சாயி



ஷீரடி பாபாவின் புனித சரிதம்

உங்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன். உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன்!
- பாபா மொழி

வழக்கமாக வலது கைப்பக்கம் இருக்கும் செங்கல் இல்லாதது கண்டு பாபா திடுக்கிட்டார்.
‘‘தாத்யா, செங்கல் எங்கே?’’‘‘நான் அதைப் பின்னால் வைத்திருக்கிறேன்!’’ - அங்கிருந்து தாத்யா எடுத்து வந்தார். ஆனால் பாபா சமாதானம் ஆகவில்லை.

‘‘தாத்யா, என் குரு வெங்குசா அவர்கள் இந்தச் செங்கல்லை எனக்குக் கொடுத்தார். இது எனக்கு உயிர் போன்றது. இதில் என் உயிரே அடக்கம். இதை பத்திரமாக வை. நீங்கள் என்னை நன்றாகக் கவனித்துக் கொள்ளவில்லையென்றாலும் பரவாயில்லை. இந்தக் கல்லை மிகுந்த கவனத்துடன் வையுங்கள். அப்பொழுது தான் எனக்கு ஒன்றும் நேராது’’ என்று சொல்லி, அந்தச் செங்கல்லை குருவின் பாதத்தை வருடுவது போல வருடிக்கொண்டிருந்தார் பாபா.

அவருடைய மனதை மாற்றும்
விதமாக, ‘‘பாபா, இன்று ஆட்டம், பாட்டமெல்லாம் நடந்தன. என்ன இவ்வளவு சந்தோஷம்?’’ என ஷாமா கேட்டார்.
பாபா வெறுமனே சிரித்தார்.

‘‘ஷாமா, இன்று ஒரு பிரபலமான பாடகர் என்னைப் பார்க்க வருகிறார். அதனால் எனக்கு ஆனந்தம் ஏற்பட்டது.’’
‘‘யார்?’’‘‘அதோ பார்... வந்துவிட்டான். வாப்பா, என் குழந்தை... உன் வருகையைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!’’
சபை மண்டபத்தினுள், ‘சங்கீத ரத்னா’ அப்துல் கரீம் கான் வந்து நின்றார். அங்கு அவரைக் கண்டதும் எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். காரணம், அவர் உலகப் பிரசித்தி பெற்ற பாடகர். தன் குரல் இனிமையால் சங்கீத சாம்ராஜ்யத்தில் கோலோச்சியவர். அவர் பாபாவின் காலடியில் விழுந்ததும், அவரை அன்புடன் ஆலிங்கனம் செய்துகொண்டார் பாபா. அவரை அருகில் உட்கார வைத்துக்கொண்டு, கரீம்கானின் அருமை பெருமைகளை மக்களுக்கு விளக்கினார்.

‘‘பாபா, என்ன பாட்டு பாடட்டும்?’’
‘‘கங்கோத்ரியிலிருந்து பிரவாகம் எடுத்து ஓடும் கங்கை நீர் போல உன் கம்பீரமான குரலில் சங்கீதம் கரைபுரண்டு ஓடட்டும். எது வேணுமானாலும் பாடு. என் பஜனை மண்டலிக்காரர்கள் உனக்கு ஒத்துழைப்பு தருவார்கள்!’’

ஒரு பிரசித்தி பெற்ற பாடகருடன் சேர்ந்து பாட சந்தர்ப்பம் கிடைத்ததே என்று அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
பிலு ராகத்தில் கான் சாகேப் பஜன் பாடல் ஒன்றைப் பாடலானார். பாபா தன்னை மறந்து கேட்டார். எல்லோரும் அமைதியுடன் உட்கார்ந்து பாட்டை ரசித்தார்கள். பாடி முடித்ததும், கைதட்டல் அடங்க வெகு நேரமானது.

