மொக்கை கவிதை சொல்லும் கெக்கே பிக்கே சூரி!



‘‘பல போராட்டங்களைக் கடந்து பெறும் வெற்றியின் சுவையே தனிதான் சார். வெங்கட் பிரபுவிடம் ‘மங்காத்தா’ படம் வரை வொர்க் பண்ணிட்டு தனியா முயற்சி பண்ணி கிடைத்த வாய்ப்புதான் ‘நளனும் நந்தினியும்’. பெரிய ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இல்லைன்னாலும், கதையும் அதைச் சொல்லியிருக்கும் விதமும் எந்தப் பெரிய படத்துக்கும் குறைச்சல் இல்லை’’ என நம்பிக்கை பெருமூச்சு விடுகிறார் இயக்குனர் வெங்கடேசன்.

படத்தில் என்ன சொல்ல வர்றீங்க?
‘‘மெச்சூர்டு பெண்ணுக்கும் அமெச்சூர் பையனுக்குமான காதல், கல்யாணம், பிரிவு, பிரச்னைகள்தான் கதை. கல்யாணத்துக்குப் பிறகு கணவன்  மனைவிக்கிடையே புரிதல் என்ற ஒரே ஒரு சொத்து இருந்தால் போதும்... வாழ்க்கை பூந்தோட்டம்தான். இது ஏற்கனவே தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட கரு என்றாலும், இந்தக் காதலும், இது சொல்லப்பட்ட விதமும் ரொம்ப ஃபிரஷ்ஷா இருக்கும்.

ஐ.டி. ஃபீல்டில் வேலை செய்யும் மைக்கேல்தான் ஹீரோ. டீச்சராக வரும் நந்திதா ஹீரோயின். அழுத்தமான கதைக்குள்ள ஆடியன்ஸை செம ஜாலியா டிராவல் பண்ண வைக்கும் திரைக்கதை செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். நிறைவான காமெடியும் இருக்கு. ஹீரோவோட மாமாவா சூரி நடிச்சிருக்கார். மொக்கை கவிதை சொல்லி கடுப்பேத்துவதும், காமெடி பண்றதா நினைச்சிட்டு ஊர்க்காரர்களிடம் பல்பு வாங்குறதுமா படம் பார்க்கிறவங்க வயிற்றை பஞ்சர் பண்ணிடுவார் சூரி.’’
நந்திதா எப்படி?

‘அட்டகத்தி’, ‘எதிர்நீச்சல்’, ‘முண்டாசுப்பட்டி’ என்று நந்திதா நடிக்கிற படமெல்லாம் ஹிட் அடிக்குது. இன்றைய தேதியில் சராசரி பட்ஜெட் படங்களின் பிஸியான ஹீரோயினா மாறிட்டாங்க. வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து நடிக்கிறதே அவங்களோட ஸ்பெஷல். இதுவும் அந்தப் பட்டியலில் இருக்கும். ரொம்ப அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்காங்க.’’ குருநாதர் வெங்கட் பிரபு என்ன சொன்னார்?

‘‘படத்தில் அவரும் ஒரு கேரக்டர் பண்ணியிருக்கார். காமெடி, கலகலப்புன்னு ஒரு பக்கம் இருந்தாலும், சில சீன்களிலாவது எமோஷனை இழையோட வைக்கறதுதான் முழுமையான படமா இருக்கும்ங்கறது என் அபிப்ராயம். சமீபத்தில் வெங்கட் பிரபு சாருக்கு படத்தை போட்டுக் காட்டினோம். ‘இவ்வளவு எமோஷனா பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கல’ என்று வாழ்த்தையும் பாராட்டையும் அவர் ஒண்ணா கொட்டினப்போ கண்ணெல்லாம் நீர்கோர்த்து பூரிச்சிட்டேன்!’’

 அமலன்