எழுதுவது என்பது துயரமானது



உலகில் அதிக மொழிகளில், அதிகம் பேரால் படிக்கப்பட்ட எழுத்தாளர்களில் முதன்மையானவர் காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸ். கடந்த வாரம் மறைந்த அவர் அளவுக்கு தமிழ் இலக்கியவாதி களை பாதித்தவர்கள் யாருமில்லை.

‘மேஜிக்கல் ரியலிஸம்’, ‘லத்தீன் அமெரிக்க எழுத்துகள்’ என பல வார்த்தைகள் இங்கே புழங்கக் காரணமாக இருந்தவர். தனது ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நூலுக்காக நோபல் பரிசு பெற்றவர். இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அவரது ‘லிவிங் டு டெல் த டேல்’ என்ற சுயசரிதையிலிருந்து சில பகுதிகள் இங்கே...

* எனது ரூம் மேட்களில் ஒருவரான, மருத்துவ மாணவர் டொமிங்கோ மானுவெல் வேகா எனக்கு அவ்வப்போது புத்தகங்கள் படிக்கக் கொடுப்பார். அப்படி அவர் ஒருமுறை கொடுத்தது, காஃப்கா எழுதிய ‘மெட்டமார்பசிஸ்’. இன்று உலக இலக்கியங்களில் ஒன்றாக இருக்கும் அந்தப் புத்தகம் அதன் முதல் வாக்கியத்திலிருந்தே எனது வாழ்வின் திசையைத் தீர்மானித்துவிட்டது. ஒரு படைப்பாளி தனது படைப்பில் எந்த உண்மையையும் நிரூபணம் செய்யவேண்டும் என்கிற அவசியமில்லை. ஒரு உண்மையை எழுதும்போது அவரது திறமை, அவரது குரலின் உறுதி ஆகியவற்றைத் தவிர வேறு ஆதாரங்கள் எதுவும் அதற்குத் தேவையில்லை என்பதை அந்தக் கதை எனக்கு உணர்த்தியது. அந்தக் கதையே என்னை எழுத்தாளன் ஆக்கியது.

* அந்தக் கதையைப் படித்த உத்வேகத்தில் ஒரு சிறுகதை எழுதினேன். ‘எல் எஸ்பெக்டேடர்’ என்ற பத்திரிகை அலுவலகத்தில் அதைக் கொடுத்தேன். இரண்டே வாரங்களில் அந்தப் பத்திரிகையின் முகப்பில் பெரிதாக ‘த தேர்டு ரிசைனேஷன்’ என்ற எனது சிறுகதையின் தலைப்பு அச்சிடப்பட்டுக் கடையில் தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அந்தப் பத்திரிகையை வாங்குவதற்கு ஐந்து ஸெண்டோவா என்னிடம் அப்போது இல்லை. எனது வறுமையின் மிகவும் வெளிப்படையான அடையாளம் அது. தெருவில் நடந்துபோன ஒருவரது கையில் அந்தப் பத்திரிகையை இருந்ததைப் பார்த்தேன். அவரிடம் கெஞ்சிக் கேட்டு அதை வாங்கிவந்து எனது கதையை வரி விடாமல் படித்தேன்.

* எழுதுவது இன்பமானது மட்டுமல்ல... மிகவும் துயரமானதும்கூட! மெக்சிகோவில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து என் வாழ்வைத் துவக்கினேன். விடிகாலை இரண்டு, மூன்று மணிக்குத்தான் செய்தித்தாள் வேலைகள் முடியும். அதன்பிறகு எனது படைப்பை எழுத ஆரம்பிப்பேன். ஒருநாளில் நான்கைந்து பக்கங்கள் எழுத முடியும். ஆனால் நாள் ஆக ஆக எழுதுகிற வேகம் குறைந்து விட்டது. இதற்குக் காரணம் வயதோ, முதுமையோ அல்ல... பொறுப்புணர்வு! ‘நீங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் இப்போது மிகவும் கனமுள்ளதாக மாறிவிடுகிறது. அது ஏராளமான மனிதர்களை பாதிக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினால், எழுதுவது தானாகக் குறைந்துவிடும்.

* என்னுடைய பாட்டி மிகவும் பயங்கரமான விஷயங்களைப் பற்றி ஏராளமான கதைகளைச் சொல்வார். நம்ப முடியாத விஷயங்களையும் பக்கத்திலிருந்து பார்த்தது போலச் சொல்வார். சந்தேகமே வராதபடி அவர் அவற்றைச் சொல்கிற விதமும், அவர் பேச்சில் தெரியும் படிமங்களின் செறிவும் அவரது கதைகளை மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தவையாக மாற்றின. எனது ‘ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட்’ நாவலை எனது பாட்டியின் யுக்திகளைக் கொண்டு தான் எழுதினேன்.

*மேஜிக்கல் ரியலிஸம் என்பதை மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், என் படைப்புகளின் அத்தனை வாக்கியங்களும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு எழுத்தாளனின் கடமை நன்றாக எழுதுவது மட்டுமே!

* நான் எப்போதுமே ஒரு பிம்பம் அல்லது காட்சியிலிருந்துதான் எழுதத் தொடங்குகிறேன். என்னுடைய சிறுகதைகளிலேயே சிறந்ததென நான் கருதும் ‘ட்யூஸ்டே சியஸ்டா’ என்ற கதை, ஒரு பெண்மணியும் ஒரு இளம்பெண்ணும் கறுப்பு உடையணிந்து கறுப்புக் குடையை பிடித்தபடி, யாருமற்ற நகரத்தில், வாட்டியெடுக்கும் வெயிலில் நடந்து போனதைப் பார்த்தபோது தோன்றியது. தனது பேரனை அழைத்துக் கொண்டு ஒரு கிழவர் சவ ஊர்வலமொன்றில் போனதைப் பார்த்து ‘லீஃப் ஸ்டார்ம்’ உருவானது.

* இன்ஸ்பிரேஷன் என்பது ரொமான்ட்டிக்குகளால் நாசமாக்கப்பட்ட வார்த்தை. அது ஒரு தருணம்... அவ்வளவுதான்! நீங்களும் நீங்கள் எழுத நினைக்கும் கதைக்கருவும் ஒன்றிப் போகிற ஒரு கணம் அது. நீங்கள் ஒரு விஷயத்தை எழுத விரும்பியதும் ஒருவிதமான பரஸ்பர பதற்றம் உங்களுக்கும் உங்கள் கதைக்கருவுக்கும் இடையே தோன்றி விடுகிறது. ஒரு கணத்தில் தடைகள் எல்லாமே கரைந்து போய், எல்லா மோதல்களும் தீர்ந்து போய், நீங்கள் கனவுகூட காணாத அந்த விஷயம் உங்களுக்கு நிகழ்கிறது. அந்தக் கணத்தில் எழுதுவதைத் தவிர வேறு எதுவுமே இந்த உலகத்தில் கிடையாது என நினைப்பீர்கள். அதுதான் இன்ஸ்பிரேஷன்.