நடைவெளிப் பயணம்



நான் 1982ல் ஆயிரம் ரூபாய் கட்டி தொலைபேசி இணைப்புக்காகப் பதிவு செய்து கொண்டேன். அப்போதெல்லாம் தொலைபேசிக்காரர்கள் ஒரு பெரிய காவிக்கரை கைவண்டியைத் தெருவில் இழுத்துச் செல்வார்கள்.

அந்த நிதானம் யாருக்கும் எளிதில் வராது. மணிக்கு ஒரு மைல் வேகமாக இருக்கலாம். வண்டி அகலமாக இருக்குமானதால் தெரு முழுதையும் அது அடைத்துக் கொண்டுவிடும். யாராவது வண்டிக்காரர்கள் அந்தத் தொலைபேசி வண்டியைப் பார்த்தார்களானால், வேறு வழி போய்விடுவார்கள். அந்த வண்டியின் வேகத்தை அந்தத் துறையின் இயக்கத்துக்கு ஓர் உதாரணமாக வைத்துக் கொள்ளலாம் என்று கூறுவார்கள். இன்று அந்த வண்டிகள் கண்ணில் படுவதில்லை.

அன்று தொலைபேசிக் கருவி மாயா கலாசாரத்து பிரமிட் போல இருக்கும். பிரமிட் மேல் தளத்தில் இரு குட்டித் தூண்கள் நீட்டிக் கொண்டிருக்கும். நாம் கேட்டு, பேசும் கருவி அந்தக் குட்டித் தூண்களை உள்ளே தள்ளி அமர்ந்திருக்கும். எனக்கு வந்த கருவியில் அந்தத் தூண்கள் உள்ளேயே புதைந்து கிடக்கும். மணி அடித்துக் கொண்டேயிருக்கும். நாங்கள் தவிப்போம். சிறிது நேரம் கழித்து மணி அடிப்பது ஓய்ந்து விடும். பாவம், யார் என்ன அவசரச் செய்தி சொல்ல எங்கள் எண்ணைச் சுழற்றினரோ?

நான் அந்த இலாகாக்காரர்களிடம் என்னவெல்லாமோ சொல்லி பல முறை விளக்கினேன். அவர்களுக்குப் பிரச்னை புரியவில்லை. ‘‘மணி அடிச்சா எடுத்துப் பேச வேண்டியதுதானே?’’ என்றார்கள். ‘‘அந்த பட்டன் மேலே வந்தாத்தானே பேச முடியும்?’’ என்பேன். ‘‘எந்த பட்டன்?’’ என்பார்கள். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் நாங்கள் பேச வேண்டும் என்றபோது முடியாது. வெளியிலிருந்து வரும் அழைப்புகளை ஏதோ ஒருமுறை கேட்க முடியும். தொலைபேசி இருந்தும் இல்லாதது போலவே இருந்து நாங்கள் பழகி விட்டோம்.

எங்கள் வீட்டுச் சாவுச் செய்தியைக்கூட வெளியே ஒரு மருந்துக்கடைக்குப் போய் பேசினோம். அந்தக் கடையில் தொலைபேசி இருந்த இடத்தில், எல்லோரா சிற்பத்தில் உள்ள நடனப் பெண்கள்தான் பேசலாம். சாதாரண மனிதர்களின் உடலை அவ்வளவு நெளிய வைக்க முடியாது.

அன்று நாமாகக் கருவி மாற்றக்கூடாது. யாரோ துபாயிலிருந்து வந்தார். அவரிடம் என் துக்கத்தைச் சொன்னேன். அவர், ‘‘ஒரு வாரம் வைத்துப் பாருங்கள்’’ என்று எங்களிடம் ஒரு தொலைபேசிக் கருவியைக் கொடுத்தார். அதில் எண்களெல்லாம் அரபி எழுத்தில் இருந்தன. நாங்கள் வீட்டை மாற்றியபோது தொலைபேசி அலுவலகத்தில் பழைய தொலைபேசியை ஒப்படைத்தோம். ‘‘எங்கே டைரக்டரி?’’ என்று அந்த அதிகாரி கேட்டார்.

‘‘ரொம்பக் கிழிஞ்சிருக்கு.’’
‘‘வீட்டை மாத்தறீங்க, டைரக்டரியை ஒழுங்கா வச்சுக்க வேண்டாம்?’’
எனக்கு அதன் சம்பந்தம் புரியவில்லை. ‘‘மூணு வருஷம் ஆச்சு’’ என்றேன்.
‘‘சரி, கொண்டாங்க...’’

