அவன் அவல் unlimited



பெண்கள் ஃபிகர் ஆனது எப்போது?

“எங்க காலத்திலெல்லாம் பாய்ஸ் காலேஜ் பசங்க பொண்ணுங்களை ‘கலர்ஸ்’னுதான் சொல்வாங்க! ‘ஃபிகர்’னு சொல்றது கிடையாது!’’  60களின் கல்லூரி வாழ்வை நம்மிடம் பகிர்ந்தார் பெண்மணி ஒருவர். ‘‘பொண்ணுங்க டிரஸ், பொதுவாவே கலர்ஃபுல்தான். அதிலும் அப்போதைய தாவணி, புடவை  கண்ணைப் பறிக்கும். அதனால ‘கலர்ஸ்’னு சொல்லியிருக்கலாம்.

 90கள் தொடக்கத்துல என் பையன் காலேஜ் படிக்கும்போதுதான் ‘ஃபிகர்’ங்கற வார்த்தையைக் கேள்விப்பட்டேன். ‘ஊர்வசி ஊர்வசி’ பாட்டுல ‘கலர்கள்’, ‘ஃபிகர்கள்’னு ரெண்டுமே வரும். பரவலா எல்லா பொண்ணுங்களும் பேன்ட்  ஷர்ட், சுடிதார் போட ஆரம்பிச்ச காலம் அது. உடம்போட ஒட்டி ‘ஷேப்’பை காட்டுற மாதிரி உடைகள் வந்த பிறகுதான் பசங்க பொண்ணுங்களை ‘ஃபிகர்’னு சொல்ல ஆரம்பிச்சிருக்கணும்’’ என ஒரு தியரி சொல்கிறார் அவர்.

பெண் என்று குறிப்பிடுவதற்கு காற்றில் வளைவாக வரைந்து காட்டுவதும், ‘கட்டை’, ‘ஃபிகர்’ என வடிவம் சார்ந்த பெயரால் அழைப்பதும் ஆண் உலகில் சகஜம். ஆனால், இதெல்லாம் ஏதோ பாவ காரியம் போலவும், சமூகத்தால் விலக்கப்பட்ட பிளே பாய் கலாசாரம் போலவும் இங்கே பார்க்கப்படுவதுண்டு. பெண்கள் முன்னிலையில் நம் ஆண்கள் காட்டும் நடிப்பு அப்படி. ஆனால், மனித இனப்பெருக்கத்தில் பெண்களின் ஃபிகர்... அதாவது, அவர்களின் வடிவம் மிக முக்கியமான பங்காற்றுகிறது.

சில படங்களில் வில்லன்கள் 362436 என்று பெண் உடலுக்குக் கணக்கு சொல்லிப் பார்த்திருப்பீர்கள். அதாவது, மார்பு மற்றும் இடுப்புப் பகுதியின் சுற்றளவு 36 அங்குலம்... அதற்கு இடைப்பட்ட ஏரியாவின் சுற்றளவு 24 அங்குலம் என்பது இந்தக் கணக்கு. நம் ஊரில் இதை துடியிடை... அதாவது உடுக்கை போன்ற இடை என்பார்கள். ஆங்கிலத்தில் ‘ஹவர் கிளாஸ் வடிவம்’ என்பார்கள். பெண்களை இப்படி அளவிட்டு ரசிப்பது கொடூரமான செயலாகக் கூட இங்கே காட்டப்படுவதுண்டு.

ஆனால், ‘ஒவ்வொரு ஆணும் தனக்குத் தெரியாமலேயே பெண்ணின் அங்க அளவுகளைக் கணக்கிட்டுத்தான் ரசிக்கிறான். தன் இணையையும் இதன் மூலம் தேர்ந்தெடுக்கிறான்’ என்கிறது உயிரியல். ஆக, இந்த இயல்பான இயற்கை கெமிஸ்ட்ரியை எந்த அளவுக்கு வெளியே சொல்கிறோம் என்பது மட்டுமே இங்கே ஒழுக்கம் சார்ந்தது.

