தமிழ் ஸ்டுடியோ அருண்
பறிக்கப்படும் பால்யம்...
பார்க்கப் பார்க்க சலிப்பு ஏற்படுத்தாத இயற்கை அழகுகள் கடலும் மழையும். ரயில் போன்ற சில மனிதக் கண்டுபிடிப்புகளும் இப்படி சலிப்பற்ற பேரானந்தம் தருபவை. இதற்கு இணையான அனுபவத்தைத் தரும் உயிருள்ள ஜீவன்கள், குழந்தைகள்தான். குழந்தைப்பருவம் என்பது மனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க போராடுவதற்கான கட்டற்ற ஆற்றலை உருவாக்கும் முதல்நிலைப் பருவம்.
ஆனால் வறுமை, உலகமயமாக்கல், தனி மனித உறவுகளின் சிதைவுகள், ஒழுங்கற்ற பொருளாதார வளர்ச்சி இவையெல்லாம் உலகம் முழுக்க பல குழந்தைகளின் பால்யத்தைப் பறித்து, அவர்களை கூலிக்காரர்களாகவும், குழந்தைத் தொழிலாளர்களாகவும் மாற்றிவிட்டன.
2001ம் ஆண்டு தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இருக்கும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 1 கோடியே 26 லட்சம். இதில் 1 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் அபாயகரமான வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு சொல்கிறது. ‘அபாயகரமான வேலை’ என்பது வளர்ந்த மனிதர்களை மட்டுமே கணக்கில் கொண்டு வரையறை செய்யப்படுவது.
குழந்தைகளுக்கு எது அபாயகரமானது என்று எப்படி வரையறை செய்ய முடியும்? குழந்தைகள் வேலை செய்வதே அபாயகரமானது. குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவதால், அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சி தடைபடுகிறது. எதிர்பாராத சிதைவுகளை அது ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமான குழந்தைகள்தான், ஆரோக்கியமான சமூகத்திற்கான வித்து. ஆனால் நாம் விதைகளில் விஷத்தைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறோம்.
குழந்தைத் தொழிலாளர்களை மையப்படுத்தி, கலைத்தன்மையுடன் அதிக படைப்புகள் தமிழ் குறும்படச் சூழலில் வெளியாகவில்லை. குறைந்தபட்ச கலைத்தன்மையுடன் வெகு சில படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்றுதான், ‘தமில்’. சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டத்தில், தமிழ்நாட்டின் காரைக்குடி பகுதியில் வயதான தம்பதிகளுக்கு பணிவிடை செய்ய தொடர்ச்சியாக சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
ஆனால் வீட்டோடு தங்கி வேலை செய்யும் சிறுவர்கள், அந்த வீட்டில் அதிக நாட்கள் இருக்க முடியாமல் ஓடிப் போய் விடுகிறார்கள். எதனால் இப்படி நேர்கிறது என கேள்விகள் எழாது. காரணம், வீட்டில் இருந்த பொருட்களையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்கள் என்று முதலாளியம்மா எப்போதும் போல் சித்தரித்து விடுவாள்.
இப்படிப்பட்ட சூழலில், புதிதாக ஒரு சிறுமியை அந்த வீட்டில் வேலை செய்ய அழைத்து வருகிறார் ஒரு தரகர். அவள் வீட்டோடு தங்கி வேலை செய்கிறாள். சிறப்பாக வேலை செய்து வரும் தமில், அங்கிருக்கும் புகைப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு, தன்னையும் அப்படி புகைப்படம் எடுத்துத் தர வேண்டும் என்று கேட்கிறாள். முதலாளியம்மாவும் சரி என்று சொல்கிறாள். ஒருநாள் தமிலும் முதலாளியம்மாவும் நகரத்திற்கு வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, கிராமத்திற்கு திரும்பிச் செல்கிறார்கள்.
புகைப்படம் வந்துவிட்டதா, வந்துவிட்டதா என்று தமில் நாள்தோறும் முதலாளியம்மாவை நச்சரிக்கிறாள். ஒரு நாள் புகைப்படம் பிரின்ட் செய்யப்பட்டு வீட்டிற்கு வருகிறது. அதற்கடுத்து நடக்கும் சம்பவங்களும், உரையாடல்களும் சிறுவர்களின் மனச்சித்திரத்தை பெரியவர்களுக்கு உணர்த்துகிறது.
