ஜனதா அடுப்புசில நாட்களுக்கு முன்பு தூர்தர்ஷன் அலைவரிசைச் செய்திகளில் ஒரு தகவல் ஒரேயொரு முறை சொல்லப்பட்டது. புது டெல்லி நகர எல்லைகளுக்குள் மண்ணெண்ணெய் பயன்பாடு முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டு விட்டது. அந்த நகரத்தில் உள்ள எல்லா அடுப்புகளிலும் இனி எரிவாயு மட்டும்தான் பயன்படுத்தப்படும்! எனக்கு உடனே பார்லிமென்ட் தெருவோர நடைபாதைகளில் இயங்கிய டீக்கடைகள் மனதில் தோன்றின. நான் சொல்வது இருபது, முப்பது வருடத்துக் கதை.
நான்கு டிகிரி குளிரிலும், நாற்பத்தைந்து டிகிரி வெயிலிலும் இக்கடைகள் காலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை செயல்படும். பிடி வைத்த ஒரு பெரிய அலுமினிய பாத்திரத்தில் டீ பொங்கி வந்த வண்ணம் இருக்கும். ஒரு கலைஞனுக்குரிய தீர்மானத்துடன், டீ போடுபவர் அவ்வப்போது டீத்தூள் ஒரு சிறு பிடி போடுவார். அவருடைய சிறு பெண்ணும் பையனும் தண்ணீர், டீத்தூள், சர்க்கரை எடுத்துத் தருவார்கள். அவர் பாத்திரத்தில் பொங்கப் பொங்க இருக்கும் டீயை கிளாஸ் தம்ளர்களில் விட்ட வண்ணம் இருப்பார்.
அக்கம் பக்கம் அலுவலகங்களிலிருந்து ஆள் வந்தால், மொத்தமாக மூன்று டீ, நான்கு டீ போய்விடும். முன்னால் நிற்கும் நபர்களுக்கு வரிசைக் கிரமமாக டீ தரப்படும். நடுநடுவில் அவருடைய ‘பிரைமஸ்’ கெரஸின் ஸ்டவ்வை ‘பம்ப்’ செய்வார். உத்தேசமாக ஒரு நாளைக்கு ஆயிரம் தம்ளர் டீ விற்பனையாகும். அவருடைய குடும்பம் அவர் கடைக்குப் பின்னால் உள்ள சிறு துணி மறைவில் வாழும். அவருடைய சொந்த வாழ்க்கைத் தேவை ஐந்து. கோதுமை மாவு, உருளைக்கிழங்கு, வெங்காயம், சிறிது உப்பு, பச்சை மிளகாய்.
அந்த நாளில் வீட்டில் விறகு, கட்டைக்கரி, தவிர மண்ணெண்ணெய் அடுப்புகளும் பயன்படுத்துவார்கள். இந்த மண்ணெண்ணெய் அடுப்புகளில் நாற்றம் தவிர இன்னொரு பெரிய பிரச்னை, அடுப்புக்குத் திரி போடுவது! இமாலய மலையை ஏறுவது போல சாகசம். பத்துத் திரிகள். அவற்றை பர்னரின் பத்து மெல்லிய குழாய்களில் நுழைக்க வேண்டும். அவை பர்னர் மேல்புறத்தில் சரிசமமான உயரத்தில் இருக்க வேண்டும். மண்ணெண்ணெய் கொண்டிருக்கும் அடிப்பாகம் அடிக்கடி துருப்பிடித்துக் கொள்ளும்.
நான் ஒரு சமயம் நாகர்கோவில் போயிருந்த சமயத்தில் ஒரு கடையில் அலுமினிய அடிப்பாகம் கொண்ட ஸ்டவ் பார்த்தேன். உடனே வாங்கி விட்டேன். ‘‘இதெல்லாம் சென்னையில் கிடைக்காதா’’ என்று சுந்தர ராமசாமி கேட்டார். ‘‘கிடைக்கலாம். ஆனால் தேடிக் கொண்டு போக வேண்டும். ஒழுகுகிற ஸ்டவ்கள் ஏராளம் எங்கள் வீட்டில் ஒரு மூலையை அடைத்துக் கொண்டிருக்கின்றன’’ என்றேன். தகர ஸ்டவ்கள் ஓட்டையாகி விடுவதன் காரணம், கலப்பட மண்ணெண்ணெய். அதை எங்கெங்கோ ஓடியாடி இடித்துப் புகுந்து வாங்கி வர வேண்டும். (அன்று மிக எளிய வாழ்க்கை வாழக்கூட மக்கள் அனைவரும் எவ்வளவு பாடு பட வேண்டியிருந்தது என்பது இன்றைய தலைமுறையினரால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத விஷயம்!)
