தேர்தல் என்பது கட்சிகளுக்கு வாழ்வா, சாவா போராட்டம். மக்களுக்கு தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விஷயம். தேர்தல் தொடர்பான தொழில்களைச் செய்பவர்களுக்கு அது பிசினஸ். இந்த ஆண்டு இந்தத் தேர்தல் பிசினஸில் டூர் ஆபரேட்டர்களும் குதித்துவிட்டார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நடக்கும் தேர்தல் திருவிழாவை, ஒரு சுற்றுலா அயிட்டம் ஆக்கியிருக்கிறார்கள் அவர்கள்.

பொதுவாக மார்ச் முடியும்போதே வெளிநாட்டவர்கள் இந்தியா வருவதைத் தவிர்ப்பார்கள். கோடையின் வெம்மையை அமெரிக்க, ஐரோப்பிய பயணிகளால் தாங்க முடியாது. ஆனால் இந்த ஆண்டு தேர்தலைக் காண ஏராளமானவர்கள் வந்திருக்கிறார்கள். ‘எலெக்ஷன் டூரிஸம்’ என்ற பெயரில் ஸ்பெஷல் டூர் வந்திருக்கிறார்கள் இவர்கள். மார்ச் துவக்கத்தில் பெர்லினில் நடந்த சர்வதேச சுற்றுலா கருத்தரங்கில் இந்த ‘எலெக்ஷன் டூரிஸம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. ஐரோப்பிய நாட்டினரும், அமெரிக்கர்களும், தேர்தல்களைப் பார்த்திராத சீனர்களும் அதிக அளவில் இதற்காக இந்தியா வந்திருக்கிறார்கள். இவர்களில் அதிகம் பேர் பயணிப்பது டெல்லி - ஆக்ரா - ஜெய்ப்பூர் ரூட்டில்தான்! தாஜ்மகாலையும் ஜெய்ப்பூர் அரண்மனைகளையும் பார்த்துவிட்டு, அப்படியே தேர்தல் களத்தையும் ரசிக்கிறார்கள்.
நகரங்கள் விதவிதமான கொடிகளால் அலங்கரிக்கப்படுவது, வாகனங்கள் கட்சி வண்ணம் பூசிக் கொள்வது, மலர் தூவியும் பட்டாசு வெடித்தும் வேட்பாளர்களை வரவேற்பது என எல்லாமே அவர்களின் ரசனைக்குரிய காட்சிகள். கூடவே, ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரளும் பெரிய பொதுக்கூட்டங்களையும் பார்த்து பிரமிக்கிறார்கள்.
வெளிநாடு வாழ் இந்தியர்களும் இப்படி தேர்தல் சுற்றுலா வருகிறார்கள். ஆரம்ப கட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரசாரப் பயணங்களைப் பார்க்க அவர்கள் ஆசைப்பட்டார்கள். சமீபகாலமாக பலரும் வர நினைப்பது நரேந்திர மோடியின் கூட்டங்களுக்கே! அதிலும் குறிப்பாக, மோடி வாரணாசியில் போட்டியிடுவது முடிவானபிறகு அங்கு நிறைய வெளிநாட்டுப் பயணிகள் வருகிறார்கள். பழமை வாய்ந்த இந்த நகரத்தின்மீது வெளிநாட்டுப் பயணிகளுக்கு எப்போதும் மோகம் உண்டு. மோடி அந்த மோகத்தை அதிகமாக்கி இருக்கிறார்.
இன்னும் சில சுற்றுலாப் பயணிகள், வேட்பாளர்களோடு ஒருநாள் முழுக்க பிரசாரப் பயணத்தில் இணைந்திருக்க ஆசைப்படுகிறார்கள். கட்சிகளின் அனுமதியோடு இதையும் செய்து தருகிறார்கள் டூர் ஆபரேட்டர்கள். தேர்தல் நாளில் வாக்குச்சாவடிகளில் திரளும் மக்கள் கூட்டத்தையும் பார்க்க பலர் ஆசைப்பட்டு தங்குகிறார்கள். எனினும், ‘வாக்குச் சாவடிக்குள்ளும் போய் சுற்றிப் பார்க்க இவர்களை அனுமதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கைக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி தரவில்லை.
- அகஸ்டஸ்