மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் நமக்குப் பிடித்ததை இன்னொன்றிலும், அதற்குப் பிடித்ததை வேறொன்றிலும் வைத்துவிட்டு சுற்ற விட்டு மகிழ்கிறது வாழ்க்கை. நமக்குப் பிடித்தது கண்முன்னே நழுவிப் போவது எத்தனை வலி. நமக்கான விருப்பம் சில்லு சில்லாய் உடைந்து உதிர்வது எத்தனை வேதனை. ஒரு கண்ணில் புன்னகையும் மறு கண்ணில் கண்ணீருமாய் வாழ்வது எத்தனை கொடுமை! காவியில் காதல் கொண்டிருந்த அப்பாவுவை காலம் தாலியால் இறுக்கிக் கட்டியது.

உலகத்தின் விசித்திரமே இதுதான். அவரவருக்கான விருப்பங்களை எந்தத் தருணத்திலும் அவரவராகவே எடுக்க அனுமதிக்க மறுக்கிறது இயற்கை. எப்பொழுதும் அதுதான் சாட்டையைச் சுழற்றுகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் ‘நீ ஒன்றுமில்லை’ என தோள் தட்டுகிறது. புத்திசாலிகள் நாணலாய் வளைந்து கொடுத்து வலிக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

சிலர் எதிர்த்து நின்று உடைந்து போகிறார்கள். அப்பாவு நாணல். ‘என்னை சோதிக்கிறாயா முருகா... இது உன் கட்டளை... இது உன் விருப்பம்னு நான் ஏத்துக்கறேன். இந்த பந்தமும் நீர்க்குமிழியாய் உடைபடும். என் அன்பு என்னை உன்னை நோக்கி இழுத்துக் கொண்டுவரும். அந்த நொடிக்காகவே காத்திருக்கிறேன்.’ தனக்குத்தானே அவர் பேசிக் கொண்டிருந்தார்.

அப்பாவுவின் கண்களை ஊடுருவிப் பார்த்தார் சேதுமாதவ ஐயர். ‘‘அப்பாவு! நீ என்ன யோசிக்கறேன்னு எனக்குத் தெரியும். என் மேலகூட உனக்கு கோபம் இருக்கும். ஆனால் இதுதான் சரி. இது ஏன் சரின்னு காலம் உனக்குச் சொல்லித் தரும். முருகனுக்குப் பிடிக்காத, அவனுக்கு விருப்பமில்லாத சின்ன விஷயம் கூட உன் வாழ்க்கையில நடக்காது. இந்தக் கல்யாணம் அவன் விருப்பம். அப்பாவு, இந்த பூமியில குயில் குஞ்சு மாதிரி வாழப் பழகணும். குயில், காகத்தோட கூட்டுல முட்டையிடும்.

காகம் அடை காத்து குஞ்சு பொறிக்கும். றெக்கை முளைக்கிற வரைக்கும் குயில் குஞ்சு வாயைத் திறக்காது. கூட்டுல இருக்கறது குயில்னு தெரிஞ்சா காகம் கொத்தியே கொன்னுடும். நல்லா பறக்க முடியும்ங்கற நம்பிக்கை வந்ததும் குக்கூன்னு ஒரு குரல் கொடுத்துட்டு குயில் பறந்துடும். நீ காகத்தோட கூண்டுல இருக்குற குயில். காலம் கனியும். நீயும் சுதந்திரமா பறப்பாய். உன் துறவு விருப்பம் சாத்தியமாகும். கவலைப்படாதே. இப்போதைக்கு இந்தக் கடமையை சரியா செய். தாமரை இலைத் தண்ணீராய் இரு. குகன் கூட இருக்கிறான்’’  ஆதரவாய்ச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அப்பாவு தெளிவானார். இல்லறம் இப்போதைக்கு என்னுடைய கடமை என நிறைவாக வாழ்ந்தார். காளிமுத்தம்மாளும் கணவனின் மனமறிந்து நடந்தாள். துறவு மனம் கொண்ட அப்பாவுவே குணவதி என்று கொண்டாடும் அளவுக்கு! இல்லறம் கடமை என்றாலும் துறவறம் ஆழ்மன வேட்கை அல்லவா? வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தலயாத்திரை மேற்கொண்டார் அப்பாவு. முருகன் தலங்களாய் தேடிச் சென்று திகட்டத் திகட்ட தரிசித்தார். அந்தந்த தல முருகனை பாடிக் களித்தார். அப்பாவுவின் ஆன்மிக நாட்டம் ஊராரை வியக்க வைத்தது. அப்பாவு பிள்ளை என்று அழைத்தவர்கள் அப்பாவு சுவாமிகள் என்று கை கூப்பினார்கள்.

