குட்டிச்சுவர் சிந்தனைகள்



கொசுக்கடி மாதிரி, வண்டலூருல புலிகள் தப்பிப்பதும் அடிக்கடி நடக்க ஆரம்பிச்சிருக்கு. இப்படி தப்பிச்சு போகும் புலிகள ஈசியா பிடிப்பது எப்படி? அதுக்கு முதல்ல இப்படி புலிகள் தப்பிச்சு போகாம இருக்கச் செய்வது எப்படி?

* குடும்ப டாக்டர், குடும்ப வக்கீல், குடும்ப ஜோசியர் மாதிரி தமிழ் சினிமா நமக்கு சொல்லிக் கொடுத்ததுதான் குடும்பப் பாட்டு. ‘நாளை நமதே’ல ஆரம்பிச்சு, நாளைக்கு வர்ற படங்கள் வரைக்கும் குடும்பப் பாட்டு இல்லாத படங்களே இல்லை. அதனால, வண்டலூர் புலிகளுக்கும் குடும்பப் பாட்டு ஒண்ண ஹாரிஸ் ஜெயராஜ் மியூஸிக்ல போட்டுக் கொடுத்தா, வழிமாறிப் போய் தடுமாறி நிற்கும் புலிகளை, மத்த புலிகளை விட்டு குடும்பப் பாட்டுப் பாடச் சொல்லி, டக்குனு புடிச்சிடலாம்.

* புலிகளுக்கும் புலிகள் போடும் குட்டிகளுக்கும் ஜட்டி போட்டு விட்டு, ஜட்டிக்குள்ள ஒரு ஜி.பி.எஸ். மெஷினை போட்டும் விட்டுட்டா, புலிகள் எங்கு போனாலும், அது ஏதாவது மனுஷனை லபக்குறதுக்கு முன்னால, நாம புலிய கபக்குனு புடிச்சிடலாம்.

* புலிகளை மட்டும் ஒரு வாரம் தமிழக மீனவர்களோட மீன் பிடிக்க அனுப்புனா, இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்துட்டு, அதுக்கப்புறம் புலிகள் வண்டலூர் ஜூவை விட்டு வெளிய போகவே ரூம் போட்டு யோசிக்க ஆரம்பிச்சிடுங்க.

* புலிகளுக்கு நம்மளை மாதிரியே சீரியல் பார்க்க கத்துக் கொடுத்துட்டா, தங்களுக்குள்ளேயே கேரக்டர்களை திட்டிக்கிட்டு, அடுத்த நாள் என்னாகும்ங்கிற டென்ஷன்ல சீரியல் பார்க்க வேண்டி எங்கேயும் போகாதுங்க!

* புலிகள் பெரும்பாலும் இரவு நேரத்துலதான் தப்பிக்குதுங்க. அதனால, சாயந்திரம் 5 மணி ஆனாவே, புலிகளுக்கு மிஷ்கின் மாதிரி கூலிங் கிளாஸ் மாட்டி விட்டுட்டா, நைட்டு நேரத்துல லைட்டு இருந்தாலும் வெளிச்சம் இல்லைன்னு கண் ஆபரேஷன் பண்ணுன ஆயா மாதிரி, மூலையில குத்த வச்சு உட்கார்ந்துக்கும்.

* புலிகளுக்கும் மனுஷப் பயலுங்க மாதிரி புகைப்பழக்கம், பாக்குப் போடுற பழக்கம்னு கத்துக் கொடுத்திட்டா, பாக்குப் போட்டு புளிச்னு துப்பியிருக்கிற இடத்தை வச்சு பளிச்சுன்னும், பங்க் கடையில புகைய விட்டு பூமிக்கு பகை ஏற்படுத்தும்போது, பொட்டிக்கடையிலயே கட்டிப் போட்டும் புடிச்சிடலாம். இதெல்லாத்தையும் விட, புலிகளை எல்லாம் எலிகள்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டோம்னா, புலிகளே தப்பிச்சுப் போனாலும், ‘எலிகள்தான் தப்பிச்சுப் போச்சு’ன்னு சொல்லிட்டு அசால்ட்டா அடுத்த வேலைய பார்க்கலாம்.

அன்றும் இன்றும்...