பெண் உடலைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு நமக்குக் கிடைத்த ஒரே சான்ஸ் கவிதைதான். ‘பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன், அடடா பிரம்மன் கஞ்சனடி... சற்றே நிமிர்ந்தேன், தலைசுற்றிப் போனேன், ஆஹா! அவனே வள்ளலடி’  இதை மட்டும் ஒரு படத்தில் வசனமாக வைத்திருந்தால் ‘மலையாள டப்பிங்கா?’ என்பார்கள். ஆனால், வெளிப்படையாகப் பேசாமலே விட்டதால் இங்கே நிறைய குழப்பங்கள் ஏற்பட்டு விட்டன. ‘இடை’ என்றால் ‘இடுப்பு’ என்றே நவீன தமிழ் பொருள் சொல்கிறது. அதுவும் மார்புக்குக் கீழே தொடை வரை உள்ள அத்தனை ஏரியாவும் இடுப்பு என்றே அழைக்கப்படுகிறது.

‘இருக்காண்ணா இடுப்பிருக்கான்னா இல்லையான்னா இலியானா’ என இடுப்பு வர்ணனை பரவச மொழிகளில் விளையாடுகிறது. உண்மையில் ‘இடுப்பு’ என்ற சொல் காலம் காலமாக ‘ஹிப்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகராகப் பயன்படுத்தப்பட்டதுதான். அதாவது, பெண்களின் பெல்விக் எலும்புப் பகுதி. கிராமங்களில் முதல் பிரவத்தின்போது பெண்களிடம், ‘வயிறு வலிக்குதா... இடுப்பு வலிக்குதா...’ என்பார்கள். வயிறு வலித்தால் பொய் வலி. இடுப்பு வலித்தால்தான் பிரசவம். குழந்தை பிறப்புக்காக இடுப்பெலும்பு விலகிக் கொடுக்க தயாராகிவிட்டதன் அறிகுறி இந்த வலி. ஆக, சொல் வழக்கில் ‘இடுப்பு’ என்பது நிச்சயம் இந்த பெல்விக் பகுதிதான்.

இலக்கியத் தமிழில் இடுப்பை நாம் எப்படி அழைத்தோம் என்கிறீர்களா? பழம்பாடல்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ‘அல்குல்’ எனும் சொல், ‘இடுப்பைத்தான் குறித்தது’ என்றும், ‘இல்லை... அது இன்னும் அந்தரங்கமானது’ என்றும் தமிழறிஞர்கள் மத்தியில் இன்றும் மோதல் உண்டு. நிஜத்தில் இந்த இரு பொருளிலுமே அந்த வார்த்தை பயன்பட்டிருக்க வேண்டும். ‘நல்லரவின் படம் கொண்ட அல்குல்’ என்று இறைவியை அபிராமி பட்டர் வர்ணிக்கிறார். அதாவது, நல்ல பாம்பின் படம் போன்று அகன்றிருக்கும் இடுப்பெலும்புப் பகுதி. மனித எலும்புக் கூட்டில் இந்த இடுப்பெலும்பு கீழிருந்து விரிந்து பாம்பின் படம் போலவே இருப்பதை நீங்களே க்ராஸ் செக் பண்ணிக் கொள்ளலாம். இந்த எலும்புக்கும் மார்புப் பகுதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தைதான் இடை என்றார்கள் நம் முன்னோர்கள்.

இந்த ‘இடை’, எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறுத்திருக்க வேண்டும். இடுப்பும் மார்புப் பகுதியும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அகன்று இருக்க வேண்டும். இதுதான் இலக்கணம். பெண் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு சரியான விகிதத்தில் இருப்பதற்கும் அவளால் சிக்கல்கள் இல்லாத டெலிவரியை சந்திக்க முடியும் என்பதற்கும் இந்த அளவுகள் முக்கியமான குறியீடு. நமது பாரம்பரிய உடைகளான புடவை, தாவணி இரண்டுமே, அகன்று தெரிய வேண்டிய இடுப்பு மற்றும் மார்புப் பகுதியை ஒரு சுற்று சுற்றி மேலும் அகன்றதாகக் காண்பிக்கும். சிறுத்து தெரிய வேண்டிய இடைப் பகுதியை கவர் பண்ணாமல் விட்டுவிடும். வடிவம் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் எந்தப் பெண்ணையும் ‘ஈஸ்ட்ரோஜன் ரிச்’சாக காட்டும் வல்லமை இந்த உடைகளுக்கு உண்டு!