அப்பாவு எழுதிய பக்தி பாடல்களும் நூல்களும் திக்கெட்டும் சிறகடிக்க, அவரது புகழ் ஓங்கி வளர்ந்தது. ‘உங்க கையால விபூதி கொடுங்க சாமி... பிள்ளைக்கு உடம்புக்கு முடியல’ எனக் கூட்டம்  வாசலில் நின்று கை கூப்பியது. முருகனின் திருநாமம் சொல்லி அப்பாவு திருநீறு தர, நோய் காத தூரம் ஓடி நின்றது. ஒரு கட்டத்தில் திருநீறு தருவதையும் தவிர்த்து உள்ளுக்குள் கிடக்கத் தொடங்கினார். அவரை தரிசித்தாலே நோய் தீர்ந்தது. மக்களின் நம்பிக்கை இமயமாய் வளர்ந்தது.

அப்பாவுவை கணவனாக்கிய காலம், வெகு நாட்களுக்குப் பின்பே தகப்பனாக்கியது. பிறந்த ஆண் குழந்தைக்கு முருகையா என பெயர் சூட்டினார். உச்சி முகரும்போது உன்மத்தமானார். குமரனே குழந்தையாக வந்ததாய் எண்ணித் திளைத்தார். அடுத்து பெண் குழந்தை... அதற்கு ஞானாம்பாள் என பெயர் வைத்தார். ஒருநாள்...குழந்தை ஞானாம்பாள் பால் குடிக்காமல் அழுதுகொண்டே இருந்தாள். உடல் கொதித்தது. துவண்டு கிடக்கும் குழந்தையைப் பார்த்து பதறி அழுதாள் காளிமுத்தம்மாள்.

‘‘குழந்தை காலைல இருந்து அழறா... என்னன்னே தெரியல. நீங்க கொஞ்சம் விபூதி பூசுங்க, சரியாகிடும்’’ என்றாள் கணவனிடம். ‘‘நான்தான் இப்போது யாருக்கும் திருநீறு தருவதில்லையே காளி... நீயே முருகனிடம் கேள். அவன் தருவான்’’ என்று சொல்லிவிட்டு கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தார். ‘ஊருக்கெல்லாம் விபூதி தந்த மனுஷன்... பெற்ற பிள்ளைக்கு உடம்பு முடியாமல் போகும்போது இப்படிச் செய்கிறாரே’ என அவள் உள்ளம் வெதும்பினாள். ‘‘முருகா... என் பிள்ளைக்கு நீயே கதி!’’ என கண் கசக்கியபடி, குழந்தையை மடியில் போட்டு தட்டிக் கொண்டிருந்தாள். அப்போது...

காவியணிந்த பெரியவர் ஒருவர் வீட்டினுள் நுழைந்தார். ‘‘குழந்தை ஏன் அழறா? அவளை இப்படிக் கொடு’’ எனத் தூக்கினார். தண்ணீரை உள்ளங்கையில் ஊற்றி கண்மூடி ஏதோ முணுமுணுத்தார். அதை முகத்தில் தெளித்து தன் துண்டால் துடைத்து விட்டார். தன் விபூதிப் பையிலிருந்து நீறு எடுத்து நெற்றியில் பூசினார். முதுகு தடவினார். கன்னம் தட்டினார். ‘எங்கே... சிரி செல்லம்’ என்றார். குழந்தை சிரித்தது. இதுவரை அழுத சுவடே தெரியாமல் இப்போது பூத்த தாமரை போல இருந்தாள், ஞானாம்பாள். சற்றைக்கெல்லாம் குழந்தை நிம்மதியாக உறங்கியது. நன்றியோடு குழந்தையை படுக்கையில் போட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தாள் காளிமுத்தம்மாள்.

 அந்தக் காவியுடை பெரியவரைக் காணவில்லை. வாசலுக்கு ஓடிப் போய் பார்த்தாள்... ஆள் இல்லை. தியானம் முடித்து கண்விழித்த அப்பாவு, ‘‘யாரைத் தேடுகிறாய் காளி?’’ என்றார்.
நடந்ததைக் கூறினாள் காளிமுத்தம்மாள். வேகவேகமாக வெளியில் சென்று தெரு முழுக்க விசாரித்தார், பாம்பன் சுவாமிகள். யாரும் அந்தப் பெரியவரை பார்க்கவில்லை. வந்தது குகனே எனத் தெளிந்து சிலிர்த்தார்.

ஞானாம்பாளுக்கு ஒரு தம்பி பிறந்தான். குமரகுருதாசன் என்று அவனுக்குப் பெயரிட்டார் அப்பாவு. குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கூடம் போகத் தொடங்கினார்கள். இதற்கிடையே சாத்தப்பப் பிள்ளை இறைவனடி சேர்ந்தார். வியாபாரத்தை முழுக்கத் தாமே பார்க்க வேண்டிய கட்டாயம் அப்பாவுவுக்கு. வயதும் நாற்பதை தொட்டுவிட, மீண்டும் துறவு ஆசை துள்ளி எழுந்தது.

அன்று வெள்ளிக்கிழமை. பழநிக்கு சென்று முருகனை தரிசித்துவிட்டு அப்படியே துறவு மேற்கொண்டுவிடலாம் என நினைத்திருந்தார் அப்பாவு. அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். இது, அவரது பால்ய சிநேகிதர் அங்கமுத்துப் பிள்ளைக்குத் தெரிய வந்தது. எப்படியும் இதைத் தடுத்துவிட நினைத்தார் அவர்.

