ஐபிஎல் 7வது சீசனின் முதல் கட்ட லீக் ஆட்டங்களில் அனல் பறக்கிறது. ஏற்கனவே ஹாட்டான ஐக்கிய அரபு ஆடுகளங்கள், சூடு தாங்காமல் தகிக்கின்றன. எல்லா போட்டிகளுக்கும் ஹவுஸ்புல் போர்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ் கெயில் புயல் வீசும், கோரி ஆண்டர்சன் கோர தாண்டவம் ஆடுவார், விராட் விரட்டி அடிப்பார் என்று எதிர்பார்க்க... முதல் வாரத்தில் மேக்சி ஷோதான் ரசிகர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறது. இப்போது ஒட்டுமொத்த ஸ்பாட் லைட்டும் பஞ்சாப் அணியின் கிளென் மேக்ஸ்வெல் மீதுதான்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 25 வயது ஆல் ரவுண்டர். மெல்போர்ன் புறநகர் பகுதியில் மிடில் கிளாஸ் குடும்பம். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி, மேக்ஸ்வெல்லை மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியபோது, மயக்கம் போட்ட முதல் ஆள் இவரேதான்! 6.5 கோடியைக் கொட்டி வாங்கினாலும், 3 ஆட்டத்தில் மட்டுமே வாய்ப்பு கொடுத்தார்கள். அதிலும் பெரிதாய் சாதிக்கவில்லை (13*, 23, 0).
2014 ஏலத்தில் இவரை தக்கவைத்துக் கொள்ள மும்பை ஆர்வம் காட்டவில்லை. டெல்லியும், ராயல்சும் போட்டி போட்ட நிலையில், பஞ்சாப் 6 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இந்த அளவுக்கு அவர் ஒர்த் இல்லை என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், கிங்ஸ் லெவன் அணிக்காக விளையாடிய முதல் மூன்று போட்டியிலும் இவரது அதிரடி ஆட்டம் அனைவரையும் அதிசயிக்க வைத்திருக்கிறது.
எப்படிப் போட்டாலும் பவுண்டரி, சிக்சர் என்று பறந்தால் பவுலர்கள் என்னதான் செய்வார்கள்! நன்றாக செட்டிலான பிறகு, சச்சின் சில அற்புதமான ஷாட்களை அனாயாசமாக ஆடுவார். பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அப்படிப்பட்ட ஆட்டத்தை எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்கு தூக்கும் மேக்சியின் திறமையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
ஸ்விட்ச் ஹிட் நாயகன் கெவின் பீட்டர்சனே அசந்து போயிருக்கிறார். ‘‘இப்போ இருக்குற பார்மில் மேக்ஸ்வெல்லை மடக்குவது மிக மிகக் கடினம்’’ என அங்கலாய்க்கிறார் ராஜஸ்தான் கேப்டன் வாட்சன். சூப்பர் கிங்சுக்கு எதிராக 95, ராயல்சுக்கு எதிராக 89, ஐதராபாத்துக்கு எதிராக 95 என்று மேக்ஸ்வெல் செய்த அமர்க்களம், கிங்ஸ் லெவனுக்கு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்திருக்கிறது. மூன்றிலுமே அவர்தான் ஆட்ட நாயகன். சதத்தை நழுவவிட்ட சோகம் கொஞ்சமும் இல்லாமல் சிரித்தபடியே பெவிலியன் திரும்பும் மேக்சி, 279 ரன் குவித்து (28 பவுண்டரி, 17 சிக்சர், ஸ்டிரைக் ரேட் 212.97) ஆரஞ்சு தொப்பியை அபகரித்து வைத்திருக்கிறார்.
‘‘கிங்ஸ் லெவன் என் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றி இருக்கிறேன். அதிர்ஷ்டமும் என் பக்கம் இருக்கிறது’’ என்று சொல்லும் மேக்சிக்கு ஆஸி டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிப்பதே நீண்ட கால லட்சியமாம்.எதிர்பார்க்காத இந்த தொடக்கத்தால், பஞ்சாப் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கன்னக் குழியின் ஆழம் அதிகரித்திருக்கிறது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் நிலைதான் பரிதாபம். ‘அடடா, வட போச்சே’ எனப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை அணி முதல் சறுக்கலில் இருந்து சுதாரித்துக் கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது. மிரட்டலான பேட்டிங் வரிசையுடன் பெங்களூரு உற்சாகமாக உள்ள நிலையில், ராயல்ஸ், ரைடர்ஸ், டெல்லி அணிகள் சற்றுத் தடுமாற்றத்தில்.
இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்களுக்காக இந்தியா வருவதற்கு முன்பாக, கணிசமான புள்ளிகளை கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் எல்லா அணிகளுமே முனைப்புடன் உள்ளன. காயம் காரணமாக ஒதுங்கியிருந்த கிறிஸ் கெயில், கெவின் பீட்டர்சன் களமிறங்கத் தயாராகியுள்ளதால் அதிரடிக்குப் பஞ்சம் இருக்காது. விராட், பதான் சகோதரர்கள், சேவக் என அசத்தக் காத்திருப்போர் பட்டியலும் வெகு நீளம். பந்துவீச்சுக்கான பர்பிள் தொப்பி பாலாஜி வசம். இன்னும் ஏராளமான ஆட்டங்கள் எஞ்சியிருப்பதால், எந்த அணியையும் ஒதுக்கிவிட முடியாது.
ஸ்பாட் பிக்சிங் வழக்கு விசாரணை ஒரு பக்கம் அலைக்கழித் தாலும், கடந்த சீசனை விடவும் ரசிகர்கள் ஆதரவு அமோகமாகவே இருக்கிறது ஐ.பி.எல்லுக்கு. அடுத்த வாரம் பாலைவனப் புயல் உச்சகட்டத்தில் இருக்கும்.
- பா.சங்கர்