பயம்



அருணாசலம்

‘‘ஐயோ, வேணாங்க... நான் ஒண்ணும் செய்யலைங்க... விட்ருங்க!’’ - தூக்கத்தில் உளறிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தார்! மனைவி மணிமாலா கலவரமாகி எழுந்து, லைட் போட்டு அருகில் அமர்ந்தாள். இப்போதெல்லாம் அருணாசலம் இப்படி நடு இரவில் எழுந்து உளறுவது அதிகரித்துவிட்டது.
‘‘நீ படுத்துத் தூங்கு! ஏதோ கெட்ட கனவு...’’ என்று மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, பித்துப் பிடித்தவர் போல் சோபாவில் சாய்ந்தார் அருணாசலம்.
இனி அவருக்கு தூக்கம் ஏது?

காலை மணி 5.30... போன் மணி
யடித்தது. பயந்து நடுங்கியபடி எடுத்தார்.
‘‘நல்லவேளை. ஊரில் தங்கைக்குக் குழந்தை பிறந்திருக்காம்... அப்பாடா!’’ - நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்.
காலை பேப்பர் வந்ததுமே பாய்ந்து எடுத்தார். தலைப்புச் செய்தியே ‘திடீர் மாற்றங்கள்’. என்னவோ ஏதோ எனப் பதறியபடி படித்தால், அமெரிக்காவில் எதிர்பாராத பொருளாதார நெருக்கடியாம்!
‘‘ச்சே!’’ - பேப்பரை வீசி எறிந்தார்.

காலை டி.வி செய்தி ஒலித்தது...
‘‘முக்கிய அறிவிப்பு... மாநிலத்தில் இடைத் தேர்தல் முடியும் வரை மந்திரி சபையில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது!’’
‘‘அப்பாடா...  தப்பித்தோம்!’’

என்று நிம்மதியானார் அமைச்சர்
அருணாசலம்.

கௌரிசங்கர்