ஜூலி‘‘நம்ம ஃப்ளாட்ல நாய் வச்சுக்கக்கூடாதுங்கற ரூல் தெரியாம, ரெண்டாவது மாடியில் குடி வந்திருக்கிறவங்க, ஒரு நாயை அழைச்சுட்டு வந்திருக்காங்க. அது ராத்திரியெல்லாம் குரைச்சு, நம்ம தூக்கத்தை கெடுக்குது. போறவங்க, வர்றவங்க யாரையாவது கடிச்சு வச்சா என்னாகுறது?’’ - ஜூலி என்ற அந்த நாய்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள் அபார்ட்மென்ட் வாசிகள்.

ஜூலியை வெளியேற்ற அதன் உரிமையாளர் கேட்ட மூன்று மாத அவகாச கோரிக்கை அசோசியேஷனால் பரிசீலிக்கப்பட்டு, ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டது. ஜூலி நடமாட்டத்தை எங்கு கண்டாலும், முகம் சுளித்து, ஃப்ளாட்வாசிகள் பல்லைக் கடித்தனர்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்படியொரு தகவல் கசிந்தது. ‘‘இந்த ஜூலி, கவர்ச்சி நடிகை சிக்ஷாவின் செல்ல நாயாம். வெளியூர்களுக்கு அடிக்கடி ஷூட்டிங் போறதால, இவுங்ககிட்டே விட்டுருக்காங்களாம்!’’உடனே, ‘நாய் கூட என்னா அழகு! நான் அப்பவே சந்தேகப்பட்டேன்’ என பரவச கமென்ட்டுகள் பறந்தன. சிக்ஷாவாகவே நினைத்து ஜூலியோடு பழகினார்கள் ஆண்கள். ஜூலியும் ஜாலியாக அவர்களுக்கு ‘பெட்’ ஆனது. அதை வெளியேற்றச் சொன்ன நோட்டீசை யாவரும் மறந்தனர். வதந்தியைக் கிளப்பிவிட்ட ஜூலியின் உரிமையாளர், நடிகை சிக்ஷாவுக்கு மானசீக நன்றி சொல்லி விட்டு, நிம்மதியாகத் தூங்கினார்.
எஸ்.ராமன்