அன்று: ‘மகாத்மா’ காந்தி, ‘மாமா’ நேரு, ‘அண்ணல்’ அம்பேத்கர், ‘கர்மவீரர்’ காமராஜர், ‘அறிஞர்’ அண்ணா, ‘தந்தை’ பெரியார்
இன்று: ‘வெட்டு’ முருகேஷ், ‘குரங்கு’ செந்தில், ‘ஸ்நேக்’ பாபு, ‘முட்டை’ ரவி, ‘ரவுசு’ ராஜா, ‘டைகர்’ குமார்
அன்று: ‘டிரிங்... டிரிங்...’ - ‘‘ஏய், நான்தான் போன எடுப்பேன்...’’ ‘‘இல்ல, நான்தான் போன எடுப்பேன்!’’
இன்று: சாரி மச்சி, மொபைலை சைலன்ட்ல போட்டிருந்தேன்... அதான் எடுக்க முடியல!.
அன்று: வெள்ளைப்புறா ஒன்று... போனது கையில் வராமலே, முதலெழுத்து தாய்மொழியில், தலையெழுத்து யார் மொழியில், என் வாழ்க்கை வான்
வெளியில்...
இன்று: கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? இல்ல, ஓடிப் போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா? தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா? இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?
அன்று: சமையல் ஆயிடுச்சுடா, சாப்பிட்டுட்டு சினிமாவுக்குப் போயேன்!
இன்று: சீரியல் முடியட்டும்டா, சமைச்சு தர்றேன்!
அன்று: பொண்டாட்டி தொல்லை தாங்காம அவரு சாமியார் ஆகிட்டாரு!
இன்று: அந்த சாமியாரால, இவரு பொண்டாட்டிக்கு ரொம்பத் தொல்லை யாம்!
அன்று: 50 பந்து இருக்கு, கேவலம் 21 ரன் இந்தியாவால அடிக்க முடியலப்பா, இதுக்கும் அசாருதீன் நாட் அவுட்டு!
இன்று: 18 பாலுக்கு 52 ரன் வேணும், 2 பந்து மிச்சம் இருக்கிறப்பவே தோனி மேட்ச முடிச்சாச்சுப்பா!
அன்று: தியாகராஜ பாகவதர் படமெல்லாம் 3 தீபாவளிக்கு ஓடுச்சாம்ப்பா
இன்று: தீபாவளிக்கு உங்காளு படம் வர்றதே சந்தேகமாமே?
அன்று: நம்பியாரு கையிலிருந்து புடவைய அடிச்சு வாங்கி, கதாநாயகி மேல போர்த்துவாரு எம்.ஜி.ஆரு!
இன்று: கதாநாயகி தாவணியப் புடுங்கி, தலையில கட்டிக்கிட்டு, ‘உப்புக்
கருவாடு ஊறவச்ச சோறு’ன்னு ஆடுறாரு ஹீரோ!
அன்று: பொண்ணு புடிச்சிருக்கான்னு ஊருக்கு போயி கடுதாசி போடுறோம்!
இன்று: பையன் போட்டோவ வாட்ஸப் பண்ணுங்க, பார்த்துட்டு சொல்றோம்!
அன்று: எங்கப்பாதான் தூள் டக்கர்!
இன்று: நீ என்ன பெரிய அப்பாடக்கரா?
அன்று: கரன்ட் எப்பங்க போகும்?
இன்று: கரன்ட் எப்பங்க வரும்?
அன்று: அவரு பையன் அமெரிக்காவுல இருக்காரு, இவரு இங்கயே இருக்காரு!
இன்று: அவரு பையன் அமெரிக்காவுல இருக்காரு, இவரு ஆதரவற்றோர் இல்லத்துல இருக்காரு!
அன்று: மேலத்தெரு காரை வீட்டு பெரியசாமி பேரன்தானே நீ?
இன்று: அந்த சி2ணி அபார்ட்மென்ட் பையன் கூட சேராதேன்னு எத்தனை தடவ சொல்லியிருக்கேன்!
அன்று: அவரு பணத்த தண்ணியா செலவு பண்ணுவாரு!
இன்று: மாசம் லாரித் தண்ணிக்காக எவ்வளவு பணம் செலவு பண்றோம்!
அன்று: அம்மா... தாயே, பழைய சோறு இருந்தா போடுங்கம்மா!
இன்று: மச்சி, உன் சார்ஜர் இருந்தா குடேன்!
அன்று: அந்த ஆபீஸ்ல அவருதான் முசுடு, முன்கோபி, லஞ்சம் வேற வாங்குவாரு!
இன்று: அந்த ஆபீஸ்லயே அவரு மட்டும்தான் அமைதி, பக்தி, லஞ்சம் கூட வாங்கமாட்டாரு!

மாசம் ரெண்டு வாரம் வீடு, மிச்ச ரெண்டு வாரம் ஏதாவது நாடுன்னு சுத்தறத பார்த்தா, ஃபாரின்ல படமெடுக்கும் டைரக்டராக வந்திருப்பாரோன்னு தோணுது. ரசிக்க வைக்கிற, சிரிக்க வைக்கிற, சிந்திக்க வைக்கிற, தலையாட்ட வைக்கிற பேச்செல்லாம் பேசுறத பார்க்கிறப்ப, ஒரு கார்ப்பரேட் குருவாகவோ டி.வியில விவாத நிகழ்ச்சி நடத்துபவராகவோ வந்திருப்பாருன்னும் தோணுது. கங்கைய சுத்தமாக்கும் திட்டம், இந்தியாவை சுத்தமாக்கும் திட்டம்னு வரிசையா போடுறத பார்த்தா சோப்பு கம்பெனி, ஆசிட் கம்பெனி ஓனரா கூட இருக்கலாம்னு தோணுது. ஆனா பாருங்க, அவரை நாம பிரதமர் ஆக்கிட்டோம்!