அந்த நாளில்தான் ‘டெல்லியில் ஜனதா ஸ்டவ் என்று புதிதாக வந்திருக்கிறது, சமையல் பாதி நேரத்தில் முடிந்து விடுகிறது’ என்ற செய்தி வந்தது. ஜனதா ஸ்டவ்வுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உண்மையில் அப்போது ஜனதாவும் கிடையாது, ஆம் ஆத்மியும் கிடையாது. டெல்லி எழுத்தாளர் ஆதவன் ஒரு வாரம் சென்னை வருவதாக எழுதியிருந்தார். நான் அவரை ஒரு ஜனதா ஸ்டவ் வாங்கி வரச் சொன்னேன். அவருக்குச் சிரமம் கொடுக்கக்கூடாது என்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் போனேன். வண்டி மூன்று மணி நேரம் தாமதம். அதைவிட வருத்தம், ஆதவன் அடுப்பு வாங்கி வரவில்லை!
ஆட்டோ ஏற்பாடு செய்து கொண்டோம். அந்த நாளில் மீட்டர் போடுவார்கள்... ஆனால் ஒரு பை இருந்தால் கூட லக்கேஜ் என்று அதிகப்படி வாங்கிக் கொள்வார்கள். வண்டி வேறெங்கோ திரும்பியது. ‘‘பெட்ரோல் போடணுங்க’’ என்று வண்டி ஒரு இண்டியன் ஆயில் பெட்ரோல் நிலையத்துக்குப் போய் நின்றது. அங்கு ஒரு மூலையில் ஜனதா அடுப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன! டெல்லி விலையைவிட பத்து ரூபாய் அதிகம்.
ஜனதா அடுப்பில் ஒரு கூடுதல் பாகம். ஸ்டவ் திரிகளைச் சுற்றி உள்ள பர்னருக்கு வெளிப்புறத்தில் சூடு வீணாகாதபடி வட்டமான ஒரு கூடு. இன்று யாராவது பார்த்தால், ‘‘இது என்ன பெரிய விஷயம்’’ என்று கேட்கக் கூடும். ஆனால் முழுக்க முழுக்க மண்ணெண்ணெய் அடுப்பை நம்பியவர்களுக்குச் சமையல் நேரம் பத்து நிமிடம் குறைந்தாலும் மிகப் பெரிய உதவி. அதன் பின்னர் நானே டெல்லி செல்ல வேண்டியிருந்தது.
மூன்று ஜனதா ஸ்டவ்கள் வாங்கி வந்தேன். என் உறவினர்களுக்குப் பல, ஆனால் மிகச் சிறிய தேவைகள். டெல்லி கூடையும் அதில் உண்டு. இது ரயில் பயணத்தின்போது உணவு எடுத்துச் செல்ல மிகவும் வசதியானது. அப்புறம் டெல்லி கட்டில். அதே மாதிரி சென்னையிலும் கிடைக்கலாம். ஆனால் நூறு ரூபாய்க்குக் கிடைக்குமா? ஆனால் என்னதான் சாமர்த்தியமாக வாங்கினாலும் போர்ட்டர் செலவு இரு மடங்கு. இதைச் சொன்னால், ‘‘நீங்கள் எப்படியும்தான் போர்ட்டர் வைக்கப் போகிறீர்கள்’’ என்பார்கள். இவர்கள் மூலம் எனக்கு டெல்லி பற்றி நிறையத் தெரிய வந்தது.
