நாங்களே எடுக்குறோம்...நாங்களே நடிக்கிறோம்!



நாலு ஃபைட், அஞ்சு பாட்டு, பன்ச் டயலாக்னு ஃபார்முலா சினிமா எதுவுமே இதில் இல்லை. இப்போ நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கிற வாழ்க்கையில அனுபவம் நிறைய கிடைச்சிருக்கு. யோசிக்கிற புத்தி கூடியிருக்கு. சென்னையில ஒரு வலையை வீசினா, அதில் சிக்குறவன் ஒருத்தனாவது சினிமாக்காரனா இருப்பான்.

ஒரு மேன்ஷன்ல ஒதுங்கி, பாதி வயித்துக்கு சாப்பிட்டு, கனவுகளில் மட்டும் தூங்கி... அவனுடைய நிஜம் என்ன? பெரிய இடத்திற்கு வந்திட்டா கிடைக்கிற காரும், வசதியும் பப்ளிசிட்டியும்தான் கண்ணுக்குத் தெரியுது. அதையே உண்மைன்னு நினைச்சிட்டு நேத்து நைட் வரைக்கும் சென்னைக்குப் புறப்பட்டு வந்தவங்க எத்தனை பேர்! அவங்களைப் பத்தின உண்மைக் கதைதான் இந்த ‘கள்ளப்படம்’ ’’

- உறுதியாகப் பேசுகிறார் ஜெ.வடிவேல். பத்திரிகையாளராக நுழைந்து, டைரக்டராக பரிணமித்தவர். மிஷ்கினின் முதல்நிலை சீடர்.‘‘உங்க யூனிட்டே நடிக்கறீங்க போல...’’‘‘சென்னையில் இயக்குநரா, கேமராமேனா, மியூசிக் டைரக்டரா, ஃபிலிம் எடிட்டரா ஆகணும்னு ஆசைப்பட்டு வந்து சேர்ந்த நாலு பேரின் கதை. நாங்களே அப்படிப்பட்டவங்கதான். அந்தக் கதாபாத்திரங்களும் நாங்கதான். ஆரம்பத்துல வெளியே நடிகர்களைத் தேடினோம். எங்களை அவங்களுக்குள்ள கொண்டு வர சிரமமாயிருந்தது. திடீர்னு ஒரு நாள்தான் ‘நாமளே நடிச்சா என்ன’ன்னு தோணுச்சு. நம்ம உணர்வுகள் நம்ம கிட்ட இருந்து வர்றதை விடவா வெளியில் கிடைக்கும்? அதான் இறங்கிட்டோம்.

நான், ஸ்ரீராம் சந்தோஷ், கே, காகின் சேர்ந்ததுதான் இந்த டீம். எங்களோட நிஜக்கதையில கண்டு, கேட்டு, உயிர்த்த உணர்வுகளைக் கரைத்தேன். எல்லாமே சொல்ல, கேட்க காமெடியா இருக்கும். அந்தக் கலகலப்பு கொஞ்சமும் குறையாம கடைசி வரை போச்சு திரைக்கதை. எங்க புரொடியூசர் ஆனந்த் பொன்னிறைவன் மருத்துவரா உழைத்தாலும், சதா நல்ல சினிமாவில் அக்கறையான மனுஷன். ஒரு ஹீரோ கதையைத்தான் அவர்கிட்ட முதல்ல சொன்னேன். ‘இது மாதிரிதான் நிறைய வந்திருக்கே பிரதர்...

புதுசா சொல்லலாமே! உங்க மனசிலிருந்தே கதை புறப்பட்டா நல்லா இருக்குமே’ன்னு அவர்தான் சொன்னார். அப்புறம் சொன்னது தான் ‘கள்ளப்படம்’ ஸ்கிரிப்ட். ‘உடனே ஷூட்டிங் புறப்படுங்க’ன்னு அனுப்பி வச்சார். ‘இப்ப புத்திசாலிகள்தான் படம் பார்க்குறாங்க. நீங்க புத்திசாலி. நீங்க படம் எடுத்தா ஓடும்’னு சொன்னார். கேள்வி கேட்டா பதில் சொல்லலாம். பொறுப்பைக் கொடுத்தால் எப்படி தட்டிக் கழிக்க முடியும்? உடனே புறப்பட்டுப் போய் கனகச்சிதமாக முடிச்சுக் கொடுத்தோம். பார்த்திட்டு புரடியூசர் முகத்தில் புன்னகை. அதுதானே வேணும்னு நினைச்சது. அதுவே கிடைச்சுருச்சு!’’
‘‘ ‘கள்ளப்படம்’னா..?’’