அறிவியலைப் பொறுத்தவரை, இடுப்பு எலும்புப் பகுதியை அது ‘ஹிப்’ என்கிறது. இடையை ‘வெயிஸ்ட்’ என்கிறது. சின்ன இடை என்பது மட்டுமே பாலியல் கவர்ச்சியை உண்டு பண்ணி விடாது. இடைக்கும் இடுப்பு எலும்புக்கும் இருக்கிற அளவு வித்தியாசமே இனக்கவர்ச்சிக்கான சூத்திரம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்த அளவீட்டுக்குப் பெயர், வெயிஸ்ட் டு ஹிப் ரேஷியோ (Waist to Hip Ratio WHR). அதாவது, இடையின் சுற்றளவோடு இடுப்பெலும்பின் சுற்றளவை வகுத்துக் கிடைக்கும் நம்பர்.

நாம் மேலே பார்த்த 362436 என்ற அளவீட்டுக்கு இந்த வகையில் கிடைக்கும் மார்க் 24/36 = .67! பாடகி ஜெனிபர் லோபஸின் WHR இதுதான். உலக அளவில் ஏறக்குறைய .70 என்ற கீபிஸி கொண்ட பெண்கள்தான் ஆண்களை அதிகம் கவருவதாகச் சொல்கிறார்கள். லண்டனில் ஒரு மாடல் அழகிக்கான சராசரி WHR, .71 என நிர்ணயித்துள்ளது பிரிட்டன் மாடல் ஏஜென்ட்ஸ் அசோஸியேஷன்.

ஆனால், நாம் எவ்வளவு கணக்குப் போட்டாலும் சரி... ‘இடையளவு இவ்வளவு இருந்தால் அது உலகம் முழுக்க எல்லா ஆண்களையும் ஈர்க்கும்’ என்ற உறுதியான ஸ்டேட்மென்ட்டை விஞ்ஞானம் இன்னும் தரவில்லை. காரணம், இந்த விஷயத்தில் ஆண்களின் விருப்பம் ஏரியாவுக்கு ஏரியா மாறுகிறது. உலகமே ஒல்லி இடையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும்போது, நாம் மட்டும் ஹன்சிகா, நமீதாவுக்கு கோயில் கட்டுவதில்லையா? அப்படித்தான்! ஆமாம்... நம்ம சாய்ஸ் ஏன் இப்படி இருக்கிறது? பெண்களின் உடல் வளைவுகள் நல்லதையும் செய்யலாம் கெட்டதையும் செய்யலாம். ஆனால், யாரும் கவனிக்காமல் போக வாய்ப்பில்லை!

அமெரிக்க நடிகை மே வெஸ்ட்

சில கவர்ச்சிகரமான
பெண்களின் கீபிஸி!
ஐஸ்வர்யா ராய்        .71
ஸ்ருதி ஹாசன்        .72
சோனாக்ஷி சின்ஹா    .70
மர்லின் மன்றோ        .61
சன்னி லியோன்,
காஜல் அகர்வால்    .69
தீபிகா படுகோன்        .75
பார்பி பொம்மை        .55

தகவல்: www.bodymeasurements.org

தேடுவோம்...

‘‘நாசமா போச்சு... நான் என் தொழிலையே விட்டுடறேன்.
உன் ஹீரோயினைப் பார்க்காம கொடி இடைன்னு எல்லாம் பாட்டெழுதித் தொலைச்சிட்டேனே!’’

கோகுலவாச நவநீதன்