உதவி



‘‘என்னங்க... திடீர்னு கேஸ் தீர்ந்துடுச்சு. சிலிண்டர் வர இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகுமாம்!’’  கணவன் வெங்கட்டிடம் பதற்றப்பட்டாள் கார்த்திகா.

அந்தக் குடித்தனத்திலேயே வெங்கட்டுக்கு பக்கத்து வீடுதான் ரொம்பப் பழக்கம். அவசர உதவி என்றால் அங்குதான் கேட்பான். வேறு யாரோடும் அதிகம் ஒட்ட மாட்டான்.
‘‘அவங்ககிட்ட எக்ஸ்ட்ரா சிலிண்டர் கேட்டியா?’’

‘‘கேட்டுட்டேங்க. அவங்களுக்கே நேத்து கேஸ் தீர்ந்துடுச்சாம். கஷ்டப்பட்டுத்தான் சமாளிக்கிறாங்களாம்! இல்லைன்னுட்டாங்க!’’  அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கதவு தட்டப்பட்டது. மேல் போர்ஷனில் குடியிருக்கும் கணேஷ் நின்றிருந்தார். பத்துநாள் முன்புதான் அவர் இ.பி பில் கட்ட கொஞ்சம் பணம் குறைவதாக வெங்கட்டிடம் கைமாத்து கேட்டு வந்தார். ‘இல்லை’ என்று சொல்லி அனுப்பி விட்டான் வெங்கட். ‘நாமளே சிக்கல்ல இருக்கோம்...

இப்போ என்ன உதவி கேட்டு வந்திருக்காரோ..!’ அலட்சியமாய் அவரை ஏறிட்டான் வெங்கட். ‘‘சார், உங்க மிசஸ் பக்கத்து வீட்ல பேசிட்டிருந்ததைக் கேட்டேன். எங்க கிட்ட எக்ஸ்ட்ரா சிலிண்டர் இருக்கு. வேணும்னா எடுத்துக்கங்க. ஒரே குடியிருப்பு இருந்துக்கிட்டு சின்னச் சின்ன உதவிகள் கூட செய்துக்கலைன்னா எப்படி?’’ என்றார் அவர். ‘‘தேங்க்ஸ் சார்!’’ என்றான் வெங்கட் வெட்கித் தலைகுனிந்தபடி!        
      
து.செல்வராஜு