தங்க மோகம் பெண்களின் தனிச்சொத்து! சாதாரண பெண்களே இப்படி என்றால், நடிகைகளைக் கேட்கவே வேண்டாம். ‘‘உங்கள் கலெக்ஷனில் நீங்கள் நேசிக்கும் நகை எது’’ என்ற கேள்வியோடு சிலரைச் சந்தித்தோம்.

ஓவியா: சென்னையில் ஒரு ஷாப்பிங் மாலுக்குப் போயிருந்தேன். சின்னதா ஏதாவது வாங்கலாம்னு ஒரு ஜுவல்லரி ஷோரூமுக்குள்ள நுழைந்தால், நெற்றிச்சுட்டியுடன் கூடிய பெரிய நெக்லஸ் செட்தான் என் கண்களை உறுத்தியது. ஒயிட் ஸ்டோன் வச்ச இந்த நெக்லஸ் செட் விலை தாறுமாறா இருந்தாலும், வாங்காமல் திரும்ப மனசு இடம் கொடுக்கல. இந்த நகை செட்டுக்காகவே கொஞ்சம் காஸ்ட்யூமும் வாங்கினேன். எல்லாம் வாங்கிய நேரம், நல்ல செய்திகளாக வர ஆரம்பிச்சிருக்கு. நெக்லஸ் சென்டிமென்ட் வொர்க்கவுட் ஆயிடுச்சுன்னா, நெக்லஸுக்கு ‘லக்நெஸ்’னு பெயர் வைக்கலாம்னு இருக்கேன். பார்ப்போம்!

ஐஸ்வர்யா: பொதுவா தங்க நகைகள் மீது அவ்வளவா ஆர்வம் காட்ட மாட்டேன். ஆனா சில சமயம் ஃபேமிலியோடவும், ஃபிரண்ட்ஸோடவும் போகும்போது எதையாவது பார்த்து, பிடிச்சிருந்தா வாங்குவேன். அப்படி ஒரு பெரிய சைஸ் ஜிமிக்கி லேட்டஸ்ட்டா வாங்கினேன். நட்சத்திரத்தை நகம் அளவுக்கு சுருக்கின மாதிரியான கம்மல்தான் பொதுவா என்னோட ஃபேவரிட். குடும்ப நிகழ்ச்சிகளுக்கு புடவையில் போகும்போது போட்டுக்கொள்ள நல்லா இருக்குமேன்னு இந்த ஜிமிக்கி வாங்கினேன். அப்புறம் மாடர்ன் டிரஸ்ஸுக்கு மேட்ச்சா வும், கொஞ்சம் காஸ்ட்லியாவும் இருக்கிற மாதிரி வாட்ச் வாங்க ஆசைப்பட்டு, ‘கெஸ் பிராண்ட் வாட்ச்’ வாங்கினேன். இதைக் கட்டின மறுநொடியே எனக்குள் ஸ்டைல் கூடியது மாதிரி ஒரு ஃபீல் வருது.
ரம்யா நம்பீசன்: தங்கத்தை ‘மஞ்சள் பிசாசு’ன்னு பல பேர் சொல்வாங்க. ஏழைக் குடும்பங்கள்ல பிறந்த பல பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமையாம இருக்கறதுக்கு தங்கம் காரணமா இருக்கு. அதனாலயே ஷாப்பிங் போறது, நகை வாங்கறதுன்னு நான் டைம் வேஸ்ட் பண்றதில்லை. அட்சய திரிதியையில் நகை வாங்கினா வீட்ல எல்லாமே பொங்கும்னு சொல்றதுல எல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லைங்க. நகை போட்டுக்கணும்ங்கிற ஆசையும் எனக்கு துளியும் வந்தது கிடையாது; இனியும் வராது!
காயத்ரி: அப்பா, அம்மாவோட சமீபத்தில் துபாய் போயிருந்தபோது, ஆசையா இந்த மோதிரத்தை வாங்கினேன். கிரிஸ்டல் ரிங்கான இது ஸ்பெஷல் வடிவமைப்பு. சொட்டுவதற்கு தயாராக இருக்கும் நீர்த்துளி மாதிரியான வடிவம். மோதிரத்தைச் சுற்றிலும் பனித்துளியை அடுக்கி வைத்தது போன்ற செயற்கைக் கற்களில் எவ்வளவு அழகாக இருக்கு பார்த்தீங்களா! ம்... இந்த ஜிமிக்கி பற்றி கேட்கலையே? இதை பெங்களூருவில் வாங்கினேன். ஃபேன்சி ஜிமிக்கினாலும் இந்த காஸ்ட்யூமுக்கு மேட்ச்சா... செம தூளா இருக்கில்ல!
-அமலன்
படங்கள்:புதூர் சரவணன்