
சித்ராவீட்டுக்குள் நுழைந்த அடுத்த விநாடி, ‘‘அம்மா!’’ என ஆவேசமாகக் கத்தினாள். வெளியே வந்தாள் அலமேலு. ‘‘அம்மா உனக்கு இது வெட்கமா இல்ல? அப்பா செத்து முழுசா மூணு வருஷம் ஆகலை. அதுக்குள்ள இந்தக் கோலம். நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போலிருக்கு!’’
‘‘சாவு...’’
‘‘அம்மா!’’
‘‘நிஜமாதாண்டி சொல்றேன். புருஷன் செத்ததும் என்னை நீயோ, உங்க அண்ணனோ காப்பாத்தலை. பெத்தவளை விட மத்தவங்க உங்களுக்கு முக்கியமா போயிட்டாங்க. ஆண்டவன் எனக்கு நல்ல உடம்பைக் கொடுத்திருக்கான், பொழைக்கிறேன்.’’
‘‘அம்மா!’’
‘‘என்னடி அம்மா? அப்பா போயி இந்த மூணு வருஷத்துல உன் வீட்டுக்குக்கும் உன் அண்ணன் வீட்டுக்கும் மாறி மாறி வந்து தங்கிட்டேன். நீயும் சரி, உன் அண்ணியும் சரி... நான் பாரம்தான்னு தெரியப்படுத்திட்டீங்க. அப்போதான் இருக்கிற உடலை வச்சு வாழலாம்... உழைக்கலாம்னு யோசனை வந்தது. தப்பா நடக்கலை... வாடகைத் தாயாய் ஆகும் வாய்ப்பு வந்தது. சுமக்கறேன், வாழறேன்! உங்களுக்கு அவமானமா இருந்தா... பெத்தவங்களைக் காப்பாத்த வழி இல்லாம கடமைக்கு காப்பகத்துல விட்டுட்டோம்னு சொல்லிக்கங்க!’’
சித்ராவின் தலை தானாகக் கவிழ்ந்திருந்தது.
காரை ஆடலரசன்