ஊழலில் திளைக்கும் எட்டு அமைச்சர்களைக் கண்டுபிடித்து களையெடுக்கும் தெனாலிராமனின் சிரிப்பு, சிறப்பு தொகுப்பே ‘தெனாலிராமன்’. இரண்டாண்டு சுமத்தப்பட்ட தனிமைக்குப் பிறகு மீண்டும் ‘ஜெகஜ்ஜால’ வடிவேலு பிரமாண்டமாக எழுந்தருளி இருக்கிறார்.

கேட்டுப் பழக்கப்பட்ட புராதன தெனாலிராமனை எளிய தமிழில், கூடியவரை சுவாரஸ்யத்தோடு கொண்டு வந்ததில் இளைய இயக்குநர் யுவராஜ் தயாளனின் பங்கு மெச்சத்தக்கது. அசல் கலைஞன் வடிவேலுவை மீண்டும் கொண்டு வந்ததற்காகவே அவருக்கு மகிழ்ச்சிப் பூங்கொத்து. விசால செட், ஏராள அமைச்சர்கள், விதவிதமாக மனைவிகள் என இத்தனை கேரக்டர்களையும் அரசாண்ட விதத்தில் டைரக்டருக்கு கூடுதல் சபாஷ்.
ஏழைப் பங்காளனாக வரும் வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ கேரக்டர், சமூகத்தின் எல்லா ஓட்டைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கேட்டுப் பழகிய கதையென்றாலும் அதில் வடிவேலு நடிக்கும்போது கிடைக்கும் புதுமை நிச்சயம் உட்கார வைக்கிறது. புதிதாக சபையில் சேரும் தெனாலிராமன், சீனர்களிடமிருந்து நாட்டை எப்படி காப்பாற்றப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு சுறுசுறு. ஆனால், இவ்வளவு சாவகாசமாக படம் போகும் போக்கைப் பார்த்துக் களிக்கிற ரசிகர்கள் அருகிவிட்டதை இயக்குநர் கவனித்திருக்க வேண்டும்.
மன்னராகவும் தெனாலிராமனாகவும் களை கட்டியிருக்கிறார் வடிவேலு. மிக அரிதான உடல்மொழி கொண்ட கலைஞன் அவர் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமேயில்லை. படத்தில் இன்னொரு அல்ல... இணை நாயகனும் வடிவேலுவே. ஆனாலும் இரண்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் காட்டுவதில் அவருக்கு நிகர் அவரே. மன்னராக கம்பீரத்திலும் நற்பண்பிலும் வசீகரத்திலும் சிரிக்க வைக்கும் அதே ஃப்ரேமில், தெனாலிராமன் காட்டுவது நேரெதிர் கலகலப்பு.
அண்டர் கரன்ட்டாக ஓடும் அரசியல் துணுக்குகளை பேசுவதில் சவட்டி எடுகிறார் மன்னர் வடிவேலு. தெனாலி வடிவேலு கத்திச் சண்டை போடாத குறைதான்... ஆனாலும் தோன்றும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பு ரவுசு.அட்சரசுத்தமாக தமிழே வராத நாக்கில் உயிரைக் கொடுத்து ‘பேசி’ நடித்திருக்கிறார் மீனாட்சி தீட்சித்.
அநியாயத்துக்கு இறங்கிய இடுப்பைக் காட்டினாலும், பதற்றப்பட வைக்காத அழகு. கூட இருக்கும் எட்டு அமைச்சர்களை இன்னும் கொஞ்சம் கவனித்திருக்க வேண்டும். மனோபாலா, பாலாசிங் தவிர அநேகர் உடல்மொழியில் வடிவேலுவுடன் போட்டி போட முடியாமல் திக்கித் திணறுகிறார்கள். சரிக்கு சரியாக போட்டியிருந்தால் இன்னும் வசனங்களில் சிரிப்பு மூட்டியிருக்கலாம். இத்தனை பிரமாண்ட பட்ஜெட்டில் விகட நகரத்தின் கூட்டத்தைக் காட்டியிருக்க முடியாதா என்ன? எண்ணி நூறு பேர்தான் அங்கே இங்கே அலைகிறார்கள்.
முதல் பாதியில் காட்டிய ஜனரஞ்சகத்தை ஏனோ அடுத்த பாதிக்கும் அழைத்துப் போகவில்லை இயக்குனர். இமானின் இசையில் பாடல்கள் செழிக்கவில்லை. வளரும் காலத்தில் இது மாதிரி வித்தியாச படங்கள் கிடைப்பது அரிது. அதில் நன்றாக ஸ்கோர் பண்ணியிருக்க வேண்டாமா இமான்? தெனாலிராமனின் புராதனக் கதைகளில் இன்னும் சுவையானவற்றைத் தேடியிருக்கலாம்.
இருக்கிற வரையில் ராம்நாத் ஷெட்டியின் கேமரா அரண்மனைக் காட்சிகளில் சில்லிடுகிறது. பழைய பாணியில் ‘நறுக்’கான கோணங்களில் படப்பிடிப்பு. வசனங்களை இன்னும் செதுக்கியிருந்தால், நேரத்தைக் குறைத்திருந்தால், ‘தெனாலிராமனை’ கூடுதலாக ரசித்திருக்கலாம். இப்போதைக்கு, இது வடிவேலுவின் ஒன் மேன் ஷோ!
- குங்குமம் விமர்சனக் குழு