‘‘எவ்வளவு அழகாகப் பாடினான் பார், கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது’’ - சந்தோஷமடைந்து பாபா உற்சாகத்துடன் சொன்னார்.
பிறகு, கான் சாகேப்பைப் பன்னிரண்டு நாட்கள் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார். தினமும் மைபில் என்னும் சங்கீதக் கச்சேரி மற்றும் பஜன் இருந்தது. அதைக் கேட்கக் கூட்டம் கூடியது. ஒரு நாள் அவர், ‘காலின் லோடாங்கண் வந்தின்காண், டோள்யானி பாஹின் ரூப் துஜே’ எனும் பிரசித்தமான அபங் பாட்டைப் பாடினார். கைதட்டல் விண்ணைப் பிளந்தது. இன்னொரு நாள் தர்பாரி கானடா ராகத்தில் அருமையான பஜன் பாடல் பாடி, கூட்டத்தினரை மகிழ்வித்தார்.

கடைசி நாளன்று மராட்டி அபங் பாடினார். பாபா ரொம்பவும் ஆனந்தமடைந்தார். வெள்ளிக்காசு எடுத்து கான் சாகேப்பிற்கு வழங்கி, ‘‘இதைச் செலவழிக்காதே. பெட்டி யில் வை. இன்று வரை அநேகம் பேர் என்னை பக்தி பாவத்துடன் பல முறைகளில் பூஜை செய்திருக்கிறார்கள். ஆனால், உன் இனிமையான சங்கீதத்தால் என்னை பூஜை செய்து கட்டி வைத்ததை எதனுடனும் ஒப்பிட முடியாது. பாடுவது இருக்கிறதே அது சுயநலமில்லாதது. கடவுளை பூஜிப்பது போலாகும். அப்துல், உன்னுடைய உண்மையான தகுதிக்கான இடம் சுவர்க்கம் ஆகும். ஆனால் மதுரமான குரலில், இசையால் இவ்வுலகை சுவர்க்கம் ஆக்க நீ இங்கு வந்திருக்கிறாய்! என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு எப்பொழுதும் இருக்கும்!’’

பாபா மறுபடி ஆரத் தழுவி அவருக்கு விடை கொடுத்து அனுப்பினார். மனநிறைவுடன் அங்கிருந்து கிளம்பினார் கான் சாகேப்.
ஒரு ஓய்வு நேரத்தில் தாஸ்கணு ஷீரடிக்கு வந்து, பாபாவிற்கு சேவை செய்யும் முகமாக, அவர் காலை மென்மையாக அமுக்கிவிட்டுக் கொண்டிருந்தார். பாபா அவர் மேல் பிரியமாக இருந்தார். காரணம், தாஸ்கணு வேலையை விட்டுவிட்டு, பாபாவின் அருமை பெருமைகளை கீர்த்தனை வாயிலாக எல்லா ஊர்களுக்கும் போய்ப் பரப்பி வந்தார்.
‘‘என்ன கணு? எல்லாம் சரியாக இருக்கிறதல்லவா?’’

‘‘பாபா, தங்களுடைய கிருபையால் எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால், ஒரு சந்தேகம் கேட்கட்டுமா?’’
‘‘கேளேன்.’’

‘‘பாபா, ஈஷாவாஸ்யபாவார்த்த போதினி என்கிற நூலை நான் எழுதி வருகிறேன். ஆனால், அதில் வரும் ஒரு மந்திரத்தின் அர்த்தம் தெரியவில்லை. குழப்பமாக இருக்கிறது.’’
‘‘எந்த மந்திரம்?’’
‘‘ஷாவாஸ்யமிதம் ஸர்வ யத்கிம்சஜகத்யாம் ஜகத்து

தேன த்யக்தேன புத்ரஜீதா க்ருதஹா கஸ்ய
ஜித்தனம் ஸ்வித்தனம்\’’
‘‘உனக்கு இதன் அர்த்தம் என்னவாக விளங்குகிறது?’’ பாபா கேட்டார்.

‘‘இந்த உலகில் உயர்ந்தது, அழகானது என்று சொல்லப்படுபவை எல்லாவற்றிலும் கடவுள் வியாபித்து இருக்கிறார் என்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டு, பகவானை சதா சர்வ காலமும் துதியுங்கள். அனுபவிக்கும் பொருட்கள் மீது அன்பும் உரிமையும் கொண்டாடாதீர்கள். இந்த இன்பங்கள் நிலையானவை அல்ல.’’
‘‘சரி தாஸ்கணு. கவலைப்படாதே. நிம்மதியான மனதுடன் இரு. இதில் என்ன கஷ்டம் இருக்கிறது. வந்த இடத்திற்கே திரும்பிப் போ. அப்பொழுது, காகா வீட்டு வேலைக்காரப் பெண் உன் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பாள்’’ என்றார் பாபா.