அந்த டைரக்டரியில் வேறு பலருடைய எண்கள் எழுதி வைத்திருந்தோம். இனிமேல் அவர்களோடு சட்டென்று பேச முடியாது என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் தொலைபேசி இருந்தபோதுதான் என்ன வாழ்ந்தது? டைரக்டரியைக் கொண்டு போய்க் கொடுத்தேன். அதை வாங்கிப் புரட்டிப் பார்த்தார். சில காகிதங்கள், விளம்பரங்கள் இருந்தன. அதை வாங்கி வைத்துக்கொண்டு, ‘‘பாக்ஸ் எங்கே?’’ என்று கேட்டார்.

‘‘பாக்ஸா? டெலிபோனைப் பெட்டியிலே தரலியே?’’
‘‘பாக்ஸ்னா, நான் சூட்கேஸா கேட்டேன்?’’

எனக்கு வீடே மாறவேண்டாம் எனத் தோன்றியது. தொலைபேசியை ஒரு நகரிலேயே இன்னொரு பேட்டைக்கு மாற்றுவது ஏதோ வழிப்பறி செய்து மாட்டிக்கொள்வது போலல்லவா இருக்கிறது! இதே போல ஒருமுறை ரேடியோ லைசென்ஸ் வாங்கப் போனபோதும்  தவித்தேன். உரிய நேரத்தில் ரேடியோ லைசென்ஸ் வாங்கா விட்டால், அது கப்பல் கொள்ளைக்காரர்கள் குறித்த சட்டத்தின் கீழ் குற்றம். பிரிட்டிஷ் அரசானால் ஒரு பொது இடத்தில் தூக்கில் போடுவார்கள். ரேடியோவுக்கு லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றிருந்த வரையில் அந்தச் சட்டம் இருந்தது. அதன் பெயர் ஆன்ட்டி பைரசி ஆக்ட்! நகல் எடுத்தாலும் பைரசிதான் என்றார்கள். நாங்கள் ரேடியோவை ரகசியமாகக் கேட்போம்.

இன்று தொலைபேசிக்காரர்கள் இணைப்புதான் தருவார்கள். கருவி நீங்கள்தான் வாங்கிக் கொள்ள வேண்டும். ஒரு கருவியும் சில மாதங்களுக்கு மேல் வேலை செய்யாது. சரி செய்துகொள்ள முடியாது. புதிதுதான் வாங்க வேண்டும். எங்கள் வீட்டு பீரோ மீது பல வண்ணங்களில் கருவிகள் சேர்ந்து விட்டன... பழைய பேப்பர்காரர்கள் எது எதையோ தூக்கிச் செல்கிறார்கள். தொலைபேசிக் கருவியைத் தொடவும் மாட்டேன் என்கிறார்கள். ‘‘இதெல்லாம் போகாதுங்க’’ என்கிறார்கள்.

ஓர் இரவு ரகசியமாக ஒரு மூட்டையைக் குப்பைமேட்டில் போட்டு வந்தோம். எலெக்ட்ரானிக் குப்பைகள் தொடர்பாக பல இடங்களில் கடுமையான சட்டங்கள் உள்ளன. தண்டனை அநேகமாக, தூக்கு தண்டனையாக இருக்கலாம். நாம் எல்லோரும் ஆயிரக்கணக்கில் பேட்டரிகளைக் குப்பையில் போடுகிறோம். இது மனித இனத்திற்கு எதிரான செயல். க்ரைம் அகெய்ன்ஸ்ட் ஹ்யூமானிடி. சரி, எங்கே போடவேண்டும், என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு கைபேசியோடும் அதன் பயன்பாட்டு முறை பற்றி ஒரு சிறு புத்தகம் தருகிறார்கள். எல்லோரும் சரியான இடத்தில் போட வேண்டும் என்கிறார்கள். எது சரியான இடம்?

