ரத்தும்.
‘‘டிசைனிங் ஆர்வத்தில் சுத்திக்கிட்டு இருக்கிற ஹீரோ சேது, லவ் ஏரியாவில் ரெண்டு பொண்ணுங்களிடம் சிக்கிக்கிட்டு ‘காதல்’ பரத் மாதிரி தலையை பிச்சிக்கிறார். குழப்பத்துக்கு தீர்வு காண மனநல மருத்துவர் வாலிப ராஜாவை சந்திக்கிறார். அவர்தான் சந்தானம். கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒரு நாளைக்கு ஒரு பேஷன்ட்டுக்கு மேல பார்க்க மாட்டார்ங்கறது தான் வாலிப ராஜாவோட ஸ்பெஷல். சேது பிரச்னையில் சந்தானம் தலையிட... டேக் ஆஃப் ஆகும் கதையின் கலகலப்பு பக்கங்களின் சுவாரஸ்யத் தொகுப்புதான் மொத்தப் படமும். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தைத் தொடர்ந்து அதே டீம் ஒண்ணு சேர்ந்து பின்னியிருக்கோம்’’ என கோகுல் முடிக்க, ‘‘இந்த ரெண்டு லட்டில் எந்த லட்டு பெஸ்ட்?’’ என சேதுவை வம்பில் இழுத்தோம்.
‘‘இன்னும் எதையுமே டேஸ்ட் பண்ணலீங்க...’’ என ஹீரோயின்களைப் பார்த்தபடி சேது சிரிக்க, ‘‘ஹலோ... கதைப்படி நடிப்பில் யார் பெஸ்ட்னு கேட்டா, நீங்க டேஸ்ட் பற்றி சொல்லிக்கிட்டு இருக்கீங்க?’’ என சேதுவின் காதை விசாகா செல்லமாகத் திருகுகிறார். ‘‘கதைப்படி எனக்கு வீட்டில் பார்த்த பொண்ணுதான் விசாகா. ஆனா, நான் அலையிறது நுஸ்ரத் பின்னாடி. அவங்ககிட்ட காதலை உண்மையான ஃபீலிங்கோடதான் சொல்லுவேன். விசாகாவை கண்டுக்கவே மாட்டேன். ஆனாலும், அவர் இல்லாத நேரத்தில் அவரை மிஸ் பண்றாப்ல இருக்கும். ஆக நடிப்பில் ரெண்டு பேருமே பெஸ்ட்!’’
‘‘நீங்கதான் விசாகாவை இந்தப் படத்துக்கு சிபாரிசு பண்ணீங்களா?’’ என்றதும் பதறினார் சேது. ‘‘ஏங்க சினிமாவைப் பொறுத்தவரை இவங்க ரெண்டு பேருமே எனக்கு சீனியர். நான் இப்போதான் ரெண்டாவது படமே பண்றேன். நுஸ்ரத்தும், விசாகாவும் இந்தியில் ஆளுக்கு அரை டஜன் படங்களில் நடிச்சிட்டாங்க. அப்படி இருக்கும்போது விசாகாவுக்கு நான் எப்படி சிபாரிசு பண்ண முடியும்?’’ என்று சேது பவ்யம் காட்ட, ‘‘கூடிய சீக்கிரம் இவரையும் இந்திக்கு கூட்டிட்டுப் போயிடுவோம்ல’’ என அவரை கூல் பண்ணினார் நுஸ்ரத். அதோடு, ‘‘டாக்டர் பரம்பரையிலிருந்து வந்த நீங்க, ஆக்டர் ஆன ஃபிளாஷ் பேக் சொல்ல முடியுமா?’’ என சேதுவைக் கேள்வி கேட்டு திடீர் ரிப்போர்ட்டர் ஆகிறார்.
‘‘லொள்ளு சபா டைமிலிருந்தே சந்தானம் எனக்கு பழக்கம். மெடிக்கல் காலேஜ் நிகழ்ச்சிக்காக அவரை சிறப்பு விருந்தினரா அழைச்சிட்டு வருவேன். ‘எனக்கும் சினிமாவில் நடிக்கிற ஆசை இருக்கு’ன்னு ஒருநாள் விளையாட்டுக்கு சொன்னதை மனசில் வச்சி, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். அவரை எல்லோருக்கும் காமெடியனாதான் பிடிக்கும். அதைத் தாண்டி அவருக்குள் மகா நடிகன் ஒளிஞ்சிருக்கான். கமல் சாருக்கு பிறகு எனக்குப் பிடித்த நடிகன் சந்தானம்தான். அப்புறம் சின்ன வயதிலேயே பல திறமைகள் கொண்டவர் என்கிற முறையில் சிம்புவைப் பிடிக்கும்!’’
‘‘கமல், சிம்பு ரசிகனா இருக்கீங்க... முத்தக் காட்சியில் நடிச்சிருக்கீங்களா?’’ என்றதும் ‘‘முத்த விஷயம் தவிர மத்த விஷயங்களில் அவங்களை ஃபாலோ பண்ணனும்னு நினைக்கிறேன்’’ என நல்ல பிள்ளையாய் நழுவிய சேதுவை ‘‘ம்ஹும்... இந்தப் பையன் இந்திக்கு செட் ஆகுற மாதிரி தெரியல’’ என விசாகாவும் நுஸ்ரத்தும் ஒருசேர கலாய்த்தார்கள்.
‘‘ஹலோ.. நானே வேண்டாம்னு சொன்னாலும் பவர் ஸ்டார் என்னை இந்திக்கு கூட்டிட்டுப் போயிடுவார். படத்தில் என்னோட லுக் வித்தியாசமா இருக்குன்னு சொல்லி, பாலிவுட்டில் அவருக்கு இருக்குற பவரை பயன்படுத்தி என்னை இந்திக்கு கூட்டிட்டுப் போறதா சொல்லியிருக்கார்’’ என காலரைத் தூக்கிவிட்ட சேதுவிடம், ‘‘படத்தில் சந்தானம் கேரக்டர் மாதிரி உங்க டாக்டர் தொழிலில் நீங்களும் ஒரு நாளைக்கு ஒரு பேஷன்ட்தான் பார்ப்பீங்களா?’’ என இயக்குனர் கோகுலும் தன் பங்குக்கு நக்கல் கேள்வியை போட்டார்.
‘‘இதோ இந்தப் பொண்ணுங்க மாதிரி அழகா இருந்தா ஒரு நாளைக்கு ஒரு பேஷன்ட்தான் பார்ப்பேன்’’ என்ற பதிலை எதிர்பார்க்காத ஹீரோயின்கள் சேதுவின் தோளைப் பிடித்து செல்லமாக உலுக்க, ‘‘நீங்க அழகான பொண்ணுங்கன்னு சொன்னேன். இப்படி ராட்சஸி மாதிரி நடந்துக்குறீங்களே?’’ என்ற சேதுவை மறுபடியும் அவர்கள் முறைக்க, ‘‘ஸாரி... ஸாரி... அழகான ராட்சசிகள்னு சொல்ல வந்தேன்’’ என்று அவர்களுடன் இணைந்து போஸ் கொடுக்கத் தொடங்குகிறார். ‘‘இவங்களைப் பகைச்சிக்கிட்டா, எங்களையெல்லாம் நீங்க தனியா போட்டோ எடுப்பீங்களா!’’ என்ற அவரின் மைண்ட் வாய்ஸ் நம் காதைக் கிழித்தது!
அமலன்
படங்கள்: புதூர் சரவணன்