இதைக் கேட்டு, தாஸ்கணு ஆச்சரியமடைந்தார். ‘சமஸ்கிருத மொழியின் இந்த மந்திரத்திற்கு காகாஜியின் வேலைக்காரப் பெண்ணா விளக்கம் அளிக்கப் போகிறாள்? பாபா கேலி செய்யவில்லையே?’
பிறகு ஒருநாள் அவர், காகாசாகேப் தீட்சித் வீட்டிற்கு வந்து தங்கினார். அவர் மனதில் பழைய விஷயம் நினைவிற்கு வந்து அலைக்கழித்தது. வேலைக்காரச் சிறுமி எப்படி தன் சந்தேகத்தைப் பூர்த்தி செய்யப்போகிறாள்?

மறுநாள் காலை தாஸ்கணு கண் விழித்தபோது, யாரோ இனிமையாகப் பாடுவது அவர் காதில் விழுந்தது. சட்டென்று எழுந்து உட்கார்ந்து முழுப்பாட்டையும் கேட்டார். இதைக் கேட்ட பிறகுதான் மந்திரத்தின் சரியான அர்த்தம் தெளிவாகத் தெரிந்தது. வெளியே ஓடிவந்து யார் பாடுகிறார்கள் என்று பார்த்தார். அவள் காகாஜி வீட்டு வேலைக்காரச் சிறுமி. பாத்திரம் தேய்த்துக்கொண்டே ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தாள்.

எட்டு வயதான சிறுமி, இடுப்பில் கந்தலாடை கட்டியிருந்தாள். ஆனால், வெள்ளி மற்றும் பொன்னால் இழைத்த பகட்டான சேலையைப் பற்றி பாட்டில் வர்ணித்திருந்தாள். வயிறாரச் சாப்பிடுவதற்கு உணவு இல்லை. உடலில் நல்ல உடை இல்லை. இந்த நிலையிலும் இவள் எவ்வளவு சந்தோஷமாகப் பாடுகிறாள். இவளுடைய இந்த ஒழுக்கம்தான், எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் இவளுடைய குணம்தான் ஈஷாவாஸ்யோபனிஷத்திலுள்ள மந்திரத்திற்கு சரியான விளக்கம் என தாஸ்கணு முதலில் நினைத்தார்.

‘‘இந்த வேலைக்காரச் சிறுமி யின் உடையைப் பாருங்கள். கந்தலாகி இருக்கிறது. ஒரு புதிய புடவை வாங்கிக் கொடுத்தால், உங்களுக்குப் புண்ணியமாக இருக்கும்’’ என்று காகா சாகேப்பிடம் தாஸ்கணு கேட்டுக்கொண்டார். இளகிய மனம் கொண்ட காகா சாகேப்பும் மறுநாளே புதுப்புடவை ஒன்றை அவளுக்கு வாங்கிக் கொடுத்தார். அவள் ரொம்ப சந்தோஷப்பட்டாள். அதைக் கட்டிக்கொண்டு மகிழ்ச்சி பொங்க வந்தாள். இதர பெண்களுடன் ஓடியாடிப் பாடினாள்.

அடுத்த நாள், புதுப்புடவையை மடித்துப் பெட்டியில் வைத்துவிட்டு, பழைய கந்தல் துணியையே கட்டிக்கொண்டு வந்தாள். அப்பொழுதும் அவள் பழையபடியே மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடினாள்.
தாஸ்கணுவின் கண்கள் விரிந்தன. கந்தலாகட்டும், புதுத் துணியாகட்டும்... அவளுக்கு எல்லாம் ஒன்றுதான். சந்தோஷத்திற்குக் குறைவில்லை. இன்பம், துன்பம் என்பவை மனதில் ஏற்படும் உணர்வுகளே என்பதையும், கடவுள் அருளால் எது கிடைத்தாலும் அதைக் களிப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அச்சிறுமி அவருக்கு உணர்த்தினாள். ஈஷா வாஸ்யோ உபநிஷத்தின் புதிருக்கு இதுதான் பொருள் என்பது அவருக்கு விளங்கியது. இது மாத்திரமல்ல. அந்த வேலைக்காரச் சிறுமி வேறு யாருமல்ல, தான்தான் என்பதையும் புரிய வைத்தார் பாபா. தாஸ்கணு பரவசமடைந்தார்.

