சைவம்



‘சும்மா கலகலன்னு இருக்கும்’ என வாக்குக் கொடுத்துக் கூப்பிட்டதற்கு பெரிதாக வஞ்சனை ஒன்றும் செய்துவிடவில்லை ‘சைவம்’. திருவிழா நிமித்தம் உறவுகளால் நிறைகிறது ஒரு கிராமத்து வீடு. கருப்பசாமிக்காக நேர்ந்து விட்டிருந்த ஒரு சேவலை பலி கொடுத்துவிட்டால் எல்லா வீட்டுக் கஷ்டங்களும் நீங்கிவிடும் என  முடிவெடுக்கிறார்கள்.

அடுத்த நாளே அந்தச் சேவல் காணாமல் போக, ஊரெங்கும் தேடித் திரிகிறது குடும்பம். கடைசியில் சேவல் கிடைத்ததா? கஷ்டங்கள் நீங்கியதா? என சஸ்பென்ஸ் உடைத்து முடிகிறது படம்.

நாசரையும் குட்டிப்பெண் சாராவையும் தவிர சொல்லிக்கொள்ளும்படி வேறு ஸ்டார் வேல்யூ இல்லை. ஆனாலும் இதை ஒரு ‘இயக்குனர் படமாக’ நிலை நிறுத்தியிருப்பதற்காகவே ஏ.எல்.விஜய்க்கு லைக் போடலாம். ‘சைவம்’ எனப் பெயர் வைத்து விட்டு, நான் வெஜ் மார்க்கெட்டில் படத்தைத் துவக்குவதே செம டேஸ்ட். ஆர்ப்பாட்டமில்லாமல் செல்லும் திரைக்கதையில் அளவாகக் கலக்கப்பட்டிருக்கிறது காமெடி.

சேவலைத் தேடி அலையும்போது, ‘‘அது யூத் சேவல்... ஏதாவது ஒரு கோழி பக்கத்துல தான் இருக்கும்’’ என ஆண்கள் முடிவெடுப்பதும், பெண்கள் இன்னொரு பக்கம் யாராவது ரகசியமாக அடித்து அடுப்பில் ஏற்றி விட்டார்களா என்றறிய வீடு வீடாகப் போய் ‘‘உங்க வீட்ல இன்னைக்கு என்ன சமையல்’’ என ஆழம் பார்ப்பதும்... ரசனை.

நாசரின் மகன் பாஷாவுக்கு எதிர்பார்த்ததை விட அதிக மார்க். பப்பி லவ்வுக்கே உரிய படபடப்பையும் ஆர்வக்கோளாறையும் பளிச்செனக் காட்டுகிறது அவர் முகம். அத்தை மகளாக வரும் த்வாரா தேசாயின் வயதும் நிறமும் வசீகரிக்கிறது. நாசருக்கு அதிகம் டயலாக்குகள் இல்லை. ஆனால், நெற்றிச் சுருக்கங்களே நெடும்வசனங்களைப் பேசி விடுகின்றன. குட்டிப் பெண் சாராவிடம் எக்கச்சக்க மெச்சூரிட்டி. அந்தக் குட்டி வில்லனை டீல் பண்ணும்போது... அட, ஒரு மெல்லிய ‘கெமிஸ்ட்ரி’ கூட எட்டிப் பார்க்கிறது. சீக்கிரமே சாரா ஹீரோயின் ஆக சான்ஸ் அதிகம்!

செட்டிநாட்டு வீட்டையும் வீதிகளையும் ஒரு புள்ளி விடாமல் அள்ளி வந்திருக்கிறது நீரவ் ஷாவின் கேமரா. மற்ற நடிகர்களில் பலரை அதிகம் பார்த்ததில்லை. ஆனாலும் இயல்பு கெடாமல் அப்படியொரு தேர்ந்த நடிப்பு.

படத்தின் பாதி நீளத்துக்கு ‘வாங்க மதனி... வாங்க அண்ணே, எப்படி இருக்கீங்க?’ என்ற குசலம் விசாரிப்புகளே வருவது, அயற்சி. அத்தைப் பெண்ணைப் பார்க்கும் ஆர்வத்தில் ஒரு இளைஞன் ஜட்டியோடு வீதிக்கு வருவதெல்லாம் ஸாரி... கொஞ்சம் ஓவர். வேலைக்காரர் கேரக்டருக்கும் நீளமான சென்டிமென்ட் வசனம் வைக்கும் ட்ரெண்ட் இன்னும் கூட இருக்கிறதா என்ன?
ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு பாதி பலம்.

மிகச் சாதாரணமான காட்சிகளுக்கும் நம்மை ‘சிரி’ என்றும் ‘அழு’ என்றும் ஆட்டி வைக்கிறது பின்னணி இசை. முத்துக்குமாரின் வரிகளில் ‘அழகு... அழகு...’ மற்றும் ‘ஒரே ஒரு ஊரில்...’ பாடல்கள் இனிமை. சேவல் தேடும் படலத்தைப் பரபரப்பாக்கிச் செல்கிறது ‘கொக்கரக்கோ கோழி’ பாடல். கட்டக் கடைசியாக ஜீவகாருண்யத்தை சொல்ல வரும் கதை என்றாலும், ‘எங்க அம்மா இப்படித்தான் சைவமானாங்க’ என ஒரு கார்டு போட்டு, சர்ச்சைகளிலிருந்து சைடு வாங்கி விடுகிறார் இயக்குனர் விஜய்.
‘சைவம்’ என்றாலும் ‘ட்ரீட்’ ஓகேதான்!

குங்குமம் விமர்சனக் குழு