கடைசி பக்கம்



மகா கஞ்சனான அவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக பஸ்ஸில் பயணம் போயிருந்தார். சாதாரணக் கட்டண பஸ் என்பதால் மெதுவாகவே போனது. மதிய உணவுக்கு நண்பர் வீட்டுக்குப் போய்விடலாம் என திட்டமிட்டிருந்தார்.

தாமதம் ஆனதால் பசித்தது. பயணவழி உணவகத்தில் பஸ் நிற்க, உணவின் வாசத்தில் பசி இன்னும் அதிகமானது. எல்லாவற்றின் விலையும் இவரை பீதியடைய வைத்தது. சாலையோர உணவகங்களின் கட்டணம் அதிகம்தானே!

ஒரு டீ குடித்து சமாளிக்கலாம் என போனார்... இவர் கொடுத்தது போக மீதி காசுக்கு சில்லரை இல்லை என்றான் கடைக்காரன். பஸ் வேறு கிளம்பத் தயாராகி விட்டது. வேறு வழியின்றி, சில்லரைக்கு பதிலாக அவன் கொடுத்த இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கிக் கொண்டு பஸ் ஏறினார். ‘வெட்டிச் செலவு’ என வழியெல்லாம் இதை நினைத்துக் குமைந்தபடி போனார். நண்பர் வீட்டில் சாப்பிட்டபடி புலம்பினார். ஊருக்குத் திரும்பி வந்தும் புலம்பலை நிறுத்தவில்லை. இதிலேயே அவர் சோகமாகிவிட்டார்.

எதிர்பாராவிதமாக அவர் வாங்கிய ஒரு டிக்கெட்டுக்கு முதல் பரிசாக ஒரு கோடி ரூபாய் விழுந்தது. கேள்விப்பட்டதும் ஊரிலிருந்து நண்பர் கிளம்பி வந்துவிட்டார். மகா கஞ்சனான தன் நண்பனை மகிழ்ச்சிப் பூரிப்பில் பார்க்க நினைத்தவருக்கு ஆச்சரியம். இப்போதும் அதே சோக நிலையில்தான் இருந்தார் அவர்.

‘‘அதான் லாட்டரியில பரிசு விழுந்துடுச்சே... இன்னும் ஏன் அதையே நினைச்சு சோகமா இருக்கே?’’ என கோபத்தை மறைத்துக்கொண்டு கேட்டார் நண்பர். ‘‘ஒரு சீட்டுக்குத்தானே விழுந்தது. இன்னொன்றை வாங்கியது வேஸ்ட்தானே’’ என்றார் அந்தக் கஞ்சர்.இழப்புகளுக்காக வருந்தி, இருக்கும் மகிழ்ச்சியைத் தொலைக்காதீர்கள்!

நிதர்ஸனா