கிரேஸ் பானு பி.இ!



எஞ்சினியரிங் படிக்கப் போகும் இந்தியாவின் முதல் திருநங்கை

ஒன்றல்ல, இரண்டல்ல...  எத்தனையோ தடைகள், சிக்கல்கள், போராட்டங்கள்... அனைத்தையும் தாண்டி கல்வியில் ஜெயித்திருக்கிறார் கிரேஸ் பானு. பி.இ படிக்கப் போகும் இந்தியாவின் முதல் திருநங்கை. டிப்ளமோவில் 94 சதவீத மார்க் பெற்று ‘அப்ளாஸ்’ வாங்கியவர், இப்போது அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மூலம் அரக்கோணம் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ‘எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்’ பிரிவில் கால் பதித்திருக்கிறார். சமூகம், குடும்பம் என அனைத்தும் புறக்கணித்துவிட, தனி ஒரு மனுஷியாக நின்று போராடி வென்ற கதை இவருடையது!

‘‘எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி. அப்பாவுக்கு வெளிநாட்டுல வேலை. அம்மா, அண்ணன், தம்பிகள்னு நாங்க நாலு பேர். சின்ன வயசுல இருந்தே எனக்கு படிப்பு மேல ரொம்ப ஆர்வம் சார்... நல்லா படிச்சு டாக்டரா வரணும்னு ஆசைப்பட்டேன். பத்தாம் வகுப்புல 409 மார்க் எடுத்து முதல் குரூப்ல சேர்ந்தேன். ஆனா, அப்பதான் என் பாலினம் பற்றிய சிக்கல் வந்து பள்ளியிலிருந்தே வெளியேத்திட்டாங்க. என் கனவெல்லாம் சிதைஞ்சு போச்சு. மனசு உடைஞ்சி அழுதேன்’’  சொல்லும்போதே கிரேஸின் குரல் உடைகிறது. 

‘‘எனக்கு என்ன நடந்துச்சுன்னு நான் புரிஞ்சுக்கறதுக்குள்ள எல்லோரும் என்னை ஒதுக்க ஆரம்பிச்சாங்க. முதல்ல, ஸ்கூல் உள்ள சேர்க்க மாட்டேன்னாங்க. தினமும் ஸ்கூலுக்குப் போய் மரத்தடியில உட்கார்ந்து படிச்சுட்டு வருவேன். வீட்டுலயும் வெறுக்க ஆரம்பிச்ச பிறகு வாழ்க்கையே நரகமாச்சு.

எனக்குள்ள நிகழ்ந்த மாற்றங்கள் பற்றி கொஞ்சம் கொஞ்சமாதான் புரிஞ்சுக்கிட்டேன். என் தவறா இல்லாத ஒரு விஷயத்துக்காக ஏன் எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கறாங்கன்னு கோபம் வந்தது. என் மேல அன்பு காட்டறவங்க எங்க இருக்காங்கன்னு தேடினேன். ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறி திருநெல்வேலியில இருக்கிற திருநங்கை சமுதாயத்தோட போய்ச் சேர்ந்துட்டேன்’’ என்கிறார் நிம்மதிப் பெருமூச்சுடன்.

‘‘ஆனாலும் படிக்கணும்ங்கிற ஆர்வம் மட்டும் போகவேயில்ல. இப்படி ஒரு பிரச்னையோட இருக்கற நான், நல்லா படிச்சாதான் இந்த சமூகத்துல வாழ முடியும்னு தோணிட்டே இருந்துச்சு. பிறகு வீட்டுக்கு போன் பண்ணி, ‘படிக்கவாவது எனக்கு உதவுங்க’ன்னு கேட்டேன். அப்புறம்தான் கோவில்பட்டியில உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில டிப்ளமோ கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் சேர்ந்தேன். அங்க என்னைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டாங்க. நிறைய ஊக்கம் தந்தாங்க.

கிளாஸ்ல ஃபர்ஸ்ட்டா, தனித்தன்மையோட வெளியே வந்தேன். அங்க நடந்த ‘கேம்பஸ் இன்டர்வியூ’ல செலக்டாகி சென்னையில ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலையும் கிடைச்சது. நான் திருநங்கைங்கறது அவங்களுக்கு முதல்ல தெரியாது. விஷயம் தெரிஞ்சதும் ஒரு சின்ன தயக்கம். ஆனாலும் அவங்க எல்லாரும் கலந்து பேசி, என்னை வேலையில தக்க வச்சாங்க. ஆனா, அங்க எனக்கு சம்பளம் போதுமானதா இல்ல. சென்னையில திருநங்கைன்னு சொன்னா வீடு தரமாட்டாங்க. அப்படியே கொடுத்தாலும் ரெண்டு மடங்கு வாடகை. இதனால, சமாளிக்கவே முடியாம திணறினேன்.

எங்களை மாதிரி ஆட்களுக்கு அரசு வேலை கிடைச்சா நல்லாயிருக்கும்னு சமூக நலத்துறையில மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் இல்ல. பிறகுதான் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுகிற போராட்டம் நடத்துனோம். மூன்றாவது பாலினமாக அங்கீகரிச்சு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்திருச்சு. கல்வியிலயும், வேலைவாய்ப்புலயும் சம வாய்ப்பு, இட ஒதுக்கீடு கொடுக்கணும்னு சொல்லுச்சு
அந்தத் தீர்ப்பு.

நான் மேற்கொண்டு படிக்க இந்தத் தீர்ப்பு உதவும்னு நம்பிக்கை பிறந்துச்சு. பெண் பாலினத்துல ‘டிக்’ செய்து அண்ணா யுனிவர்சிட்டி கவுன்சிலிங்குக்கு அப்ளே பண்ணினேன். ‘இட ஒதுக்கீடெல்லாம் அரசின் கொள்கை முடிவு... இப்போ இங்கே கிடைக்காது’ன்னு சொல்லிட்டாங்க. நான் என்னோட எல்லா சான்றிதழ்களையும், திருநங்கைக்கான அட்டையையும் காட்டினேன். ஒரு கமிட்டி அமைச்சு ஆய்வு செஞ்ச பிறகுதான், படிக்க ஆர்டர் கொடுத்தாங்க.

இப்ப, இந்தியாவிலேயே நான்தான் பி.இ எஞ்சினியரிங் படிக்கப் போற முதல் திருநங்கை. இட ஒதுக்கீடும் இருந்திருந்தா அரசுக் கல்லூரி கிடைச்சிருக்கும். செலவும் குறைவா இருந்திருக்கும். ஆனா, பரவாயில்ல. இதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம். இப்ப என்னோட ஒரே கோரிக்கை, சிறப்புப் பிரிவுல சேர்த்து எனக்கு ஸ்காலர்ஷிப்பாவது கொடுக்கணும்ங்கிறதுதான்.

என்னோட லட்சியமே நல்லா படிச்சு தலைசிறந்த பேராசிரியரா வரணும்ங்கிறதுதான். என்னால முடிஞ்ச அளவுக்கு போராடி அதில் பாதிக்கிணறு தாண்டிட்டேன். இப்போ ஒரு சின்ன உதவியையும் உந்துதலையும் அரசு தந்தா விடிவெள்ளி மாதிரி இருக்கும்!’’  நெகிழ்ச்சியான கோரிக்கையோடு விடை தருகிறார் கிரேஸ் பானு.

பேராச்சி கண்ணன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்