ஒரு தமிழனின் 60 ஆண்டுக்கால வாழ்கையை வகுத்துப் பார்த்தா...தூக்கம் வருதோ வரலியோ... குப்புற, மல்லாக்கன்னு டிசைன் டிசைனா படுத்துத் தூங்குறது 27 வருஷம். தூங்கி எந்திரிச்சும் பெட்ல இருந்து எந்திரிக்காம மல்லாக்க கவுந்த மாடு மாதிரி படுத்திருக்கும் நேரம், 1 வருஷம். காபி/ டீ/ தண்ணி குடிக்கிற மொத்த நேரம் 1 வருஷம்.
வாழ்நாளுல பல்லு விளக்க, மூஞ்சி கழுவ, குளிக்க, மேக்கப் பண்ண எடுத்துக்கிற நேரம் 3 வருஷம் (பெண்களுக்கு இது இன்னும் அதிகமாகும்!). ஒரு நாளைக்கு மூணு வேளைன்னு தின்னாலும், அது மொத்தமா எடுக்கிற நேரம் 2.5 வருஷம். டி.வில பாட்டு பார்க்கும் மொத்த நேரம் 1.5 வருஷம்.
வாகனப் பயணம் போற மொத்த நேரம் 2.5 வருஷம். டிராஃபிக்ல நிற்கும் மொத்த நேரம் 0.5 வருஷம். பொண்ணுங்கள நினைச்சு கனவு கண்டு, அந்த கனவுலயே குழந்தை பெத்து ஸ்கூலுக்கு அனுப்பிய நேரம் 2 வருஷம். ஒரே பாட்டுல அம்பானி ஆகுற மாதிரி, 2 பாட்டுல அத்வானி ஆகுற மாதிரி பகல் கனவுல போனது 1 வருஷம்.
செல்போன்ல பேசுற மொத்த நேரம் 1 வருஷம், செல்போன நோண்டுன மொத்த நேரம் 3 வருஷம். ட்விட்டர், ஃபேஸ்புக்ல மேயுற நேரம் 1.5 வருஷம் (ஐ.டி.யில் வேலை(?!) செய்பவர்களுக்கு இது இன்னும் அதிகம்!). அதே ட்விட்டர், ஃபேஸ்புக்ல புரட்சி பண்ணிய மொத்த நேரம் 0.5 வருஷம்.
சம்பளம் வாங்கற அளவுக்கு வேலை செய்யாட்டியும், சம்பளம் வாங்கணுமேன்னு வேலை செய்யற நேரம் 5 வருஷம். சினிமாவுக்கு போறது, பீச்சுக்கு போறது, பேப்பர் படிச்சது, புக் படிச்சது, ஸ்கூட்டில போறது பியூட்டின்னு நினைச்சு பின்னால போயி பாட்டின்னு பார்த்துட்டு வர்றது, கொட்டாவி விடுறது, அது இதுன்னு ஒரு 2 வருஷம். இப்போ மிச்சம் 5 அஞ்சு வருஷம் என்னாச்சுன்னு ஆர்வமாயிருப்பீங்க... ஒண்ணுமில்ல... பைக் சாவி, கார் சாவி, வீட்டு சாவி, ஆபீஸ் சாவின்னு மாத்தி மாத்தி நாம சாவி தேடிய நேரம்தான் அது! முடியல. அப்பனே சங்கலி கருப்பா! இனி சாவிய மட்டும் தொலைக்க விடாதடா, உனக்கு படைக்க சரக்கு மட்டுமில்ல, சைடு டிஷ்ஷா சாத்துக்குடி கூட வாங்கிட்டு வர்றேன்.
சில சமயம் நல்ல ஆட்சிகள் அகற்றப்படுவதற்கும், நல்லவர்கள் கஷ்டப்படுவதற்கும், நல்லவை தடுக்கப்படுவதற்கும் ஒரே காரணம்தான்... மக்களின் மறதி. மொத்தத்தில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வ முக்கிய காரணியே மறதிதான். வாங்க, கடந்த வாரம் முதல் அடுத்தடுத்த வருடங்கள் வரை தலைப்பு செய்தியாகவோ, பெட்டிச் செய்தியாகவோ, செவி வழிச் செய்தியாகவோ நம்மை வந்தடையப் போகும் சிலவற்றைப் பார்ப்போம்.
28 ஜூன், 2014
சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
29 ஜூன், 2014
தரமில்லாத கட்டிடம் கட்டிய உரிமையாளர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர்.
பலியானவர்கள் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஆறுதல் கூறினார்.