விநாயக்ராவ் தாகூர் ஒரு மாவட்டக் கணக்காளர். பணத்தை எண்ணுவதற்காக அரசாங்க உத்தரவின்படி, பல ஊர்களுக்குப் போய் வரும் வேலை. பெல்காமிற்கு அருகிலுள்ள வடகாவ் என்னும் ஊருக்கு வந்தார்.

தாகூர் அதிகாரியாக இருந்தாலும், ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். அப்பொழுது வடகாவ்வில் அப்பா மகராஜ் என்னும் பிரசித்தி பெற்ற கன்னட சாது இருந்தார். அவரை தரிசித்தார் தாகூர். அப்பொழுது அவர் நிஷ்சல்தாஸ் எழுதிய, ‘விசாரசாகர்’ என்னும் கிரந்தத்தைப் படித்துக்கொண்டிருந்தார்.
‘‘மகராஜ்... தாங்கள் எனக்கு உபதேசம் செய்து, தீட்சை கொடுக்கணும்.’’

‘‘இதோ பார். அந்த அதிகாரம் என்னிடம் இல்லை. வேலை நிமித்தம் நீ வடக்கே போகும்போது, வழியில் ஒரு மகாபுருஷரை தரிசிப்பாய். அவர்தான் உனக்கு உபதேசம் செய்வித்து சன்மார்க்கத்தைக் காட்டுவார். கூடவே இந்த நிஷ்சல்தாஸ் இயற்றிய ‘விசாரசாகர்’ என்னும் கிரந்தத்தையும் எடுத்துச் செல். படி!’’ என்றார் அப்பா மகராஜ்.
தாகூர் அதை பெற்றுக் கொண்டு கிளம்பினார்.

வேலை நிமித்தம் கல்யாணுக்கு வந்ததும், நாநா சாகேப் சாந்தோர்கரை சந்தித்தார். அவர் தாகூரை ஷீரடிக்கு அழைத்து வந்து, பாபாவிடம் அறிமுகப்படுத்தினார்.
பாபாவைக் கண்டதும் தாகூர் பரவசமானார். அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. வணங்கி, நின்றார்.முக்காலத்தையும் உணர்ந்த பாபா, சிரித்துக்கொண்டே கேட்டார்... ‘‘என்ன பக்தா? பெல்காமிலுள்ள கன்னட அப்பா என்ன சொல்கிறார்? அவர் சொன்னபடி சுலபமாக ஆன்மிகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியாது! இங்கு, என்னுடைய வழியே தனி. உடம்பை வருத்தி எடுத்தால் ஒழிய வேறு வழியில்லை!’’

‘‘பாபா, என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் நீங்கள்தான் என்னுடைய வழிகாட்டி, ஆசான்.’’
‘‘பக்தனே. ‘விசாரசாகர்’ நூலைப் படித்தாயா? சமுத்திர அளவு வெறும் யோசனை செய்வதைவிட, ஒரு துளி ஆசார அனுஷ்டானங்களைக் கடைபிடிப்பது நல்லது. அப்பா மகராஜ் சொன்னதை நடைமுறையில் கொண்டுவா. இங்கு சிறிது நாட்கள் நிர்மால்ய மனதுடன் தங்கு. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் விளங்கும்.’’
தலையை ஆட்டினார் அவர்.

நாநா சாகேப் சாந்தோர்கர் பாபாவின் காலை அமுக்கிவிட்டுக் கொண்டும் நடுநடுவே கீதையில் உள்ள ஸ்சுலோகங்களை முணு
முணுத்துக் கொண்டும் இருந்தார்.

‘‘நாநா... ஏன் இவ்வளவு மெதுவாகச் சொல்கிறாய். உரக்கச் சொல்லு பார்க்கலாம்’’ என்றார் பாபா.
‘‘தத்விதித்தி ப்ரணிபாதேந, பரிப்ரஷ்னேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ்ததத்வ தர்ஷன:’’
‘‘நாநா... இதன் அர்த்தத்தைச் சொல்லு பார்க்கலாம்!’’

