சுந்தர் ராம் படபட பேட்டிசுந்தர்ராம்... போட்டோகிராபர், நடிகர். நடித்திருப்பது அரை டஜன் படங்களில்தான் என்றாலும், இவரைப் பற்றி வந்த கிசுகிசுக்களை வைத்தே ஒரு டஜன் சினிமா எடுக்கலாம். ஆண்ட்ரியாவுடன் கல்யாணம், ரிச்சாவுடன் காதல் என லைம்லைட்டில் இருந்தவர், கடந்த இரண்டு வருடங்களாக இருக்கும் இடம் தெரியவில்லை. இப்போது மறுபடி, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘நான் சிகப்பு மனிதன்’ படங்களில் நெகட்டிவ் முகம் காட்டியிருப்பவரை ஒரு போட்டோ ஷூட்டில் சந்தித்தோம்...

‘‘நடிப்பு, போட்டோகிராபி... எது உங்களுக்கு ஆத்மார்த்தம்?’’‘‘இது மட்டுமில்ல... எனக்கு ஆத்மார்த்தமானதுன்னு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. அடிப்படையில் நான் ஒரு ஃபுட்பால் பிளேயர். நேஷனல் டீம்ல விளையாடியிருக்கேன். பிறந்தது, ஸ்கூல் படிச்சதெல்லாம் பெங்களூரில்தான். அப்பா பெரிய ஸ்கூலே நடத்துறார். நாலு தலைமுறையா ஆண் வாரிசே இல்லாத குடும்பத்தில் பிறந்ததால ரொம்ப செல்லம். செல்வமும் செல்லமும் என்னைக் கெடுத்துடக்கூடாதுன்னு அப்பா என்னை வேற ஸ்கூல்ல... அதுவும் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்க வச்சார். அங்கே ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே சொந்தமா நாடகம் இயக்கி நல்ல பெயர் வாங்கினேன்.

லயோலா காலேஜ்ல விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சப்போதான் போட்டோகிராபி மேல ஆர்வம் வந்துச்சு. பாக்கெட் மணியை சேர்த்து வச்சு, பழைய கேமராவை வாங்கித்தான் அந்தத் துறையில வளர்ந்தேன். எல்லாத்தையுமே நான் ஆத்மார்த்தமா நினைச்சுதான் செய்யறேன்...’’‘‘சினிமாவுக்கு வந்தது எப்படி?’’
‘‘ஆண்ட்ரியா எனக்குப் பல வருஷமா பழக்கம். அவங்களோட முதல் நாடகமே நான் இயக்கினது தான். தனுஷ் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடிக்க ஆண்ட்ரியாதான் என்னை சிபாரிசு பண்ணினார். அந்தக் குறும்படத்தைப் பார்த்த செல்வராகவன், ‘மயக்கம் என்ன’ படத்தில் நடிக்க வச்சார். பிறகு, ‘3’, ‘டேவிட்’ படங்களில் நடிச்சேன். நடிக்க வந்தாலும் போட்டோகிராபியை விடலை. இதுக்கு நடுவில், ‘இவர் போட்டோகிராபர்... நடிக்க வரமாட்டார்’னு சினிமாவிலும், ‘சினிமாவில் நடிக்கப் போயிட்டார்’னு போட்டோகிராபி துறையிலும் பேச்சு வளர்ந்துடுச்சு. இதனால இரண்டு வருஷம் வீணாகிடுச்சு. இப்போ தொடர்ச்சியா நடிச்சிக்கிட்டிருக்கேன்.
நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வர்றவங்ககிட்ட, ‘நான்தான் பெரிய ஆள்’னு ஒரு நினைப்பு இருக்கு. ஆனா, நான் அப்படி நினைக்கமாட்டேன். சினிமாவிலும் கத்துக்க நிறைய இருக்கு. ரஜினி, கமல், சத்யராஜ் சாருக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகர் தனுஷ் தான். எல்லா விஷயத்திலும் அவருக்கு ஆர்வம் இருக்கு. அவரோடு வேலை பார்த்தப்போ அவர் திறமை என்னை வியக்க வச்சது. ‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு விஷாலைப் பிடிச்சுப் போச்சு. மாறுபட்ட கேரக்டரில் நடிக்க விரும்புறேன். வில்லன், பிச்சைக்காரன்... எந்த கேரக்டரா இருந்தாலும் நடிக்க ரெடி!’’
‘‘இடையில் நிறைய கிசுகிசுக்களில் சிக்கினீங்களே..?’’
‘‘ஆணும் பெண்ணும் பேசினா, அது காதலாகத்தான் இருக்க முடியுமா? ரிச்சா கங்கோபாத்யாயா, அமெரிக்காவிலிருந்து வந்த பெங்காலி பொண்ணு. தமிழ்ல நடிக்க வந்த புதுசுல அவங்களுக்கு இந்த மொழி புரியல. பழக்க வழக்கங்களும் வித்தியாசமா இருந்ததால தனியா ஃபீல் பண்ற மாதிரி இருந்தது. அதைப் புரிஞ்சிக்கிட்டு நான் அவங்களுக்கு உதவியா இருந்தேன். அதில் நட்பு மட்டுமே இருந்தது. ஆனா, வெளியே வேற மாதிரியா பேச ஆரம்பிச்சாங்க.
சரி, அப்படியே நாங்க லவ் பண்ணினா அது பற்றி மற்றவங்களுக்கு என்ன? நான் வேற யாரோட புருஷனோ, அவங்க வேற யாரோட பொண்டாட்டியோ இல்லையே! ரிச்சாவுடன் கெட்ட நோக்கத்தில் பழகவில்லை. எனக்கு அதுக்கான நேரமும் இல்லை. நான் பரவாயில்லை... ஆண். ஆனா, அவங்க எப்படி தாங்கிக்க முடியும். கிசுகிசு வந்ததுக்கு பிறகு ரிச்சா என்னோட பேசுறதையே நிறுத்திக்கிட்டாங்க. பாவம்ங்க அவங்க!’’
‘‘ஆண்ட்ரியாவை கல்யாணம் பண்ணிக்கப் போறதாகவும் செய்தி வந்ததே?’’‘‘ம்... பத்து வருஷத்துக்கும் மேல ஆண்ட்ரியாவோட நட்பு இருக்கு. இதெல்லாம் தெரியாம, ‘ரிச்சாவுடனும் இருக்கார்... ஆண்ட்ரியாவுடனும் இருக்கார்... யாரை கல்யாணம் பண்ணிப்பார்’னு பட்டி மன்றம் நடத்தினாங்க. ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கினதாகவும் எழுதினாங்க. நானே ட்ரிபிள் பெட்ரூம் வீட்டில் தனியாத்தான் இருக்கேன். நான் ஏன் ரூம் எடுத்து தங்கணும்?
இவ்வளவு செய்திகளுக்குப் பிறகும் நானும் ஆண்ட்ரியாவும் நட்பாதான் இருக்கோம். இதைத் தப்பா பேசாதீங்க. இருபது வருஷமா போட்டோகிராபி ஃபீல்டுல இருக்கேன். உலகம் முழுக்க எவ்வளவோ அழகிகளை போட்டோ எடுத்திருக்கேன். யாரோடவும் தப்பா பழகினதில்லை. மும்பையில் ஒரு பெண்ணுடன் தனியா தங்கியிருப்பதாவும், காதல் தோல்வியில் கையை அறுத்துக்கிட்டு தற்கொலை முயற்சி பண்ணினதாவும் கூட எழுதினாங்க. என் வாழ்க்கையை நூறு வருஷத்துக்கு பிளான் பண்ணி வச்சிருக்கேன். நான் ஏன் தற்கொலை பண்ணிக்கணும்?’’
- அமலன்