புது டெல்லி ஸ்டேஷன் அருகேயே பஹாட்கஞ்ச் என்று ஒரு பகுதி. அங்கே ஒரு தெரு முழுக்க இரும்புப் பொருள்கள் விற்பார்கள். ஒவ்வொரு கடையும் ஒரு மாதிரி கட்டிலைத் தயாரிக்கும். அதே போல நாற்காலிகள். நான் என் நான்கு டெல்லிப் பயணங்களில் ஏழெட்டு ஜனதா ஸ்டவ்கள், அரை டஜன் கட்டில்கள், முப்பது மோடாக்கள், இருபது நாற்காலிகள் வாங்கி வந்திருப்பேன். எல்லாம் உறவினர்களுக்குத்தான். தீர்மானமாக ‘‘முடியாது’’ என்று சொல்லத் தெரியாததால் போர்ட்டரிடம் திட்டு வாங்கி, சக பயணிகளிடம் சண்டை போட்டு அவதிப்படுவேன். ரயிலில் டெல்லியிலிருந்து சென்னைக்கு குறைந்தது முப்பது மணி நேரப் பயணம்.
முப்பது மணி நேரம் குறைந்தது எட்டு பயணிகளின் குரோதக் கண்களில் பட்டபடி பயணம் செய்வது எளிதல்ல. இன்னும் ஒரு பயணியாவது என் மாதிரி ஒரு நாற்காலி வாங்கி வந்தால் என் பயணம் சிறிது ஆறுதல் தரும். ‘‘அவரும்தான் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்’’ என்று எனக்குத் துணை சேர்த்துக் கொள்ள முடியும். ஒருமுறை கூட இல்லை. ஆரம்பத்தில் எரிவாயு அடுப்புகளுக்கு ஏதேதோ எதிர்ப்புகள். அதை வாங்கிய பிறகும் ஜனதா ஸ்டவ் இருந்தது. இன்றும் அதைப் பயன்படுத்துபவர்கள் இருப்பார்கள்.
(பாதை நீளும்...)
அன்று மிக எளிய வாழ்க்கை வாழக்கூட மக்கள் அனைவரும் எவ்வளவு பாடு பட வேண்டியிருந்தது என்பது இன்றைய தலைமுறையினரால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத விஷயம்!
இரு பத்திரிகைகள்* காட்சிப் பிழை: இரண்டு ஆண்டுகளாக வெளிவருகிறது. திரைப்படம் பற்றித் தீவிரமாக விவாதிக்கும் மாதப் பத்திரிகை. பேராசிரியர்கள் பொது மக்களை ரசிகர்களாக அணுகாமல், அவர்களையும் ஆசிரியர்களாக அணுகும் முயற்சி. சில இடங்களில் பொக்கிஷம், மர்மம் போன்ற சொற்கள் சற்று செய்திப் பத்திரிகை தளத்திற்கு எடுத்துச் சென்றாலும், தகவல்கள், விவாதங்கள் தீவிரமான வாசகன் யோசிக்க வழி செய்யும். உதாரணத்திற்கு, செல்லம் என்ற நடிகை பற்றிய கட்டுரை. அவருக்கு நடிப்பு இயல்பானதாக அமைந்தாலும், அவர் உள்ளூர எவ்வளவு வேதனையை மூடி மறைத்து அந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார் என்று எளிதில் தெரிந்து கொள்ளமுடியாது. காட்சிப்பிழை, 28, அசோக் நகர் பிரதான சாலை, டாக்டர் அம்பேத்கர் சாலை, கோடம்பாக்கம், சென்னை600024.
* தளம்: இதுவும் ஒரு தீவிரமான காலாண்டிதழ். இதன் முக்கிய அக்கறைகள் தற்கால இலக்கியம், நாடகம். ஆசிரியர் பாரவி. நானறிந்து இவர் எழுதிய ஒரு நல்ல, சிறிய நாடகம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. ‘தளம்’ மிக எளிய வசதிகளுடன் இவ்வளவு வித்தியாசமாக இதழ் தயாரிக்க முடியுமா என்று வியப்பளிக்கிறது. சமீபத்திய இதழில் கேபிரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றி இரு நல்ல கட்டுரைகள் உள்ளன. தளம் காலாண்டிதழ், 46/248, பீட்டர்ஸ் சாலை, சென்னை600014.
அசோகமித்திரன்