பணத்தைவிட தங்கம் பாதுகாப்பு



‘இன்றைய நிலவரப்படி தங்கத்தின் மதிப்பு என்ன?’ - இந்தக் கேள்வியைக் கேட்டு பதில் சொல்வதற்குள் மேலும் கொஞ்சம் எகிறிவிடலாம் தங்கத்தில் விலை. அந்த அளவுக்கு நிலை இல்லாமல் ஏற்றம் கண்டுகொண்டிருக்கும் தங்கத்தைப் பார்த்து நடுநடுங்கிப் போய்த்தான் நிற்கிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். அட்சய திரிதியையும் அதுவுமாக, தங்கம் விலை இப்படி தறிகெட்டுத் திரிவதன் பின்னணி குறித்து ஆராய்ந்தோம்...

இந்தியாவில் தங்கத்திற்கான மவுசு அதிகளவில் இருப்பதை உலகச் சந்தைகள் உணர்ந்தே இருக்கின்றன. உலக தங்க கவுன்சிலின் அறிக்கை கூட இந்தக் கருத்தை பிரதிபலிக்கிறது. ‘இந்திய செல்வந்தர்கள் தங்களது அந்தஸ்தை வெளிக் காட்டுவதற்காக தங்கத்தை அதிகளவில் விரும்புகிறார்கள். திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் அதிகளவில் வாங்கும் பொருளாக தங்கம் இருக்கிறது’ என்கிறது அந்த அறிக்கை. மேலும், இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேர் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பதால் அடுத்த பத்தாண்டுகளில் ஒன்றரை கோடி திருமணங்கள் நடக்கும் எனவும், இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும் சொல்கிறது அந்தக் கவுன்சிலின் அறிக் கை. தங்கம் விலை ஏறிக்கொண்டே செல்ல இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.  

ஆனால் தங்க வியாபாரிகள், ‘இந்தியாவில் தங்கம் என்பது இறக்குமதிப் பொருளாகிவிட்டது. அதற்கான வரியை அதிகமாக்கியதன் எதிரொலிதான் விலையேற்றம்’ என்கிறார்கள்.
‘‘இறக்குமதி தங்கத்தோட விலையை அமெரிக்க மற்றும் பிரிட்டன் மார்க்கெட்கள்தான் நிர்ணயிக்குது. 2012-13ம் ஆண்டு 900 டன் தங்கத்தை இறக்குமதி செஞ்சாங்க. இது கடந்தாண்டு 400 டன்னா குறைஞ்சது. அதே நேரம் 2 சதவீதமா இருந்த வரியை 10 சதவீதமா மத்திய அரசு கூட்டிருச்சு. அதனால, விலையும் அதிகரிச்சிருச்சு. இன்னைக்கு ரேட்படி, பழைய வரியா இருந்தா, சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறையும்.

மத்திய அரசு சில காரணங்களால, மக்கள்கிட்டயே ‘தங்கத்துல முதலீடு செய்யாதீங்க’ன்னு வேற சொன்னது. ஆனா, மக்கள் நிலத்துலயோ ஷேர் மார்க்கெட்லயோ முதலீடு செய்றதை விட, தங்கத்தை வாங்கறது பாதுகாப்புன்னு உணர்ந்திருக்காங்க. ஏன்னா, அவசரம்னு வந்தா எப்ப வேணாலும் இதிலிருந்து உடனடியா பணத்தைப் பெற முடியும். நடுத்தர மக்கள் கூட 20 ஆயிரம் ரூபாய் கையிலிருந்தா கொஞ்சம் தங்கத்தை வாங்கி வச்சிக்கறது பாதுகாப்புன்னு நினைக்கிறாங்க’’ என்கிறார் சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார்.

அதேநேரம், ஆன்லைன் வர்த்தகமும் விலை ஏற்றத்தை மாற்றி அமைக்கின்றது என குற்றஞ்சாட்டுகிறார் அவர். ‘‘இந்த ஆன்லைன் வர்த்தகம் ஒவ்வொரு நாளும் விலையை ஏற்றி இறக்கி வச்சிட்டே இருக்கு. மத்திய அரசிடம் இந்த ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து தங்கத்தை நீக்கணும்னு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கல’’ என்கிறார் அவர் கவலையோடு.

‘‘எவ்வளவு விலை கூடினாலும் தங்கத்தில்தான் நம் மக்கள் முதலீடு செய்வார்கள். அது தப்பும் இல்லை!’’ என பச்சைக் கொடி காட்டுகிறார் பொருளாதார நிபுணர் பாபி சீனிவாசன். ‘‘நம்ம ஊர்ல மக்கள் பணத்தை விட தங்கத்தைத்தான் அதிகம் நம்புறாங்க. ரூபாயோட மதிப்பு குறைஞ்சிட்டே போகுது. அதனால, தங்கத்தோட விலை தானாவே கூடிடுது. 1960ல 50 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கத்தோட விலை இன்னைக்கு 3 ஆயிரம் ரூபாய். இன்னும் கூட அதிகரிக்கலாம்’’ என்கிறார் அவர் கூலாக!

பேராச்சி கண்ணன்