குட்டிச்சுவர் சிந்தனைகள்



பொண்ணுங்க கழுத்துல தவிக்குது தாலி, கழுத்துல தாலி இல்லன்னா நாம காலிங்கிற அளவுக்குத்தான் பல பேருக்கு தாலியப் பத்தி தெரியும். ஆனா, எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்... எதுக்கு பொண்ணுங்க கழுத்துல தாலியக் கட்டுறாங்க? இடுப்புல, கைல, கால்ல கட்டக் கூடாதா? அதே மாதிரி, எதுக்கு கைல வளையல் போடுறாங்க? கழுத்துல காலுல போடக் கூடாதா? எதுக்கு காலுல மட்டும் கொலுசு போடுறாங்க, கைல, காதுல போடக் கூடாதா?

தேர்தல் வந்துட்டாலே கருத்துக்கணிப்பு, குருட்டுக் கணிப்புன்னு கிளம்புறவாங்க போல இல்லாம, நிஜமாவே நான் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினேன். ஆராய்ச்சி முடிவு இதோ...
* நம்ம முன்னோர்கள் ரொம்ப புத்திசாலிங்க. அவங்க ஏன் பொண்ணுங்க கழுத்துல தாலிய கட்டணும்னு சொன்னாங்கன்னா, கல்யாணத்துக்கு அப்புறம் சந்தோஷத்துல கொஞ்சம் உடல் பெருத்துப் போனாலும், கழுத்து மட்டும் அதே சைஸ்லதான் இருக்கும்.

இப்போ உதாரணத்துக்கு தாலிய இடுப்புல கட்டுனோம்னு வைங்க, ‘திருமலை நாயக்கர் மஹால் தூணாம்... அதுல காணாம போச்சு பேனாம்’ங்கிற கதையா இடுப்புல தாலி இருக்கிற இடமே தெரியாது. அதனால வருஷத்துக்கு ஒரு தடவை அவுத்து கொஞ்சம் லூசா மாத்திக் கட்ட வேண்டியதா இருக்கும். அதுலயும் தங்கத்துல செயின் இருந்தா, புருஷங்க நிலைமை ரொம்பப் பாவம். வருஷம் ரெண்டு பவுனை சேர்த்து வேற செய்யணும். அதான் கழுத்துல தாலி கட்டுறாங்க. பட், நம்ம முன்னோர்கள்ல பெண்களும் புத்திசாலிங்க. அதனாலதான் ஒட்டியாணம்ன்னு ஒன்ன உருவாக்கிட்டாங்க.

* ஏன் கைல வளையல் போடுறாங்கன்னா, இந்த பொண்ணுங்களுக்கு எப்ப கோபம் வரும் எப்போ கோபம் போகும்னு பொண்ணுங்களைப் படைச்ச பிரம்மனுக்கே தெரியாது. பஞ்சுல நெருப்பு பறந்து வந்து விழுந்த மாதிரி, திடீரென நெஞ்சுல வெறுப்பு விழுந்துச்சுன்னு வைங்க... பொசுக்குன்னு வீட்டுக்குள்ள விட்டு புருஷனை பெண்டு நிமித்த வாய்ப்பிருக்கு. கௌரவத்த காப்பாத்திக்க ஆம்பளைங்க குரல் கொடுக்க மாட்டாங்க. அதனால வளையல்தான் வன்முறை கலந்து கலகலன்னு சத்தம் தந்து அடுத்தவங்களை அலர்ட் பண்ணணும். அப்பதான் புருஷனோட அம்மாவோ அண்டை வீட்டுக்காரங்களோ வந்து காப்பாத்தவும் முடியும்.

*இப்போ பொண்ணுங்க காலுல மணி ஒலிக்க ஏன் கொலுசு போடுறாங்கன்னும் நீங்க யூகிச்சு இருப்பீங்கன்னு தெரியும். ஆமா, அதேதான். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு எட்டி உதைக்கும் போது கால் கொலுசு சத்தம் கேட்குமே அதனாலதான்.

*அடுத்ததா, பொண்ணுங்க ஏன் மூக்குல மூக்குத்தியும் காதுல தோடும் போடுறாங்கன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். அடுத்த வாரத்துக்குள்ள அதையும்
கண்டுபிடிச்சு சொல்லிடுறேன்...

அது என்ன, ஜெயிச்சாலும் தோத்தாலும் வேட்பாளர்கள் மட்டும் நன்றி சொல்லிக்கிட்டு..? அதான் இந்த தடவ ஒட்டுமொத்த தமிழக வாக்காளர்களுக்காக குட்டிச்சுவர் மூலமா நாங்களே நன்றி சொல்லிடலாம்னு...

