எந்த பாரு?



‘சூரியனுடன் ஒரு சூறாவளிப் பயணம்’ என்றே தலைப்பு வைத்திருக்கலாம். கலைஞரின் அனல் பறக்கும் பிரசாரத்தின் ஒருநாள் தொகுப்பு, செம விறுவிறுப்பு. இந்த வயதிலும் அவரின் சுவையான - சரியான தேர்தல் பிரசார முறை, பிரமிக்க வைக்கிறது!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில், விஷாலுக்கு லட்சுமி மேனன் கொடுத்த ‘இச்’சைக் காட்டிலும், படத்திற்கு நீங்க எழுதிய விமர்சனம் ‘நச்’!
- ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.

‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுடன் ஜோடியாக ‘பூ’ பார்வதி, பார்வதி நாயர் இருவரும் நடிப்பது ஓகேதான். ஆனால், படத்தில் கமல் கண்டிப்பாக ‘லிப் டூ லிப்’ அடிப்பாரு... அதை வாங்கப் போவது எந்த ‘பாரு’?
- எல்.குணசேகரன், திருப்பூர்.

‘பெண்களை கிண்டல் செய்யும் படங்களைப் பார்ப்பதில்லை’ என்கிற பிரகாஷ்ராஜுக்கு ஒட்டுமொத்த பெண்களின் வோட்டு நிச்சயமுண்டு. ‘பெண்களின் மனசல்லவா அழகு’ என்றது
இன்னமும் சிறப்பு!
- எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.

ஆழ்துளைக் கிணறு ஆபத்துகளுக்கான தீர்வு களை வல்லுநர்களிடம் கேட்டுச் சொல்லி ஊதுகிற சங்கை ஊதிவிட்டீர்கள். அது சம்பந்தப்பட்டவர்கள் காதில் விழுந்து நல்லது நடந்தால் சரி!
- கவியகம் காஜுஸ், கோவை-24.

சோ.தர்மனின், ‘காணாமல் போன கரிசல் காட்டுப் பறவைகள்!’, செத்துப் போன விவசாயத்துக்கும், அதை நம்பிப் பிழைத்து, அதற்குப் பெரிதும் உதவிய பறவைகளுக்கும் செலுத்திய ‘நினைவஞ்சலி’!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.

‘சிம்புவுடன் லவ் கெமிஸ்ட்ரியா?’ என்றதும் கெமிஸ்ட்ரி கிளாஸுக்கு கட் அடிப்பது போல், உங்களை ‘கட்’ பண்ணிக் கிளம்பிவிட்டாரே வேதிகா. நாரதரே... இந்த வாரம் உமக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா?
- டி.கே.குமார், வந்தவாசி.

ஏற்கனவே புறக்கணிப்பை சுமந்து தவிக்கும் முதியவர்களை குடிமக்களாகக் கூட மதிக்காமல் அரசே புறக்கணிப்பது கண்டு மனம் குமுறியது. எல்லோருக்கும் வரத்தான் போகிறது அந்தப் புறக்கணிப்புப் பருவம்!
- மா.மாரிமுத்து, ஈரோடு-1.

‘தங்க மீன்கள்’ படம் தேசிய விருது பெற்றால், புகை பிடிப்பதை நிறுத்திவிடுவதாக வாக்கு கொடுத்து, தற்போது தன் ‘புகை நண்பனை’ மறக்கப்போகும் ராமுக்கு எங்கள் பாராட்டுக்கள்!
- எஸ்.சுகுணா சுந்தரம், புதுச்சேரி.

ஒரு காலத்தில் ‘மாம்பலம் கொசு’ என கொசுவுக்கான அடையாளமாகவே இருந்த மேற்கு மாம்பலத்தில் இன்று கொசு உட்காரக் கூட இடமில்லை. பழைய நினைவுகளைக் கிளறிவிட்ட அசோகமித்திரனுக்கு நன்றி!
- எஸ்.கோபாலன், சென்னை.