மூன்று நாட்களாகி விட்டது. கிருஷ்ணவேணி அந்த இடத்தை விட்டு நகரவில்லை. சாப்பாடு, தண்ணீர் எதுவுமில்லை. அழுது தீர்த்து விழிகள் வறண்டு விட்டன. ஒவ்வொரு உடல் வெளிவரும்போதும் பெருங்குரலெடுத்து அலறுகிற அவரை சமாதானப்படுத்த உறவுகள் திணறுகின்றன.
நொறுங்கிக் கிடக்கிற அந்தக் கட்டிடக் குவியலின் ஏதோவொரு இடுக்கில் சிதைந்து கிடக்கலாம் கிருஷ்ணவேணியின் காதல் கணவன் பங்காரு நாயுடுவின் உடல். சென்னைக்குப் பிழைக்கப்போன அப்பாவும் அம்மாவும் வாங்கிவரும் இனிப்புப் பொட்டலத்துக்காக காத்திருக்கும் 6 வயது அம்முவுக்கும், 4 வயது கிஷோருக்கும் என்ன பதில் சொல்வாரோ கிருஷ்ண வேணி.
லோகேஷுக்கு வயது 19. இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கிருந்து போன ஒரு ‘தமிழ்க்கார மேஸ்திரி’, ஐந்தாயிரம் முன்பணம் கொடுத்து அழைத்து வந்திருக்கிறார். சம்பளம் வாங்க வரிசையில் நின்றவரை புதைத்துக் கொண்டது கட்டிடம். லோகேஷின் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு ‘தம்புடு சூஸ்திவியா, தம்புடு சூஸ்திவியா’ என்று எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணன் ஜெய்ராம். அந்த கான்க்ரீட் குவியலுக்குள் துண்டு துண்டாகப் பெயர்ந்து கிடக்கிற ஏதோ ஒரு கரம் லோகேஷுடையதாக இருக்கலாம்.
கண்ணீரில் கரைந்திருக்கிறது மவுலிவாக்கம். கணவனைத் தொலைத்த மனைவி, மனைவியைத் தொலைத்த கணவன், அண்ணனைத் தொலைத்த தம்பி, அப்பாவைத் தொலைத்த மகன் என சரிந்து கிடக்கும் கட்டிடத்தின் இடுக்குகளை பார்த்தபடியே தவித்துக் கொண்டிருக்கும் அபலைகளின் துயரத்தை எந்த வார்த்தை கொண்டு எழுதுவது?வியர்வையைக் கொட்டி பூசியெழுப்பிய கட்டிடத்திற்குள்ளாகவே உதிரம் சிந்தி உலர்ந்துபோய் விட்டார்கள் அப்பாவித் தொழிலாளிகள்.
மவுலிவாக்கம் விபத்துக்குப் பிறகு கட்டுமானங்களின் உறுதித்தன்மை குறித்து விவாதிக்கிறார்கள். கட்டிட அனுமதிக்கான விதிமுறைகள் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், உழைப்பையும், உயிரையும் கொடுத்து ஒவ்வொரு கட்டிடத்தையும் எழுப்பும் தொழிலாளர்களின் அவல வாழ்க்கை விவாதிக்கப்படவில்லை. காரணம், கட்டுமானத் தொழிலாளிகள் குரலற்றவர்கள். அதிலும் புலம்பெயர் தொழிலாளிகளின் நிலை மாபெரும் மனிதப் பேரவலம்.
கடந்த 15 ஆண்டுகளில் உலகமயமாதல் கிராமங்களை நிராதரவாக்கி விட்டது. விவசாயம் உள்ளிட்ட அத்தனை கிராமியத் தொழில்களும் நசிந்து விட்டன. உள்ளூர் வாழ்க்கை பயனற்றுப் போனதால் ஜார்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிஷா, ஆந்திர மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து விட்டார்கள் மக்கள். அத்தனை பேருக்கும் வாழ்க்கை அளிப்பது கட்டுமானத் தொழில்தான்.
எதிர்த்துப் பேச மாட்டார்கள்; நேரம் பார்க்காமல் வேலை வாங்கலாம்; கொடுக்கும் கூலியை வாங்கிக் கொள்வார்கள்; கிடைத்த இடத்தில் முடங்கிக் கொள்வார்கள் என பல வசதிகள் இருப்பதால் இவர்களையே அதிகம் விரும்புகிறார்கள் கட்டுமான முதலாளிகள்.