‘‘யார் ஒருவன் குருவின் பாதங்களைப் பற்றிக்கொண்டு சரணாகதி அடைந்து அவருக்காகத் தன் உயிரையே தியாகம் செய்யவும் தயாராக இருந்து, பக்தியுடன் விளக்கம் கேட்கிறானோ, அவனுக்கு ஞானிகள், ஞானத்துடன் அர்த்தத்தை உபதேசிக்கிறார்கள். இதன் சாராம்சம் என்னவென்றால், ஸ்ரீகிருஷ்ணர் அன்புடன் அர்ச்சுனனிடம், ‘குரு சேவையும் குரு வந்தனமுமே ஞானத் தைக் கொடுக்கும். நீ இந்த முறையைப் பின்பற்றினால், தத்துவார்த்தங்களை அறிந்த ஞானிகள், உனக்கு ஞான மார்க்கத்தைக் காட்டுவார்கள்’ என்கிறார். பாபா, எனக்கு இந்த அர்த்தம்தான் தெரிகிறது’’ என்றார் நாநா.
இதற்கு பாபா என்ன விளக்கம் சொல்லப் போகிறார் என்று கேட்க எல்லோரும் ஆவலாக இருந்தார்கள்.

‘‘நாநா, முதல் இரண்டு வரிகளின் அர்த்தம் சரியாக இருக்கிறது. மற்ற இரண்டின் அர்த்தம் எனக்குச் சரியாகப்படவில்லை’’ என்றார் பாபா.
‘‘அப்படியென்றால்?’’‘‘நாநா, ஞானம் என்கிற சப்தத்திற்குப் பின்னால் ‘அ’ என்ற எழுத்தை இணைத்து அந்த அடியின் அர்த்தத்தைப் பார். ஞானம் என்பது பேசக்கூடிய விஷயமல்ல என்றால், அதை எப்படி உபதேசம் செய்ய முடியும்? எனவே, ஞானம் என்கிற வார்த்தைக்கு முன்னால் எதிர்மறையான ‘அ’ வார்த்தை சேர்த்துப் பார்த்தால், நீ இதன் பொருளை அறிவாய். அஞ்ஞானம் என்பது வார்த்தைகளில் அடங்கக்கூடிய விஷயமாகும்.

எப்படி கர்ப்பத்தின் மீது கொடி சுற்றிக் கொண்டிருக்கிறதோ, கண்ணாடியை அழுக்கும், நெருப்பை சாம்பலும் மூடியிருக்கிறதோ... அதைப் போல அஞ்ஞானம் என்பது ஞானத்தை மூடிக் கொண்டிருக்கிறது. இப்படி ஸ்ரீகிருஷ்ணன் கீதையில் சொல்லியிருக்கிறார். எனவே அஞ்ஞானத்தை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டால், ஞானமானது தானாகவே ஒளிவிடும். எப்படி தூய்மையான நீரின் மேல் பாசி படர்ந்திருக்கிறதோ, அதைப்போல அஞ்ஞானம் படர்ந்திருக்கிறது.

 சூரிய, சந்திர கிரஹணங்களின்போது ராகு, கேதுவானது நம் கண்களிலிருந்து அவற்றை மறைத்துவிடுகின்றன. ஆனால் சூரிய சந்திரன்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதைப் போலவே ஞானம் என்பது உண்மையாகவும் நிலைத்தும் இருக்கிறது. நம்முடைய அஞ்ஞானம் என்கிற திரையை நீக்கினால் ஞானம் என்கிற பிரகாசமான ஒளி தெரியும்.’’

பாபாவினுடைய இந்தப் புதுமையான விளக்கத்தினால் நாநா பிரமித்துப்போனார்.
எப்படி கண்ணாடியை அழுக்கும், நெருப்பை சாம்பலும் மூடியிருக்கிறதோ... அதைப் போல அஞ்ஞானம் என்பது ஞானத்தை மூடிக் கொண்டிருக்கிறது.
இந்த உலகில் உயர்ந்தது, அழகானது என்று சொல்லப்படுபவை எல்லாவற்றிலும் கடவுள் வியாபித்து இருக்கிறார் என்பதை மனதில் பதியுங்கள்!

(தொடரும்...)

தமிழில்: பி.ஆர்.ராஜாராம்

வினோத் கெய்க்வாட்