குற்றாலத்தில் ஒரு பூங்கா



கோடை வந்தால் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து சென்று கொண்டிருந்த தென்மாவட்ட மக்களுக்கு, அப்படியொரு இடம் இங்கே கிடைக்காதா என்ற ஏக்கம் ஆண்டாண்டு காலமாக உண்டு. குற்றாலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சுற்றுச்சூழல் பூங்கா’, அந்த ஏக்கத்தை ஓரளவுக்குத் தீர்த்து வைத்துள்ளது. சீசனுக்கு மட்டுமே சுற்றுலாத் தலமாக விளங்கிய குற்றாலத்தை ஆண்டு முழுவதும் ரசிக்கத் தூண்டும் எண்ணத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

குற்றாலம் ஐந்தருவிக்கு மேலே பழத்தோட்ட அருவியில் முகடுகளாய் தெரியும் மலைகளுக்கு மத்தியில் 40 ஏக்கரில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பழப்பண்ணை உள்ளது. ‘ஈகோ பார்க்’ என்ற பெயரில் இந்த பழப் பண்ணை சமீபத்தில் திருத்தி அமைக்கப்பட்டு, ரம்மியமான புல்வெளிகள், நறுமணப் பூங்கா, பாறைத் தோட்டம், ரோஜா தோட்டம் என புதிய வடிவமைப்புகளுடன் பார்வையாளர்களை பரவசப்படுத்தி வருகிறது.

உள்ளே நுழைந்ததும் அழகிய நீரூற்றுகளும், வண்ண மீன்கள் நீந்தும் சுற்றுச்சூழல் குளமும் உங்களை கைநீட்டி வரவேற்கும். பார்வையாளர்கள் ஐந்தருவியின் நீரோட்டப் பாதையை ரசிக்க மரப்பாலம் உள்ளது. மலைகளுக்கு மத்தியில் இயற்கையின் சீதனமான மரங்களைப் பார்த்து கொண்டே செல்ல போடப்பட்டுள்ள நீண்ட நெடிய பாதை, பழத்தோட்ட அருவியின் உச்சிக்கே செல்கிறது. வழிநெடுகிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை வலியுறுத்தும் சிற்பங்களும், ஓவியங்களும் பார்வையாளர்களை பரவசப்படுத்தும்.

‘‘மலை உச்சியில இருக்கற பார்வையாளர் மாடத்துல இருந்து பார்த்தா குற்றாலத்தையே கண்ணால் அளக்கலாம். ரோஜா தோட்டம், மூங்கில் தோட்டம், வண்ணத்துப்பூச்சி பூங்கான்னு குழந்தைகளை கவர்ற விஷயங்கள் பல இருக்கு’’ என்கின்றனர் தென்காசியை சேர்ந்த காசிப்பாண்டி- விசாகா தம்பதி. ‘‘பசுமையான புல்வெளிகள், கண் சிமிட்டும் பூக்கள்னு இந்த மாதிரி இடத்தை குழந்தைகளோடு பார்வையிடுறதே மனசுக்கு சந்தோஷம். இங்க இருக்கிற சாகச விளை யாட்டு திடலிலும், ஸ்பிரிங் மெத்தையிலும் குழந்தைகள் சந்தோஷமா விளையாடும்’’ என்றனர் தூத்துக்குடியை சேர்ந்த நந்தன்- ரூபா தம்பதி.

இங்கே கட்டணங்களும் குறைவுதான். பெரியவர்கள் என்றால் ரூ.30ம், சிறியவர்கள் என்றால் ரூ.15ம் நுழைவுக் கட்டணம். உணவுப் பொட்டலங்களோடு வருவோர், பழத்தோட்ட அருவியின் அருகே அமர்ந்து சாப்பிட உணவு திடலும் தனியாக உள்ளது. ‘‘இங்கே வருவதே சுத்தமான காற்றை சுவாசிக்கத்தான். மலைக்குன்றுகளுக்கு மத்தியில் மரங்களை ரசிச்சிட்டே இருக்கலாம். குட்டீஸ்களை இங்க கூட்டிட்டு வந்தால் சறுக்கு, ராட்டினம், ஊஞ்சல்னு நாள் முழுக்க பொழுதைப் போக்கிடலாம்’’ என்கின்றனர் பாவூர்சத்திரத்தை சேர்ந்த கேத்ரீனும் ஜெனாவும். வசந்தத்தின் வரவேற்பறையாகக் காணப்படும் ‘ஈகோ பார்க்’ சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக பச்சைக் கம்பளம் விரித்துக் காத்திருக்கிறது.

- ஸ்ரீமாசானமுத்து
படங்கள்: முத்தையா