30 ஜூன், 2014
கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடத்தின் மண் தரமானதா என்று ஆய்வு செய்ய சாம்பிள் எடுக்கப்பட்டது.
2 ஜூலை, 2014
ஏரி நிலம் முதல் தரமற்ற நிலங்கள் என 35000 கட்டிடங்கள் சென்னையில் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளன.
3 ஜூலை, 2014
கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை நாற்பதைத் தாண்டியது.
6 ஜூலை, 2014
பலியானவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டியது.
15 ஜூலை, 2014
கட்டிட உரிமையாளர் மற்றும் அவரது மகனின் 15 நாள் சிறைக்காவல் முடிந்தது. விசாரணைக்குப் பின் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
12 ஆகஸ்ட், 2014
கட்டிட உரிமையாளர் மற்றும் அவரது மகன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
4 பிப்ரவரி, 2015
சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிட உரிமையாளர், சென்னை கேளம்பாக்கத்தில் புதிய கட்டிடம் கட்ட ஆரம்பித்தார்.
28 ஜூன், 2015
கட்டிட விபத்து ஏற்பட்டு 1 வருடம் முடிவடைந்ததை நினைவு கூர்ந்து, சென்னை மெரினாவில் நூற்றுக்
கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
19 அக்டோபர், 2016
சென்னை கேளம்பாக்கத்தில் கட்டப்பட்ட ‘குளுகுளு அவென்யு’ இனிதே தொடங்கப்பட்டது.
ஸாரி, இதுக்கு இடையில ஒரு முக்கியமான தேதி விட்டுப் போச்சு...
28 ஜூலை, 2014
கட்டிடம் இடிந்து விழுந்ததில் இறந்து போன ஆந்திராவைச் சேர்ந்த தவுடம்மா மகள் விஜயலட்சுமி மற்றும் கஜலட்சுமி, ஒடிஷாவை சேர்ந்த ஆதம்குமார் நாயக் மகன்கள் நவீன்குமார் மற்றும் பிரவீன்குமார், நாசிகா லிங்கா மகன் அசோக் லிங்கா, மதுரையைச் சேர்ந்த பாண்டித்துரை மனைவி லோகேஸ்வரி மற்றும் மகன் பாலு,
கோவில்பட்டியைச் சேர்ந்த திலகவதியின் கணவர் மகாலிங்கம் மற்றும் மகள் பிரியா வறுமையின் காரணமாக சென்னை டுமில்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்படும் அபார்ட்மென்ட் கட்டிடத்தில் வேலைக்குச் சேர்ந்தனர்.
இங்கே பெயர்கள்தான் மாற்றப்பட்டுள்ளன... அவங்க வாழ்க்கை அப்படியேதான் இருக்கப் போகுது.
‘ஆண்டவன பார்க்கணும், அவனுக்கு ஊத்தணும், அப்போ நான் கேள்வி கேட்கணும்’னு சத்யராஜ் சார் 27 வருஷத்துக்கு முன்னால பாடினாரு. ஆனா இன்னைக்கு இருக்கும் நிலைமைல, ஆண்டவன் பூமிக்கு வந்தாலும், சரக்கெல்லாம் ஊத்த முடியாது, விலை ஜாஸ்தியாயிடுச்சு. கேள்வியெல்லாம் கேட்க முடியாது, ஆண்டவனை விட நாம ரொம்ப பிஸி! தப்பித் தவறி வந்தா, ஒரு நாலு இடத்த மட்டும் ஆண்டவன பார்த்துட்டு போகச் சொல்லணும்.
அன்புள்ள சாமி, மொதல்ல நீங்க ஒவ்வொரு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கும் சென்று ரெண்டு நாள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து பார்க்கவும். ரெண்டாவதா, ஒவ்வொரு மாவட்ட தலைநகர் பஸ் ஸ்டாண்டின் இலவசக் கழிப்பிடத்தில் சில நிமிடங்கள் நின்னு பார்க்கவும். மூணாவதா, மாநகராட்சி குப்பை வண்டி...
இல்ல, கார்ப்பரேஷன் தண்ணி வண்டி பின்னால ஒரு பத்து நிமிஷம் போய்ப் பார்க்கவும். நாலாவதா, சென்னை சிட்டில இருக்கிற ஒரு பொண்ணை லவ் பண்ணி பார்க்கவும். அப்போ புரியும்... கடவுளாய் இருக்கிறதை விட மனுஷனாய் வாழ்வது எவ்வளவு கஷ்டம்னு!
ஆல்தோட்ட பூபதி