(ஒளி பரவும்)

துன்பங்களைத் துரத்தும் குமாரஸ்தவம்

‘‘என் தந்தையார் நைனா சுவாமிகள் பாம்பன் சுவாமிகளின் நேரடி சீடர். 1918 முதல் 1929 வரை அவரோடு இருந்தார். சுவாமிகள் முக்தியடைந்த பிறகு சிதம்பரத்தில் பாம்பன் சுவாமிகள் தங்கியிருந்த இடத்தை வாங்கி, ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மடாலயம் கட்டினார். சுவாமிகளுக்கு இங்குதான் முதன் முதலாக திருவுருவச் சிலை அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுவாமிகள் பயன்படுத்திய வஸ்திரம், பாதுகை, ருத்ராட்ச மாலை, விபூதிப் பை எல்லாம் இங்கு வைத்து வழிபடுகிறோம்’’ என்கிறார் டாக்டர் என்.பசுபதி. இவர், கழுதூர் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் முதல்வர் மற்றும் சிதம்பரம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மடாலயத்தின் நிர்வாகி.

தன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு அற்புதத்தை அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்... ‘‘1986ம் ஆண்டு. அப்போது என் தந்தைக்கு 85 வயது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். தந்தை குணமடைய வேண்டி நாங்கள் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவம் பாராயணம் செய்தோம். அப்போது பாம்பன் சுவாமிகள் தோன்றி, என் தந்தையின் கை, கால்களை தன் கைகளால் நீவி விட்டார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் என் அப்பா எழுந்து நடந்தார். என் கண் முன்னால் நடந்த இந்த அற்புதத்துக்குப் பின் நான் பாம்பன் சுவாமிகளின் தீவிர பக்தரானேன். பாம்பன் சுவாமிகளை நம்புவோர் வாழ்வின் எல்லா நலனையும் பூரணமாக அவர் கவனித்துக்கொள்வார்.’’
குமாரஸ்தவம்
ஓம் ஷண்முக பதயே நமோ நம: ஓம் ஷண்மத பதேயே நமோ நம:
ஓம் ஷட்க்ரீவ பதேயே நமோ நம:
ஓம் ஷட்கிரீட பதேயே நமோ நம:
ஓம் ஷட்கோண பதேயே நமோ நம:
ஓம் ஷட்கோச பதேயே நமோ நம:
ஓம் நவநிதி பதேயே நமோ நம:
ஓம் சுபநிதி பதேயே நமோ நம:
ஓம் நரபதி பதேயே நமோ நம:
ஓம் சுரபதி பதேயே நமோ நம:
ஓம் நடச்சிவ பதேயே நமோ நம:
ஓம் ஷடக்ஷர பதேயே நமோ நம:
ஓம் கவிராஜ பதேயே நமோ நம:
ஓம் தபராஜ பதேயே நமோ நம:
ஓம் இகபர பதேயே நமோ நம:
ஓம் புகழ்முநி பதேயே நமோ நம:
ஓம் ஜயஜய பதேயே நமோ நம:
ஓம் நயநய பதேயே நமோ நம:
ஓம் மஞ்சுள பதேயே நமோ நம:
ஓம் குஞ்சரி பதேயே நமோ நம:
ஓம் வல்லீ பதேயே நமோ நம:
ஓம் மல்ல பதேயே நமோ நம:
ஓம் அஸ்த்ர பதேயே நமோ நம:
ஓம் சஸ்த்ர பதேயே நமோ நம:
ஓம் ஷஷ்டி பதேயே நமோ நம:
ஓம் இஷ்டி பதேயே நமோ நம:
ஓம் அபேத பதேயே நமோ நம:
ஓம் சுபோத பதேயே நமோ நம:
ஓம் வியூஉற பதேயே நமோ நம:
ஓம் மயூர பதேயே நமோ நம:
ஓம் பூத பதேயே நமோ நம:
ஓம் வேத பதேயே நமோ நம:
ஓம் புராண பதேயே நமோ நம:
ஓம் பிராண பதேயே நமோ நம:
ஓம் பக்த பதேயே நமோ நம:
ஓம் முக்த பதேயே நமோ நம:
ஓம் அகார பதேயே நமோ நம:
ஓம் உகார பதேயே நமோ நம:
ஓம் மகார பதேயே நமோ நம:
ஓம் விகாச பதேயே நமோ நம:
ஓம் ஆதி பதேயே நமோ நம:
ஓம் பூதி பதேயே நமோ நம:
ஓம் அமார பதேயே நமோ நம:
ஓம் குமார பதேயே நமோ நம:

(இந்த குமாரஸ்தவத்தை தினமும் காலையிலும் மாலையிலும் முருகனின் திருவுருவப் படத்தின் முன் நெய் தீபமேற்றி வைத்து பாராயணம் செய்ய துன்பங்கள் தொலைந்து எண்ணியது நிறைவேறும்.)

எஸ்.ஆர்.செந்தில்குமார்