இன்று கையில் உள்ள ஒரு சிறு கருவி மூலம், ஒரு மனிதரின் சரியான எண் இருக்குமானால் தென் அமெரிக்காவில் உள்ளவரோடு பேசலாம். அதற்கும் நேரம் காலம் இருக்கிறது. அவர் இருக்கும் இடத்தில் அவர் தொலைபேசியில் பேசக்கூடிய நேரமாக இருக்க வேண்டும். என்னுடைய ஒரு மகனுக்கு, அவனுடைய முதலாளியுடன் வேறு வேறு நாடுகளாகச் செல்ல வேண்டிய வேலை. ஒரு குறிப்பிட்ட நாளில் அவன் எந்த நாட்டில் இருப்பான் என்று தெரியாது. நாங்கள் பேச நினைக்கும் நேரம் அவனுக்குப் பகலா, நள்ளிரவா, அவன் தூங்குவானா... எதுவும் தெரியாது. இதனால் நாங்கள் அவனுடன் தொலைபேசியில் பேசுவதையே விட்டுவிட்டோம்.

உபதேசங்கள் பற்றியும் யோசனைகள் பற்றியும் ஒரு பழமொழி உண்டு. உண்மையில் யாருமே யாருடைய யோசனையையும் கேட்பதில்லை! அரசியல் தலைவர்கள் ‘உலகத்தைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற அவதாரம் செய்தவர்களாக’ தங்களை நினைத்துக் கொள்ளலாம்; நடந்தும் கொள்ளலாம். நேற்று ஒரு தகப்பனார் அவருடைய மகனுக்குப் புத்திமதி கூறச் சொல்லியிருக்கிறார். என்ன கூற வேண்டும்? அவனுடைய ஸ்மார்ட் கைபேசியில் ராப்பகலாக ஃபேஸ்புக் பார்த்தபடி இருப்பதைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.

நிழற்படம் போல என் நாற்பது ஆண்டு தொலைபேசி அனுபவங்கள் மனத்துள் தோன்றின. ‘‘சரி’’ என்றேன்.
என்னால் ஏதும் செய்ய முடியாது என்று எனக்குத் தெரியும்; அது அவருக்கும் தெரியும்.

பார்க்க...

நடிகர் ரோகிணி ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். எடுத்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடியது. பெயர்,‘ஷிவீறீமீஸீt பிuமீs’. அதாவது, மௌன வண்ணங்கள். திரைப்படம் மற்றும் ஊடகங்களிலும் நடிக்க வரும் குழந்தைகள், அவர்கள் பெற்றோர் பற்றி. ஒரு மணி நேரத் தீவிர அனுபவம். ஓர் அறியப்பட்ட உறவு இல்லாமல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன? இந்தப் போலி முக்கியத்துவம் நிஜமுமில்லை, நீடிக்கக் கூடியதும் இல்லை. லட்சம் குழந்தைகள் திரையில் தோன்றினால் ஒரு கமல்ஹாசன், ஒரு ஸ்ரீதேவி சாத்தியமாகும். குழந்தையின் பெற்றோர்கள் இன்னும் பலவீனமானவர்கள்.

எனக்குத் தெரிந்து ஒரு குழந்தை, அதன் பெற்றோர்கள் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இந்தத் திரை அனுபவத்தினின்று மீண்டார்கள். அந்தக் குழந்தை பெயர் முரளி. பெற்றோர் கலாசாகரம் ராஜகோபால் தம்பதியர். எனக்கு ராஜகோபாலுடன் தொடர்பு விட்டுப் போய்விட்டது. முரளியை ஒரு நாள் சபையர் சினிமாவாக இருந்த இடத்தருகில் பார்த்தேன். அவன் ஆடிட்டர் படிப்பு முடித்து அரபு நாடொன்றில் பணி புரிந்து கொண்டிருந்தான். முரளி ‘வள்ளியின் செல்வன்’ என்ற படத்தில் முதலில் நடித்தான். உடனே தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என டஜன் கணக்கில் படங்கள். அவன் நடித்தான், படிப்பிலும் கவனமாக இருந்தான். ஒன்று சொல்ல வேண்டும்... அவன் பொருட்டு அவன் பெற்றோர்கள் ஒரு ஸ்டூடியோவுக்கும் போகவில்லை. ஒரு படப்பிடிப்புக்கும் மகனுக்குத் துணை நிற்பது போன்ற செயலில் ஈடுபடவில்லை.

பழைய பேப்பர்காரர்கள் எது எதையோ தூக்கிச் செல்கிறார்கள். தொலைபேசிக் கருவியைத் தொடவும் மாட்டேன் என்கிறார்கள். ‘‘இதெல்லாம் போகாதுங்க’’ என்கிறார்கள்.

(பாதை நீளும்...)