எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க!?பிறந்து 45 நாட்களுக்குள் ஒன்றரை கிலோ அளவுக்கு எடை பெருக்க, பிராய்லர் கோழிகளுக்கு 20 விதமான ரசாயனங்களைக் கொடுக்கிறார்களாம். மசாலாவோடு சேர்ந்து அத்தனையும் நம் வயிற்றுக்குள்தான் போகிறது. பெண் குழந்தைகள் சீக்கிரமே பூப்பெய்துவது, உடல் பருமன், கொலஸ்ட்ரால், சிறுநீரகக் கோளாறு என்று இன்று இளம் தலைமுறையை வதைக்கிற பல பிரச்னைகளுக்கு பிராய்லர் சிக்கன்தான் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பிராய்லர் கோழிக்கு மாற்றாக இப்போது வந்திருக்கிறது கருங்கோழி. பிராய்லர் கோழியை விடவும் பல மடங்கு ருசியும், மருத்துவத் தன்மையும் மிகுந்த கருங்கோழிப் பண்ணைகள் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிவேகமாக முளைத்து வருகின்றன.
அது என்ன கருங்கோழி?‘‘மத்தியப் பிரதேச மாநிலத்தை பூர்வீகமா கொண்ட நாட்டு ரகம். இதை ‘கடக்நாத் கோழி’ன்னு சொல்லுவாங்க. காட்டுக்கோழி வகையைச் சேர்ந்த இதை பழங்குடி மக்கள் வளர்ப்புக் கோழியா மாத்தினாங்க. கீரைகள், பழங்கள்னு இதோட உணவுமுறையே வித்தியாசமானது. சிறகு, கால்கள், கொண்டை, கறின்னு எல்லா பாகமும் கருப்பாத்தான் இருக்கும். ஆனா, பிராய்லர் கோழிகளை விட அதிக சுவை கொண்டது. இதோட இறைச்சி, பல நோய்களுக்கு மருந்து. சாதாரணமா வீட்டுத் தோட்டத்தில்கூட வளர்க்கலாம்.
தனியா இடம் ஒதுக்க அவசியமில்லை. பக்கத்துல ஒரு மரம் இருந்தா போதும். அதுல ஏறி அடைஞ்சுக்கும். முட்டையை அடை காக்காது. நாட்டுக்கோழிகளை வச்சுத்தான் அடை காக்கணும். பிறந்து 3 மாசத்துல ரெண்டு கிலோவுக்கு மேல எடை வந்திடும். இப்போ 1 கிலோ 400 ரூபா வரைக்கும் விற்பனை ஆகுது. டிமாண்ட் இருக்கிற அளவுக்கு சப்ளை பண்ண முடியலே...’’ என்கிறார் கடலூர் பழைய வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த காத்தமுத்து. இவரது பண்ணையில் 2000 கருங்கோழிகள் உள்ளன.
சேலம், ஓமலூர், நாமக்கல் பகுதிகளிலும் ஏராளமான கருங்கோழிப் பண்ணைகள் உள்ளன. மாதவரம், நந்தனம், காட்டுப்பாக்கம், நாமக்கல் பகுதிகளில் உள்ள அரசு கால்நடை ஆராய்ச்சி மையங்களிலும் கருங்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கருங்கோழியின் முட்டையும் மருத்துவத்தன்மை மிகுந்தது என்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற நோய்களிலிருந்தும் நிவாரணம் தருகிறது என்கிறார் காத்தமுத்து.
இதுபற்றி மாதவரம் கோழியின ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் ஓம்பிரகாஷிடம் பேசினோம். ‘‘இந்தியாவில் 40 வகையான நாட்டுக்கோழி ரகங்கள் உண்டு. அவற்றின் மூலமாக 50க்கும் மேற்பட்ட கலப்பினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கருங்கோழியானது மத்தியப் பிரதேசம், உத்தர காண்ட், ஜம்முகாஷ்மீர், சட்டீஸ்கர் பகுதிகளில் காணப்படும் ஒரு நாட்டுக்கோழி ரகம்.
இது உடலுக்கு ஹீமோகுளோபின் மற்றும் மெலனினை அதிகமாகத் தருகிறது. யுனானி போன்ற மருத்துவங்களில் இந்தக் கோழியின் இறைச்சியை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் முட்டையை நிறைய பேர் எங்களிடம் வந்து வாங்கிச் செல்கிறார்கள். மருத்துவத்துறை சார்ந்த நிறுவனங்கள் இந்த இறைச்சி மற்றும் முட்டையின் மருத்துவ குணங்கள் பற்றி ஆய்வுசெய்ய வேண்டும்’’ என்கிறார் அவர். சித்த மருத்துவர் சிவராமனிடம் கருங்கோழிகளின் மருத்துவத்தன்மை பற்றிக் கேட்டோம்.
‘‘பழமையான சித்த மருத்துவ நூல்களில் இக்கோழிகளின் மருத்துவகுணம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. வர்மக் குறிப்புகளிலும் கருங்கோழி பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. கருங்கோழி சூரணம் என்ற மருந்தும் சித்த மருத்துவத்தில் இருக்கிறது. தசை வீக்கம், நரம்புப் பிரச்னைகள், பக்கவாதம், கால், கைகள் சூம்பிப்போவது, வலி, நீண்டநாள் உபாதைகளுக்கு இக்கோழியின் இறைச்சி நல்ல மருந்து. நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் பி12 போன்ற சத்துகள் இதில் நிறைந்திருக்கின்றன.
இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட கருங்கோழியை பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமே இப்போது பயன்படுத்துகிறார்கள். அறிவியல்பூர்வமாக இக்கோழிகளின் மருத்துவத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று நெடுநாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்’’ என்கிறார் அவர். கருங்கோழிகள் பற்றி அறிய விரும்புவோர் 93452 73416 என்ற எண்ணில் காத்தமுத்துவை தொடர்பு கொள்ளலாம்.
வெ.நீலகண்டன்
படங்கள்: ரவி