Like and Share




வெல்டன்


மீண்டும் ஒரு வெற்றி இந்திய விண்வெளித்துறைக்கு! பி.எஸ்.எல்.விசி23 ராக்கெட், ஐந்து வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விஞ்ஞானிகளைப் பாராட்டிய பிரதமர் மோடி, ‘‘சார்க் நாடுகளின் வறுமை மற்றும் கல்வியறிவின்மையை மாற்ற ஒரு செயற்கைக்கோள் ஏவுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார். அண்டை நாடுகள் மத்தியில் இந்தியா ஒரு சக்தி என்பதை நிரூபிக்க மோடி மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார்.

ஈவென்ட் கார்னர்

ஒவ்வொரு பட்ஜெட்டுக்கு முன்பாகவும் மத்திய நிதி அமைச்சகத்தில் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெறும். ‘பட்ஜெட் மக்களுக்கு எதைக் கொடுக்கும்’ என்பதை சங்கேதமாக உணர்த்தும் நிகழ்ச்சி இல்லை இது. ரகசிய ஆவணமான பட்ஜெட் புத்தகங்களை அச்சிட ஆரம்பித்ததும், அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரை அந்தப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் ஆபீஸிலேயே தங்க வேண்டும் என்பது விதி.

 வீட்டுக்கு போனில் பேசக்கூட அனுமதி இல்லை. ரகசியங்கள் வெளியாகிவிடக் கூடாதே! கிட்டத்தட்ட 10 நாட்கள் இப்படி தங்கும் ஊழியர்களுக்கான சாப்பாடு, இந்த அல்வாவிலிருந்து ஆரம்பிக்கிறது!

கமென்ட்

என்னிடம் எப்போதும் துப்பாக்கி இருக்கும். அதை எதிர்க்கட்சியினர் மீது பயன்படுத்தத் தயங்க மாட்டேன். ஏனெனில், நானே ஒரு போக்கிரிதான்!
 நடிகரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான தபஸ் பால்

‘கிஞி’டடா!

ஆளில்லா மலைப்பிரதேசத்துக்கு சுற்றுலா செல்லும் ஒருவர், வழியில் தன் நண்பரைச் சந்திக்கிறார்... பரிதாபமாய் மழைக்கு ஒதுங்கி நிற்கும் பெண் ஒருவர், அந்த வழியே குடையோடு வரும் நண்பரைப் பார்க்கிறார்... இந்த இருவருமே தனிமை நீங்கி, ‘அடுத்தவரை நம்பலாமா’ என்ற பயம் விலகி, தங்கள் நண்பர்களோடு ஒன்றுகிறார்கள்.

‘அறிமுகமில்லாத இடத்தில் அறிமுகமானவங்களைப் பார்த்தா ஆறுதலா இருக்கும்ல! எல்லா கஷ்டமும் திடீர்னு தீர்ந்து போயிடுது. எல்லா சந்தேகமும் மாயமா மறைஞ்சு போயிடுது...’ என்ற வார்த்தைகள் பின்னணியில் ஒலிக்க, கவிதையாய் அரங்கேறுகிறது இந்த கமர்ஷியல். ஐ.என்.ஜி வைஸ்யா லைஃப் இன்சூரன்ஸ், இப்போது எக்சைடு லைஃப் இன்சூரன்ஸாக மாறி விட்டதன் விளம்பரம் இது. இதுக்கே இவ்வளவு ஃபீலிங்கா?

‘டெக்’ஷனரி!


நான்கு வருடங்கள் ஆச்சு... விண்டோஸ் போன் மார்க்கெட்டுக்கு வந்து. ஆப்பிள், ஆண்ட்ராய்டோடு ‘நானும் இருக்கேன்’ எனக் காட்டிக் கொண்டது தான் மிச்சம். காரணம், பட்ஜெட் போன் விற்கும் இந்திய போன் கம்பெனிகள் விண்டோஸ் பக்கம் தலை வைத்து படுக்காததுதான். இதை உணர்ந்து, மைக்ரோமேக்ஸ், கார்பன், லாவா உள்ளிட்ட இந்திய பிராண்ட்களோடு சமீபத்தில் ஒப்பந்தமிட்டுள்ளது மைக்ரோசாஃப்ட். விளைவு... மைக்ரோமேக்ஸின் ‘கேன்வாஸ் வின்’ விண்டோஸ் போன் இப்போதே ஃப்ளிப் கார்ட்டில் ஆஜர். ‘ஜோலோ வின்’ போனும் ஆன் தி வே. ஆக, விண்டோஸ் போன் வாங்க வேண்டுமென்றால் ஒன்று எச்.டி.சி அல்லது நோக்கியா என்ற நிலை இனி இல்லை. கிரேட் மூவ்!

‘படி’த்துறை

என்ன எடை அழகே!

ஸ்நேகாசாஹா
விலை: ரூ.80
சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை4. போன்: 72990 27361 உடல் பருமன் பொது நோயாகி விட்ட காலம் இது. இதை முன்வைத்து இந்தியாவில் பிசினஸ் களை கட்டுகிறது. பெல்ட், காந்த சிகிச்சை, கல் சிகிச்சை, அறுவை சிகிச்சை, மருந்துகள், மாத்திரைகள், கிரீம்கள், உடற்பயிற்சி சாதனங்கள் என ஏகப்பட்ட விவகாரங்கள். எது உண்மை? எது போலி? என தெரியாமல் பலர், காசை இழந்து, ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொண்டு தேவையற்ற மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

அவர்களுக்கான புத்தகம்தான் இது. இதே தலைப்பில் ‘குங்குமம் தோழி’ இதழில் வெளிவந்து, பல ஆயிரம் வாசகிகளை ஈர்த்த கட்டுரைகளின் தொகுப்பு. பிரபலங்களின் எடைக் குறைப்பு ரகசியங்கள், மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், தெரபிஸ்டுகள் உள்பட பல்துறை வல்லுனர்களின் ஆலோசனைகள், நடைமுறைக்குச் சாத்தியமான உடற்பயிற்சி, டயட் சார்ந்த டிப்ஸ்கள் என முழுமையாக தகவல்கள் அடங்கிய எடைக்குறைப்பு கைடாக வந்திருக்கிறது இந்த நூல்.