‘‘என் ஆசான் மிஷ்கின் கதையைக் கேட்டதும், ‘இதையே செய். ரொம்ப நல்லாயிருக்கு’ன்னு சொன்னார். அதோடு இல்லாமல், ‘வெள்ளைக்கார ராணி கொல்லிமலை தேனீ’ன்னு தொடங்கி ஒரு நல்ல பாட்டு எழுதிக் கொடுத்தார். நமக்கு இங்கே இருக்கிற கஷ்டம், துக்கம், சோகம், வெறுமை, ஏழ்மை எதுவும் எனக்குப் பிடிக்கலை. ஆனால், அத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் மாதிரி எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கே...

அதுதான் என் ஆச்சரியம். வழக்கமான கதையை ஒதுக்கிட்டு படம் பண்றதில் நிறைய சௌகரியங்கள் இருக்கு. கதையை நேரடியா சொல்லிவிட்டுப் போகலாம். புதுப் பார்வையில் கதை செல்ல அனுமதி கிடைக்கும். இது ஏதோ கலைப் படமோ, பரீட்சார்த்த படமோ இல்லை. சும்மா துறுதுறுன்னு போகும். அப்புறம் வெற்றிங்கிறது பெரிய விஷயம் இல்லை.

“மொத்த வாழ்நாளையும் வெற்றி ஒண்ணுக்காகவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது தேவையா?’ன்னு ஒரு கேள்வி இதில் பிறந்து, அதுக்கு பதிலும் சொல்லியிருக்கேன்!’’
‘‘அழகா ஒரு கூத்தோட சாயல் இருக்கு இதுல...’’

‘‘அப்படியொரு பகுதி இருக்கிறது உண்மைதான். அவங்களோட அவலம், கலைக்காக அவங்க செய்கிற அபரிமிதமான தியாகம் எல்லாம் ஈரத்தோடும், துக்கத்தோடும், துடியாகவும் பதிவாகியிருக்கு. இதுக்கு முன்னாடி யாருமே இதை எடுத்துக் கூட்டி செய்யலை. சில படங்களில் ‘கட் ஷாட்’ல போயிருக்கு அவ்வளவு தான். அவங்களுக்கு நிலையான ஆதரவும், வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அவங்க வாழிடத்தைப் போய் பார்த்தீங்கன்னா, அப்படியே மனசைப் போட்டு பிசையும்.

துக்கம் தொண்டை அடைக்கும். அப்படி யோரு ஆட்டத்தோட பகுதியும் இருக்கு. ‘மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாயில்லை’ன்னு மா சே துங் சொல்லுவார். அது மாதிரி, அந்தக் கலையும் அவங்களோடுதான் ஒட்டிக்கிட்டே கிடக்கு. சிங்கம்புலி இதுவரை செய்யாத விதத்தில் ஒரு கேரக்டர் செய்திருக்கிறார். கவிதாபாரதியும் அப்படியே. ‘சுட்ட கதை’யில் நடிச்ச லட்சுமி பிரியா அருமையான ரோலில் பிரமாதப்படுத்தியிருக்காங்க.

அவங்களோட கேரக்டரும், எங்க நாலு பேரோட பார்ட்டும் ஒரே நேர்கோட்டில் தனித்தனியா போய், கடைசியில் சேர்வோம். இப்ப படம் முடிஞ்ச நேரம், லட்சுமி பிரியாவின் தேர்வு சரிதான்னு தோணுது. என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல சினிமா தோற்பதே இல்லை. படம் மொத்தம் பார்த்திட்டு எனக்குத் தோன்றியது இந்த வரி மட்டும்தான்.’’

- நா.கதிர்வேலன்