கமிஷன்



‘‘அண்ணாச்சி! ஒவ்வொரு காய்கறி யிலும் ஒவ்வொரு ரூபாயைக் கூட்டி விலையைப் போட்டு சீட்டு எழுதித் தாங்க!’’  கறாராக கேட்டாள் பொன்னம்மாள். ‘இந்தக் காலத்தில் கமிஷன் அடிக்காத வேலைக்காரி ஏது’ என கடைத்தெருவில் எல்லோருமே அவள் கேட்டபடி சீட்டு கொடுத்து விடுவார்கள். பத்து வகை காய்கறிக்கும் கூடுதலாக எழுதப்பட்ட பத்து ரூபாயை தனியாக எடுத்து வைத்துக்கொண்டாள் பொன்னம்மாள். தான் வேலை செய்யும் வீட்டுக்கு காய்கறிப் பையுடன் வந்தவள், எஜமானி உமாவிடம் சீட்டுக் கணக்குப்படி மீதிப் பணத்தை கொடுத்தாள்.

சமையல் அறையில் காய்கறிகளை வைத்தாள். வெளியே வந்து சுற்று முற்றும் பார்த்துவிட்டு, ஹாலுக்கு இடப்புறமாக இருந்த அறைக்குச் சென்றாள். அங்கே உமாவின் மாமியார் பூரணி சோர்ந்து படுத்திருந்தாள்.‘‘பெரியம்மா... இந்தாங்க! இன்னைக்கு காய்கறி வாங்கினதுல கிடைச்ச கமிஷன். என்னம்மா செய்றது? மருமக கையிலே அதிகாரம் போயிடுச்சுன்னா, மாமியார் கை வெறும் கைதான்! உங்க கைச் செலவுக்கு பணம் வேணும்னுதான் என்னால ஆனதைச் செய்றேன்’’  பூரணி கையில் பத்து ரூபாயை திணித்துவிட்டுக் கிளம்பினாள் பொன்னம்மா... மனத்திருப்தியுடன்!

கு.அருணாசலம்