சர்ச்சையில் ஜனாதிபதி புத்தகம்!



சச்சின் சலசலப்பு அடங்கியது... இனி பிரணாப் டர்ன்! யெஸ், அவரும் புத்தகம் வெளியிடுகிறார். அதுவும், ‘தி டிரமாட்டிக் டெகேட்’ என இந்திரா காந்தியின் எமர்ஜென்ஸி ஆட்சிக் காலத்தைப் பற்றி இன்றைய ஜனாதிபதி புத்தகம் எழுதினால் பற்றிக்கொள்ளாதா பரபரப்பு? பொதுவாக, புத்தகம் வெளியாகி அதன் கருத்துக்கள் கால்பந்தாடப்படுவதுதான் நம் கல்ச்சர். ஆனால் இங்கே... புத்தக வெளியீடே சர்ச்சையோ சர்ச்சை!

டிசம்பர் 11... நம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாள். அன்றுதான் இந்தப் புத்தகமும் வெளியாக இருக்கிறது. ஆனால், லோக்கல் புத்தகக் கடைகளில் கிடைக்காது. அமேசான் டாட் காம் தளத்தில் மட்டுமே பிரத்யேகமாக 21 நாட்களுக்கு நடக்கவிருக்கிறது இந்தப் புத்தக விற்பனை. அதன் பின்பே மற்ற தளங்களுக்கும் கடைகளுக்கும் வரும். இதுதான் நாடு முழுவதுமுள்ள புத்தக வியாபாரிகளை கடுப்பாக்கியிருக்கிறது.

இப்போதெல்லாம் மொபைல் முதல் முறுக்கு பாக்கெட் வரை அனைத்தும் ஆன்லைனில்தான் அறிமுகமாகின்றன. அதே ரூட்டில் போய் பணம் பண்ணலாம் என நினைத்திருக்கிறது இந்தப் புத்தகத்தை வெளியிடும் ரூபா பதிப்பகம். ஆனால், ‘‘இது யாரோ ஒரு எழுத்தாளரின் புத்தகம் அல்ல. இந்திய ஜனாதிபதி எழுதும் புத்தகம். பாமரனையும் சென்றடைய வேண்டிய ஒன்று. ஆன்லைன் ஸ்டோர்கள் இதை வைத்து விளம்பரம் தேட அனுமதிக்கக் கூடாது!’’ எனக் குற்றம் சாட்டுகிறார்கள் சில்லறை புத்தக விற்பனையாளர்கள்.

‘ஆன்லைன்தான் எங்கள் லைன் என்ற முடிவெடுத்தாலும் எதற்கு அமேசான்? இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல் எனப் பல ஆன்லைன் ஸ்டோர்கள் இருக்கும்போது, அமெரிக்க ‘அக்காமாலா’வான அமேசானிடம் ஏன் போக வேண்டும்?’ என்பதும் அவர்கள் எழுப்பும் முக்கியக் கேள்வி. இதற்காக, சில விற்பனையாளர்கள் இந்தப் புத்தகத்தையே புறக்கணிக்கலாமா என ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எமர்ஜென்ஸி காலத்தில் இந்திராவின் தளபதிகளில் முக்கியமானவராக இருந்த பிரணாப், தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளானவர். எதிர்க்கட்சிகள் ஏசி ஏசியே அவரை இந்திரா வின் நம்பிக்கைக்கு உரியவராக ஆக்கினார்கள். இந்திராவின் அரசில் நம்பர் 2வாக இருந்தவரால், இந்திரா மரணத்துக்குப் பின் ராஜீவை ஏற்க முடியவில்லை. ராஜீவிடம் முறைத்துக்கொண்டு தனிக்கட்சி நடத்தியவர், பின்னர் காங்கிரஸ் தொப்பி அணிந்தார்.

அவருக்கும் ஏற்கனவே ஐந்து புத்தகங்கள் வெளியிட்ட அனுபவம் இருக்கிறது. இந்திய ஜனாதிபதிகள் புத்தகம் வெளியிடுவதும் புதிதல்ல. ஆனால், இத்தனை சென்ஸிடிவ்வான மேட்டரை இத்தனை சென்ஸிட்டிவான சீட்டில் அமர்ந்தபடி ஒருவர் பேசுவது முதல் முறை. அதனால்தான் எதிர்பார்ப்பு எகிறுகிறது!

- நவநீதன்