கடந்த ஒரு மாத காலமாக பிரசாரம் என்ற பெயரில் ஸ்டான்ட் அப் காமெடி செய்து எங்களை சிரிக்க வைத்த கேப்டன்ஜி அவர்களே... தலையில அடி விழுந்தபோதும் இடியே தாங்கும் சிலையாட்டம் சீன் போட்ட போண்டியன் மற்றும் நாமகிருஷ்ணன் அண்ணன்களே... டி.வி குட்டி போடாது என்ற உண்மையைக் கண்டுபிடித்து உலகறியச் செய்த ‘தென்னகத்து எடிசன்’ கிராமராஜன் அவர்களே... கடைசி வரை ரூம் நம்பர் 105ல் என்ன நடந்தது என்று சொல்லாமலே சென்ற அக்கா சிந்தியா அவர்களே... ஆடிக் காத்துல அம்மி பறக்குதோ இல்லையோ ஹெலிகாப்டர் காத்துல வேட்டி பறக்குமென டபுள் பெல்ட் போட்டுத் தரையில் தவழ்ந்த அண்ணன் யூ.பி.எஸ்களே...

 நத்தம்களே... சுத்தம்களே... ‘யார் பெத்த புள்ளையோ, தனியா பொலம்பிக்கிட்டு திரியுது’ன்னு பொதுமக்களிடம் பரிதாபம் சம்பாதித்த போங்கிரஸ் கட்சி பொம்மை வேட்பாளர்களே... விருந்து வைக்கிறேன்னு சொல்லிட்டு மயக்க மருந்து வச்ச பாட்டாளிகளே... பாட்டாளிகளை நம்பி ஏமாந்த கூட்டாளிகளே... ஓட்டு கேட்கப் போன இடத்திலெல்லாம் பரிதாபப் பாட்டு பாடி மக்களை ஓட வைத்த அண்ணன் மைக்கோ அவர்களே... டோப்பா தலையுடன் வந்து எல்லோருக்கும் ஆப்பு வைக்கிறேன்னு தூங்கிய அண்ணன் ‘வருஷம் 16’ கூர்த்திக் அவர்களே... பிரசாரத்தில் அபசாரம் செய்த பொன் வண்டுகளே... சில்வண்டுகளே... கடந்த ஒரு மாதமாக எங்களை என்டர்டெயின்மென்ட் செய்ததற்கு உங்கள் அனைவருக்கும் தமிழக வாக்காளர்கள் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்!

‘நெல்லாடிய நிலமெங்கே? சொல்லாடிய அவையெங்கே? வில்லாடிய களமெங்கே? கல்லாடிய சிலையெங்கே’ங்கிற கதையா இந்த ஒரு மாசமா அண்ணே, தம்பி, மாமன், மச்சான்னு கூடிக் கொஞ்சிய வேட்பாளர்களை, இனி என்னைக்கு சந்திக்கப் போறோமோ... விடை தெரியல. ஒவ்வொரு மீட்டிங்குக்கும் ஒரு குவாட்டர், ஒரு கோழி பிரியாணி, இருநூறு ரூபா பணம்னு தந்தாங்களே... அந்த பாசம் இனி திரும்ப எப்போ கிடைக்குமோ? தேர்தலுக்கு மொத நாளு என் கைல ஆளாளுக்கு பணத்த வச்சு அழுத்துனதுல என் மனதில் உண்டான நேசம் இன்னமும் மறையல. ஊருக்குள்ள ஆட்டோல கூட ஏறாத என்னையும் தேர்தல் அன்னைக்கு காருக்குள்ள வச்சு கூட்டிப்போய் ஓட்டு போட வச்சாங்களே... அந்த அன்பு எப்போ திரும்ப வரும் என்பதற்கான தடயமும் ஒண்ணும் கிடைக்கல.

‘அன்பான வாக்காளப் பெருமக்களே’ன்னு பண்பாக ஒலித்த அந்தக் குரல்களை மீண்டும் எப்போ கேட்கப் போறோமோ... ஹெலிகாப்டர் ஷாட் அடிச்சுக்கிட்டு வர்ற மம்மிய எப்போ பார்க்கப் போறோமோ... முழுக்கை ஜாக்கெட்டுல மாநிற இந்திரா காந்தியா வலம் வந்த அண்ணிய இனி எப்போ பார்க்கப் போறோமோ... அய்யகோ, ஒரு மாசமா மெகா சீரியலுக்கு பதிலா இவங்கள தினம் தினம் பார்த்து மனசுல இவங்க உருவம் தங்கிப் போயிடுச்சே.

தேர்தல் கமிஷனை கெஞ்சிக் கேட்கிறேன்... ‘அய்யா, என்னால இந்த நிகழ்வு களையும் மனிதர்களையும் விட்டுட்டு இருக்க முடியாது. போதாக்குறைக்கு இந்த ஒரு மாசமா சொகுசாவும் இருந்து பழகிட்டேன். அதனால தாங்கள் தயவு கூர்ந்து அஞ்சு வருஷத்துக்கு ஒரு தேர்தல் வைக்கிறதுக்கு பதிலா ஆறு மாசத்து
க்கு ஒரு தேர்தல் வைக்கணும்னு கேட்டுக்கொள்கிறேன்.’

இந்த வாரக் குட்டிச் செவுரு போஸ்டர் பாய்ஸ்...

டாஸ்மாக் ரெண்டு, மூணு நாள் லீவு விட்டா போதும், சரக்க ஸ்டாக் எடுத்து பிளாக்ல வித்து பணம் பார்க்க வந்துடுற பார்ட் டைம் அம்பானிங்கதான்!

ஆல்தோட்ட பூபதி