‘‘கட்டிடத் தொழிலாளர்களை உயிருள்ள ஜீவன்களாகவே கட்டுமான நிறுவனங்கள் மதிப்பதில்லை. அவர்கள் வைக்கும் பெயர் ‘உருப்படி’. மவுலிவாக்கம் விபத்தில் இறந்துபோன உருப்படிகளின் விபரம் எதுவும் கட்டுமான நிறுவனத்திடமும் இல்லை. அரசிடமும் இல்லை. தமிழ்நாட்டில் சுமார் 12 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. சற்று பெரிய நிறுவனங்கள் பணி நடக்கும் இடத்துக்கு அருகிலேயே தகரங்களால் ஷெட் போட்டு இவர்களைத் தங்க வைக்கின்றன. பல நிறுவனங்கள் கட்டும் கட்டிடத்துக்குள்ளேயே தங்கச் சொல்கின்றன. சமையல், உறக்கம், கழிவறை எல்லாம் அதற்குள்ளாகத்தான்...
ஒரு கட்டிடத்துக்கு ‘அப்ரூவல்’ வாங்கும்போது, திட்ட மதிப்பில் 1% தொழிலா ளர் நலவரியாக அரசு வசூலிக்கிறது. 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிதி இருந்தும்கூட தொழிலாளிக்கு ஒற்றைப் பைசா செலவு செய்யப்படுவதில்லை. கட்டுமானத் தொழிலாளர் நலச் சட்டம்1996ன் படி இடம் பெயரும் தொழிலாளர்களை கட்டாயம் பதிவு செய்யவேண்டும். தரமான வாழ்விடம், முறையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் மெட்ரோ ரயில் போன்ற அரசு நிறுவனங்கள் கூட அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை’’ என்று குமுறுகிறார் தேசிய கட்டிடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத்தின் தலைவர் கீதா.
புலம்பெயர் தொழிலாளர்களை பணியிடத்தில் வதைப்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அவர்களை வைத்து காசும் பார்ப்பதும் நடக்கிறது. ‘‘ஓசூரில் ஒரு அரசியல் பிரமுகர் 600 புலம்பெயர் தொழிலாளிகளை வைத்திருக்கிறார். தேவைக்குத் தகுந்தவாறு தினமும் ஆட்களைப் பிரித்து அனுப்புவார். தொழிலாளர்களுக்கு மாதம் 3000 முதல் 4000 ரூபாய் சம்பளம். இதில் 10% அவருக்குக் கமிஷன். எந்த உடல்வலியும் இல்லாமல் அமர்ந்த இடத்திலிருந்தே மாதம் இரண்டரை லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார்.
செங்கல்லுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கூட தொழிலாளிக்கு தரப்படுவதில்லை. விபத்துக்குப் பிறகு ஆய்வு, சோதனை என்று அலைகிற அதிகாரிகள் இதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தொழிலாளர் நலத்துறை செயல்படுகிறதா இல்லையா? அத்துறையின் வேலைதான் என்ன? ஒரு கட்டிடச் சிதைவுக்குள் எத்தனை தொழிலாளி புதைந்து கிடக்கிறான் என்ற தகவலைக் கூட கண்டுபிடிக்க முடியாத ஒரு அவலச்சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’’ என்று வருந்துகிறார் மனித உரிமை ஆர்வலர் அ.மார்க்ஸ்.
இந்தியாவில் தமிழகத்தில்தான் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகம். சித்தாளுக்கு 400 முதல் 500 ரூபாய். பெரியாள் எனப்படும் ஆண் உதவியாளருக்கு 600. கொத்தனாருக்கு 750 ரூபாய். வேலையும் தினமும் கிடைக்கும். அதனால் தமிழகத்தை நாடி வருகிறார்கள். ‘‘புலம்பெயர் கட்டுமானத் தொழிலாளர்கள் நவீன கொத்தடிமை களாகவே நடத்தப்படுகிறார்கள். அனுமதியின்றி இருப்பிடத்தை விட்டு வெளியில் வர முடியாது.
அடிப்பது, காயப்படுத்துவதெல்லாம் சாதாரணமாக நடக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை. கட்டிடத்துக்குள்ளேயே தங்குவதால் கூடுதல் வசதி. இரவிலும் கூட வேலை வாங்குகிறார்கள். முன்பணம் வாங்கி விடுவதால் இந்தக் கொடுமையில் இருந்து விடுபடவும் முடியாது.
உழைப்பை மட்டுமின்றி உயிரையும் கொடுக்க வேண்டிய அவலம்’’ என்கிறார் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் முன்னாள் தலைவர் பொன்.குமார். கட்டிட உரிமையாளர்களின் லாப வெறிக்கும், விலைபோன அதிகாரிகளின் அலட்சியத்துக்கும் இரையாகிய 50க்கும் மேற்பட்ட அப்பாவித் தொழிலாளிகளின் ஆன்மாவுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். ஒரு கட்டிடச் சிதைவுக்குள் எத்தனை தொழிலாளி புதைந்து கிடக்கிறான் என்ற தகவலைக் கூட கண்டுபிடிக்க முடியாத ஒரு அவலச்சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
விலை குறைவுக்கு மயங்காதீர்கள்மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு ‘கட்டுமானக் குறைபாடே காரணம்’ என்கிறார் ‘ரியல் எஸ்டேட் டெவலப்பர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’வின் (CREDAI) தலைவர் டாக்டர் குமார். ‘‘11 மாடிக்குத் தகுந்த அடித்தளம் அமைக்கப்படாதது முக்கியக் காரணம். மேலும் தூண்களின் அளவும், இடைவெளியும் போதுமானதாக இல்லை. மண்ணைப் பரிசோதித்து அதற்குத் தகுந்தவாறு கட்டுமான வரைபடம் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்படி பல இடங்களில் தவறு நிகழ்ந்துள்ளது’’ என்கிற குமார், ‘‘இதுபோன்ற ‘அவசர’ பில்டர்கள் உருவாகக் காரணமே, மக்களின் அறியாமைதான்’’ என்கிறார்.
‘‘ஒரு சட்டை வாங்கவே நாலைந்து கடைகளுக்கு ஏறி இறங்குகிற மக்கள், வீடு வாங்கும்போது சாதாரணமாக ‘கமிட்’ ஆகி விடுகிறார்கள். ‘விலை குறைவு’ என்ற வார்த்தை மயக்கி விடுகிறது. இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அருகிலேயே நெடுநாள் அனுபவமுள்ள சில கட்டுமான நிறுவனங்கள் சதுர அடி 5700 ரூபாய்க்கு விற்கிறார்கள். இந்த நிறுவனம் 4900 ரூபாய்க்கு விற்றுள்ளது. கட்டி முடிப்பதற்குள்ளாக மொத்தமுள்ள 86 பிளாட்டுகளில் 72 பிளாட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன.
வீடு என்பது வாழ்நாள் முதலீட்டைக் கொட்டி வாங்கும் பெரும் சொத்து. பில்டரின் அனுபவம் என்ன? வேறெங்காவது வீடுகள் கட்டியிருக்கிறார்களா? அதன் தரம் எப்படி? அங்கெல்லாம் நல்ல பெயர் இருக்கிறதா? என்று ஆய்வுசெய்ய வேண்டும். நல்ல பெயருள்ள நிறுவனம் நிச்சயம் தவறு செய்யாது. விளம்பரத்தை மட்டுமே நம்பக்கூடாது.
விலைகுறைவு என்ற வார்த்தைக்கு மயங்கக் கூடாது. தொழில்நுட்ப விபரங்களை கேட்டு வாங்கி பரிசோதிக்க வேண்டும். தூண்களின் அளவு எவ்வளவு? சுவர் எவ்வளவு கனம்? காமன் ஏரியா எவ்வளவு? என்று விசாரிக்க வேண்டும். தெரிந்த பொறியாளரை அழைத்துச் சென்று வீட்டைக் காண்பிக்கலாம். கேட்கும் விபரங்களைத் தர மறுக்கும் பில்டரிடம் தயவுசெய்து வீடு வாங்காதீர்கள்’’ என்கிறார் குமார்.
வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்