இந்த குறும்படத்தின் முதல் ஷாட், முதல் காட்சியே முதலாளியம்மாவின் பார்வையில் இருந்து நகர்கிறது. எதிரில் இருப்பவர்கள் வெறுமனே பகடைக்காயாக மட்டுமே பயன்படுத்தப்படுவார்கள் என்பதை முதல் ஷாட் மூலம் இயக்குனர் உணர்த்தி விடுகிறார். சிறுமி தமில், ‘‘எங்கள் கிராமத்திலேயே எனக்கு மட்டும்தான் பெயர் எழுதத் தெரியும்’’ என்று சொல்லி விட்டு, ‘மிதப்புல்’ என்கிற தன்னுடைய கிராமத்தின் பெயர்ப் பலகையிலிருந்து எப்படி தன் பெயரான தமில் என்பதை எழுதக் கற்றுக்கொண்டாள் என்பதை விவரிக்கும் இடம்,
குழந்தைகளின் அறியாமையையும், அவர்களின் குழந்தைத்தனத்தையும் அழுத்தமாக பார்வையாளர்களுக்கு சொல்லும் காட்சியாக இருக்கிறது. புகைப்படம் எடுக்கும் ஸ்டுடியோவில் ‘‘போஸ் கொடு’’ என்று சொன்னதுமே, இரண்டு கைகளையுமே உயர்த்தி தமில் போஸ் கொடுக்கும் காட்சி, அன்றைய காலகட்ட அரசியலை சிறுவர்கள் எவ்விதம் உள்வாங்கி இருக்கிறார்கள் என்பதை சிலேடையாக சொல்லிச் செல்கிறது. பெரியவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்து கொண்டிருக்கும் சூழலில் கூட, குழந்தைகள் எப்படி தங்களின் பால்யத்தை காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிறார்கள் என்பதை இந்த இரண்டு காட்சிகளும் உணர்த்துகின்றன.
முதலாளியம்மாவாக நடித்திருப்பவர் அந்தக் காலகட்ட காரைக்குடி வட்டாரப் பெண்களின் ஆதிக்க மனநிலையை அநாயாசமாக வெளிப்படுத்துகிறார். சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகருக்கு பணம் கொடுத்துவிட்டு ஈசி சேரில் அமர்ந்துகொள்ளும் முதலாளியம்மாவிடம், ‘‘பணம் போதாதும்மா’’ என்று தரகர் பணிவாகக் கேட்கும்போது, கண்களை மூடிக்கொண்டு, ‘‘பொண்ணு நல்லா வேலை செஞ்சா பார்த்துக்கலாம், போ... போ...’’ என்று அதட்டும் ஒரு காட்சி போதும், அவரது ஆதிக்க மனநிலையை பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல.
குறும்படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு புகைப்படத்தை தமிலிடம் கொடுத்துவிட்டு, ‘‘இன்னொன்றை நான் வைத்துக்கொள்கிறேன்’’ என்று கூறி முதலாளியம்மா உள்ளே சென்று விடுவாள். ‘‘ஏன் இந்தப் பொண்ணுக்கு நீ இவ்ளோ செலவு பண்றே’’ என்கிற கணவனின் கேள்விக்கு அவள் பதில் அளித்துக்கொண்டிருக்கும்போது, புகைப்படத்தை பிரித்துப் பார்க்க தமில் முயற்சி செய்வாள். ஆனால், ‘தான் ஏன் தமிலை புகைப்படம் எடுக்க அழைத்துச் சென்றேன்’ என்று முதலாளியம்மா அவளது கணவனிடம் விளக்கிச் சொன்னவுடன், தமில் அந்தப் புகைப்படத்தைப் பிரித்துப் பார்க்காமலேயே கசக்கி எறிந்து விடுவாள்.
