சமையல்



‘‘என்னது... உனக்கு சமைக்கத் தெரியாதா?’’  முரளியின் குரலில் பதற்றம்! கல்யாணமாகி இப்போது தான் மனைவி பாமாவோடு ஆற அமரப் பேசுகிறான். பெண் பார்க்கப் போனபோது, பாமாவுக்கு நன்றாக சமைக்கத் தெரியும் என்றுதான் சொன்னார்கள்.

இப்போது அவனைப் பொறுத்தவரை பரவாயில்லை. அவன் அம்மா இதை எப்படி எடுத்துக்கொள்வாளோ என்றுதான் பயம். ‘‘நானே உண்மையை அத்தைகிட்ட சொல்லிடறேங்க. அவங்க என்ன தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை!’’  பாமா வேகமாகப் போனாள்.

‘‘வேணாம்... கொஞ்சம் இரு! எங்க அம்மா ரொம்பக் கோபப்...’’  அவன் தடுத்தும் கேட்காமல் பாமா மாமியார் அறைக்குள் நுழைந்து உண்மையைச் சொல்லிவிட்டு அழுதாள். மாமியார் முகத்தில் கோபத்துக்கு பதில் புன்சிரிப்பு. ‘‘ரொம்ப சந்தோஷம்டி என் கண்ணு. என் மூத்த மருமக ராகினி, ‘நல்லா சமைப்பேன்’னு பீத்திக்கிட்டு கண்றாவியா சமைப்பா. கேட்டா ‘எங்க வீட்டுல இப்படித்தான்’னு சொல்வா.

 அவளை எங்க வீட்டு கைப்பக்குவத்துக்கு மாத்த பெரும்பாடு பட்டேன். எல்லாம் தெரியும்ங்கிறவங்களை விட, எதுவும் தெரியாதுன்னு சொல்றவங்களுக்குத்தான் கத்துக் கொடுக்கறது ஈஸி. ரெண்டே மாசத்துல உன்னை நான் சமையல் எக்ஸ்பர்ட் ஆக்கறேன் பார்!’’ என்றாள் மாமியார் மலர்ச்சியோடு!             

மாதவி