e கடை



ஆன்லைன் தேங்காய்க்கடை

எதையும் விற்கவும் வாங்கவும் முடிகிற ஆன்லைன் சந்தையில் விவசாயிகள் நல்ல லாபத்துக்கு இப்போது தேங்காய் விற்கலாம்; வியாபாரிகள் நேரடியாக வாங்கலாம். இதற்காக ஒரு இணையதளம் நடத்துகிறார் விஜயகுமார்

‘‘எங்க சொந்த ஊர் கோவைக்குப் பக்கத்தில இருக்கிற ஆனைகட்டி. பெரிய அளவுல தென்னை விவசாயம் நடக்குற ஊர். எங்களுக்கும் மூணு ஏக்கர் தென்னந்தோப்பு உண்டு. 2 மாசத்துக்கு ஒரு வெட்டு. அஞ்சாயிரம் காய் விழும். அப்பா வியாபாரிகிட்ட முன்பணம் வாங்கிடுவார். மார்க்கெட் விலை, டிமாண்ட் பத்தியெல்லாம் அப்பாவுக்குத் தெரியாது. ஆறேழு வருஷமா ஒரே ரேட்தான். ஒரு தேங்காய் 4 ரூபா.

நான் எம்.சி.ஏ. முடிச்சுட்டு பெங்களூருவுல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலைக்குச் சேந்த பிறகு, சமையலுக்குத் தேங்காய் வாங்கும்போதுதான் தெரிஞ்சது... அங்கே ஒரு தேங்காய் 20 ரூபா. மனசு கொந்தளிச்சுப் போச்சு. நாள் முழுவதும் தோப்புக்குள்ளயே கிடந்து உழைக்கிற விவசாயிக்குக் கிடைக்கிறது 4 ரூபா. அதை வாங்கிட்டுப் போய் விக்கற வியாபாரிக்கு 16 ரூபா. அந்த ஆதங்கத்துலதான் http://coconutindia.com ஆரம்பிச்சேன்...’’ - கொங்கு தமிழ் மணக்கப் பேசுகிறார் விஜயகுமார்.

இந்த இணையதளம், விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நேரடிப் பாலம். இதன்மூலம் விவசாயி தன் தோப்பில் விளையும் தேங்காயை நேரடியாக விற்கவும், வாங்க விரும்புபவர்கள் இடத்தரகு இல்லாமல் நேரடியாக வாங்கவும் முடியும். ஒரு பன்னாட்டு ஐ.டி. நிறுவனத்தில் டீம் லீடராகப் பணியாற்றிய விஜயகுமார், அந்த வேலையை விட்டு விட்டு, இந்த இணையதளத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்துக்கொண்டு நாடு முழுதும் சுற்றி வருகிறார்.

‘‘உலகின் மிகப்பெரிய தென்னை உற்பத்தி மண்டலங்கள்ல தமிழ்நாடும் இருக்கு. குறிப்பா, பொள்ளாச்சி, ஆனைகட்டி பகுதிகள். இங்கே கேரளாவுக்கு இணையா தென்னந்தோப்புகள் இருக்கு. இங்க விளையுற இளநீர் ரொம்ப சுவையானது. பெரும்பாலானவங்க சிறு, குறு விவசாயிகள். இவங்களுக்கு உள்ளூர்ல இருக்கிற வியாபாரிங்க முன்பணம் கொடுத்து வச்சிருவாங்க. வெட்டு முடிஞ்சவுடனே, தேங்காயை எண்ணி லாரியில ஏத்திருவாங்க. அதிகபட்சம் 5 ரூபாய்க்கு மேல தேங்காய்க்கு விலை கிடைக்காது. அதே தேங்காய் சென்னையிலோ, பெங்களூருவிலோ 20 ரூபாய்க்குக் குறைவா கிடைக்காது.

எனக்கு விவசாயத்துல நிறைய ஆர்வம் உண்டு. ஆனா இன்னைக்கு எந்த விவசாயியும் தன் பிள்ளையை விவசாயி ஆக்க விரும்புறதில்லை. ‘இதெல்லாம் எங்களோட போகட்டும், நீ ஒழுங்காப் படி’ன்னு சொல்லித்தான் என்னைக் கல்லூரிக்கு அனுப்பினாங்க. எம்.சி.ஏ. முடிச்சதும் பெங்களூருவில பன்னாட்டு நிறுவனத்தில வேலை கிடைச்சுச்சு. நாலு வருஷம் அங்கே வேலை செஞ்சேன். அங்க தேங்காய்க்கு கிடைக்கிற விலை என்னைத் திகைக்க வச்சுச்சு. ஏத்துக்கூலி, இறக்குக்கூலி எல்லாத்தையும் சேத்தாக்கூட அதிகபட்சம் 10 ரூபாய் இருக்கலாம். இத்தனைக்கும் பெங்களூருவுக்கு வர்ற 70% தேங்காய்கள் பொள்ளாச்சி பகுதியில விளையுறதுதான்.

ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கிட்டு பொள்ளாச்சி போய் ஒரு ஆய்வு செஞ்சேன். அங்க வியாபாரி சொல்றதுதான் விலை. வெட்டின தேங்காய் வித்தாப் போதும்னுதான் விவசாயிங்க நினைக்கிறாங்க. பெங்களூருவுக்கு வந்து இங்கே இருக்கிற ஹோட்டல்கள், கேட்டரிங், பல்பொருள் அங்காடிகளுக்குப் போய் ஒரு சர்வே செஞ்சேன். அவங்க எல்லாருமே 18 ரூபாய்ல இருந்து 20 ரூபாய் கொடுத்துத்தான் தேங்காய் வாங்குறாங்க.

‘இதைவிடக் குறைவான விலைக்கு விவசாயிகள் தேங்காய் அனுப்பினா தாராளமா வாங்கிக்கிறோம்’னு எல்லாரும் சொன்னாங்க. பொருள் தயாரா இருக்கு. தேவை இருக்கவங்களும் தயாரா இருக்காங்க. இரண்டையும் இணைக்கணும். இடைத்தரகு இல்லாம இவங்களை இணைக்க ஒரே வழி ஆன்லைன்தான். உடனடியா வேலையில இறங்கிட்டேன். 2 வருடங்களைக் கடந்தாச்சு’’ - சிரிக்கிறார் விஜயகுமார்.

உற்பத்தி செய்வதோடு தங்கள் வேலை முடிந்துவிட்டது என்ற மரபார்ந்த மனநிலையிலிருந்து விவசாயிகள் மாறவில்லை. இணையம் பற்றிய புரிதலும் இல்லை. அந்த நிலையை ஓரளவுக்கு மாற்றியதே விஜயகுமாரின் சாதனை. ‘‘தமிழகத்துல பல பகுதிகள்ல விவசாயிகள் சத்தமில்லாம ஒருங்கிணைஞ்சு செயல்படுறாங்க. அறந்தாங்கி பகுதியில எந்த தென்னை விவசாயியும் தனிச்சு வியாபாரம் பண்றதில்லை. எல்லாரும் ஒரே இடத்துல தேங்காயைக் குவிக்கிறாங்க. வியாபாரிகள் தேடி வந்து, விவசாயிகள் சொல்ற விலைக்கு வாங்கிட்டுப் போறாங்க. சில பகுதிகள்ல விவசாயிகள் இணைஞ்சு தேங்காய் பவுடர், கொப்பரை, எண்ணெய்னு மதிப்புக் கூட்டி விக்கிறாங்க. இதுபோல இணைஞ்சு செயல்படுற விவசாயிகளை சந்திச்சு என் இணையதளத்தைப் பத்தி சொன்னேன். 

பொள்ளாச்சியில இருக்கிற இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தில இருந்து, 1000 விவசாயிகள் அடங்கின டேட்டா பேஸை கொடுத்தாங்க. இப்படி ஊர் ஊராப் போய் விவசாயிகளை சந்திச்சேன். எல்லோருக்கும் இமெயில் ஐ.டி ஓப்பன் பண்ணிக் கொடுத்தேன். அந்தந்த பகுதிகள்ல இருக்கற ப்ரௌசிங் சென்டர்களையே தொடர்பு மையங்களா பயன்படுத்தினேன். ஆறு மாதத்துல 600க்கும் மேற்பட்ட சப்ளையர்கள் இணையத்துக்குள்ள வந்துட்டாங்க.

அடுத்து வாங்குறவங்களை தேடுனேன். இதை விடவும் அது சவாலான வேலையா இருந்துச்சு. முதல் இலக்கு பெங்களூருதான். யாரெல்லாம் மொத்தமா தேங்காய் வாங்கிப் பயன்படுத்துவாங்கன்னு லிஸ்ட் ரெடி பண்ணி அவங்களைத் தொடர்பு கொண்டேன். முதல் மாதத்துலயே 300 பேர் தயாரா வந்தாங்க. இரண்டு தரப்பையும் இணையம் மூலமா இணைச்சேன். தினமும் மார்க்கெட் ரேட்டை அப்டேட் பண்றதால, விவசாயி அந்த விலையை வைத்தே வியாபாரம் பண்றார். இப்போ 1 தேங்காய்க்கு 8 ரூபாய்ல இருந்து 12 ரூபாய் வரைக்கும் விவசாயிக்குக் கிடைக்குது. வாங்குறவங்களுக்கும் திருப்தி...’’ - பெருமிதமாகச் சொல்கிறார் விஜயகுமார்.

இந்த இணையதளத்தில் தேங்காய் தவிர, தென்னையோடு தொடர்புடைய 24 பொருட் களை வாங்கவும் விற்கவும் முடியும். குறிப்பாக, தேங்காய், இளநீர், தேங்காய் ஓடு, புண்ணாக்கு, தேங்காய் பவுடர், எண்ணெய்... இதுதவிர, தென்னந்தோப்பில் ஊடுபயிராக சாகுபடி செய்யும் ஜாதிக்காய், தேன் போன்ற பொருட்களையும் விற்கலாம். தரமான தென்னங்கன்று விற்பவர்களும் இணையத்தில் காத்திருக்கிறார்கள்.

விற்க விரும்பும் விவசாயிகள் தங்களைப் பதிவுசெய்து கொள்ள சிறிய பதிவுக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளார் விஜயகுமார். அதுதான் அவருக்கான வருமானம். வாங்குபவர்களுக்கு கட்டணமில்லை. வாங்க விரும்புபவர்கள், தங்கள் தேவையையும், மொபைல் நம்பரையும் பதிவு செய்தால், உண்மைத்தன்மையை பரிசோதித்த பிறகு, இணையம் திறந்து தகுந்த விவசாயிகளைப் பரிந்துரைக்கும். நேரடியாக பிசினஸ் பேசலாம்.

சரக்கை ஏற்றிச் செல்ல வாகனங்களும் கூட ஏற்பாடு செய்து தருகிறது இந்த இணையம். இந்தியா முழுவதும் தென்னை விவசாயிகள் நடத்தும் நிகழ்ச்சிகள், புதிய தொழில்நுட்பங்கள், கூடுதல் விளைச்சலுக்கான சாகுபடி நுட்பங்களும் அப்டேட் செய்யப்படுகின்றன. விரைவில் சில்லரை விற்பனையிலும் நேரடியாக ஈடுபடவிருக்கிறது இந்த இணையம். 5 தேங்காய்க்கு அதிகமாக வாங்குபவர்களுக்கு இலவச ஹோம் டெலிவரியாம். பெங்களூருவில் மட்டும்.

விவசாயி தன் உற்பத்திக்கு விலையைத் தீர்மானிக்கும் காலம்தான் விவசாயத்தின் பொற்காலம். விஜயகுமாரைப் போன்ற இளைஞர்களைப் பார்க்கும்போது அந்தப் பொற்காலம் விரைவில் மலரும் என்று நம்பிக்கை பிறக்கிறது. விவசாயிக்கு அதிகபட்சம் 5 ரூபாய்க்கு மேல தேங்காய்க்கு விலை கிடைக்காது. அதே தேங்காய் சென்னையிலோ, பெங்களூருவிலோ 20 ரூபாய்க்குக் குறைவா கிடைக்காது.

படங்கள்: சித்ரா அம்புரோஸ்

வெ.நீலகண்டன்