இந்தக் காட்சியில் தமில் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி, எதிர்வினையாற்றி இருக்கும் விதம் மேலோட்டமாகவே இருக்கிறது. குறும்படத்தின் மைய சரடை விளக்கும் ஒரு காட்சியில், எல்லோரது பங்கும் மிக முக்கியமானவை. பிரான்சின் மிக முக்கியமான இயக்குனரான த்ரூபோ இயக்கிய ‘400 ப்ளோஸ்’ திரைப்படத்தில், தாய்க்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடலுக்கு, சிறுவன் எதிர்வினையாற்றி இருக்கும் காட்சியை இந்த இடத்தில் நாம் நினைவு கூர வேண்டும்.
முதலாளியம்மா தன் கணவனிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, அது தன்னுடைய காதில் விழுவதை, அல்லது எதேச்சையாக அந்த உரையாடலை தான் கவனிப்பதை, சிறுமி பார்வையாளர்களுக்கு உணர்த்த தவறி விடுகிறாள். எதிர்வினையாற்ற வேண்டிய கால அளவு, முகத்தின் ஏற்ற இறக்கங்கள், இதெல்லாம் காட்சியின் உயிர்ப்புத் தன்மைக்கு மிக முக்கியமான கூறுகள்.
‘தமில்’ குறும்படத்தின் கதை நிகழும் காலகட்டம் 1959. பயன்படுத்தப்பட்ட வண்ணங்களும், ஒளியமைப்பும், பின்னணியில் இருக்கும் பொருட்களும் நமக்கு அந்த காலக்கட்டத்தை உணர்த்துகின்றன. இதன் பின்னிருக்கும் உழைப்பு அசாத்தியமானது. காரணம், இந்தக் கதை நிகழ்காலத்தில் நடைபெறுவதாக பார்வையாளர்கள் உணர்ந்து விட்டால், கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். அதனை உணர்ந்து, கலை இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் பங்காற்றியிருக்கிறார்கள்.
படம்: தமில் இயக்கம்: வசந்த் குமார் நேரம்: 09.57 நிமிடங்கள்
ஒளிப்பதிவு: ராம் நிவாஸ் படத்தொகுப்பு: பிரகாஷ் ஒலி: சாந்த குமார்
பார்க்க: www.youtube.com/watch?v=ZjMw4pWPAjsm
ஆரோக்கியமான குழந்தைகள்தான், ஆரோக்கியமான சமூகத்திற்கான வித்து. ஆனால் நாம் விதைகளில் விஷத்தை பாய்ச்சிக் கொண்டிருக்கிறோம்.
‘‘குழந்தைத் தொழிலாளர்களின் நிலையை, அவர்களின் மனச் சிதைவை குறும்படமாக எடுக்க நினைத்து, ஒரு கதையைத் தேடிக் கண்டடைந்தேன். அதற்கு திரைக்கதை வடிவம் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், 1959ல் எழுதப்பட்ட ஒரு கடிதம் கிடைத்தது. அந்தக் கடிதமே என்னை மேலும் உத்வேகப்படுத்தியது’’ என்கிறார் இந்தக் குறும்படத்தின் இயக்குனர் வசந்த் குமார். குறும்படத்திற்காக பயன்படுத்தப்பட்ட செட்டி நாட்டு வீடு ஒன்றில், இதற்கு முன்னரே ஒரு திரைப்படம் எடுத்திருக்கிறார்கள்.
அப்போது அவர்கள் நிறைய சேதப்படுத்தி விட்டார்களாம். அதனால் வீட்டைப் படப்பிடிப்பிற்காக கொடுத்தவர்கள், தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருந்திருக்கிறார்கள். இதனால் ஒரேநாளில் இந்தப் குறும்படத்தை எடுக்க வேண்டிய நிர்பந்தம் இயக்குனருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே அவசரத்துக்கு படம் முழுக்க தன்னுடைய குடும்பத்தாரையே பயன்படுத்தியிருக்கிறார். மேலும், நண்பர்கள் இல்லையென்றால் இந்த குறும்படமே இல்லை என்று நெகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார். படைப்பாளிகளுக்கு பலமே நண்பர்கள்தானே!
(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி