இதுவும் கடந்துபோகும்... ஹன்சிகாவின் காதல் விஷயத்திலும் இது உண்மையாகியுள்ளது. சிம்புவுடன் பிரேக்அப் ஆன சில வாரங்களிலேயே, அவரது அடுத்த காதல் பற்றிய ரகசியச் செய்தி கசிந்திருக்கிறது. நான்கைந்து படங்களிலேயே புகழ் வெளிச்சம்... ‘சின்ன குஷ்பு’ பட்டம்... அதோடு பஞ்சமில்லா பரபரப்புக்கும் உள்ளானார். இரண்டு வருடங்களுக்கு முன் சிம்பு ஜோடியாக ‘வாலு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஹன்சிகா. அட்வான்ஸ் வாங்கிய அடுத்த நொடியே, ‘‘சிம்புவுக்கு ஜோடியா நடிக்கப் போறீயா...

பார்த்தும்மா!’’ என பயத்தையும் எச்சரிக்கையையும் ஹன்சிகாவுக்கு பார்சல் அனுப்பிய சினிமாக்காரர்கள் நிறைய. ‘‘நான் உண்டு... என் வேலை உண்டு... என்று இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்றுதான் ‘வாலு’வுக்கு கால்ஷீட் கொடுத்தார் ஹன்சிகா. கேமராவுக்கு முன்னால் மட்டும் சிம்புவுடன் பேசிய ஹன்சிகா, கட் சொன்ன அடுத்த நொடியே கேரவனுக்குள் நுழைந்து தனிமை காத்து வந்தார்.

கிட்டத்தட்ட சிம்புவும் அப்படியே மெயின்டெயின் பண்ண, ‘வெளியே இவரைப் பற்றி சொன்ன தகவல்கள் தவறாக இருக்குமோ?’ என்று ஹன்சிகாவுக்குள் எழுந்த சின்னக் கேள்விதான், அவரது மனதுக்குள் காதலின் முதல் துளியாக விழுந்திருக்கலாம். நாட்கள் செல்லச் செல்ல பரஸ்பரம் தங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டது, ஷூட்டிங் முடிந்த பிறகு தொடர்ந்த செல்பேசி உரையாடல், காபி ஷாப் சந்திப்பு... எல்லாம் சேர்ந்து இருவருக்குள்ளும் காதல் வெள்ளத்தை கரைபுரண்டு ஓடச் செய்தது. சிம்புவுடன் காதல்... சீக்கிரமே கல்யாணம் என
அப்போது சிறகடித்த செய்திகள் ஏராளம்.
அடுத்தடுத்த கமிட்மென்ட்களில் ஹன்சிகா கேரியர் செம வேகத்தில் தடதடக்க, இதற்கு சிம்பு தடையாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானிக்கும் இவர்களின் காதல் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ‘சினிமா வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் காதல் தேவையா?’ என்று அம்மா சொன்ன எந்த அறிவுரையையும் காதில் போட்டுக்கொள்ளாமல், காதலைத் தொடர்ந்த ஹன்சிகாவுக்கு வந்தது திடீர் சோதனை.
‘யாருடன் நடிக்கணும்... எந்த அளவுக்கு மேல் நடிக்கக் கூடாது’ என்று சிம்பு போட்ட சில கண்டிஷன்கள் ஹன்சிகாவின் மனதைக் காயப்படுத்தியதாகச் சொல்கின்றன அவரது நெருங்கிய வட்டாரங்கள். இதனைத் தொடர்ந்து ‘சிம்புவுடன் காதல் இல்லை’ என ஹன்சிகா பேட்டி கொடுத்தார். அடுத்த இரண்டு வாரங்களில் ட்விட்டரில், ‘நாங்கள் காதலிக்கிறோம்...’ என்று தனித்தனியாக ஸ்டேடஸ் போட்டனர் இருவரும். அடுத்த சில நாட்களிலேயே ‘ஹன்சிகாவை பிரிந்து விட்டதாக’ சிம்பு அறிவித்தார். அதுவரை கண்ணாமூச்சி காட்டி வந்த சிம்பு - ஹன்சிகா காதல், அத்தோடு ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
இப்போது... காதலின் இரண்டாம் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார் ஹன்சிகா.
யார் அந்தக் காதலன்? நடிகை ஜெயப்ரதாவின் மகன்
சித்தார்த்!
அப்படித்தான் கிசுகிசுக்கின்றன ஹன்சிகாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள். தமிழில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். ஜெயப்ரதாவே ஹன்சிகாவுக்கு போன் செய்து, இந்தப் படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில், ‘வாலிபன்’ என்று பெயரிடப்பட்டிருந்த படத்தின் தலைப்பு, இப்போது மாறியுள்ளது. கதைப்படி ‘மற்றவர்களின் மனதை புண்படுத்தி காதலர்களுக்கு சந்தோஷம் கொடுப்பது உண்மையான காதல் இல்லை’ என்று நம்பும் கேரக்டர் ஹன்சிகா. ‘பெற்றவர்களின் சம்மதத்துடன் நடக்கும் கல்யாணத்தில்தான் கிக்கே இருக்கு’ என்று நம்பும் கேரக்டர் சித்தார்த். ஒரே அலைவரிசை கொண்ட இரண்டு கேரக்டர்களும் காதலித்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை.
படத்தில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் ஹன்சிகா, சித்தார்த் ஒரே அலைவரிசையில் இருப்பதே இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததற்கான காரணம் என்கிறார்கள். ஹன்சிகாவின் அம்மாவுக்கும் சித்தார்த்தை மிகவும் பிடித்துவிட்டதாம். சிம்புவுடன் ஹன்சிகா பழகியதைக் கண்டித்த அவர், சித்தார்த் நட்பைக் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள். மும்பை மற்றும் ராஜமுந்திரியில் அரண்மனை போன்ற வீடுகள், டெல்லியில் சொந்தமாக சட்டக்கல்லூரி என ஆஸ்தியிலும் அந்தஸ்திலும் குறைவில்லாதவராக இருந்தாலும், சினிமாவிலும் அரசியலிலும் செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பெருமையும் பந்தாவும் காட்டாத சித்தார்த்தின் கேரக்டரே இதற்குக் காரணம். ‘இவரே மருமகனாக அமைந்தால் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும்’ என்று ஹன்சிகாவின் தாயார் ஆசைப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் முசௌரி என்கிற கோடை வாசஸ்தலம் செம பாப்புலர். அங்கு ஒரு உள்ளடங்கிய மலைப்பகுதியில், அழகிய லொகேஷனில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. குதிரையில் பயணித்துத்தான் அந்த இடத்தை அடைய முடியுமாம். அந்த லொகேஷனில் சித்தார்த்தும், ஹன்சிகாவும் நான்கு நாட்கள் தங்கி நடித்தபோதுதான் இருவருக்குமிடையே காதல் நெருக்கம் அதிகரித்ததாகச் சொல்கிறார்கள். சித்தார்த் இப்போது மும்பையில் வசித்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்தவர்தான். தி.நகரில் சிம்புவின் எதிர் வீட்டில்தான் சித்தார்த் வீடும் இருந்திருக்கிறது. ஏழாம் வகுப்பு வரை சித்தார்த்தும் சிம்புவும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள். இந்தக் காதலில் ஹன்சிகா வீட்டைப் பொறுத்தவரை பச்சைக் கொடி. ஜெயப்ரதாவின் முடிவுதான் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை! -
ஜேம்ஸ்பாண்டு
அட்டை மற்றும் படங்கள்: ஆன்டன்தாஸ்