இதுவரை காணாத மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது இந்தியா. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வியாழக்கிழமை நிலவரப்படி 65.35 காசுகளாக சரிந்திருக்கிறது. விரைவில் 70 ரூபாயைத் தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. டாலர் மதிப்பு உயர்வதால் இந்தியப் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்த வெளிநாட்டவர்கள், அவசர அவசரமாக தங்கள் முதலீட்டை திரும்பப் பெறுகிறார்கள். மதிப்பிழக்கும் ரூபாயால் விலைவாசியும் எகிறும்! இதே நிலை தொடர்ந்தால் சர்வதேச ரேட்டிங் ஏஜென்சி இந்தியப் பொருளாதாரத்தை ‘தர இறக்கம்’ செய்ய வாய்ப்புண்டு என்றும் அஞ்சுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
ஏன் இந்த வீழ்ச்சி..? அமெரிக்க டாலருக்கும், நமது ரூபாய்க்கும் என்ன சம்பந்தம்..? ரூபாயை மீட்பது எப்படி..?
பொருளாதார நிபுணர் சோம.
வள்ளியப்பனிடம் பேசினோம்.
‘‘ஒவ்வொரு நாடும் ஏற்றுமதி, இறக்குமதிகளில் ஈடுபடுகிறது. இந்தப் பரிவர்த்தனைக்கு உள்நாட்டுப் பணத்தைப் பயன்படுத்த முடியாது. ஒரு பொருளை நாம் இறக்குமதி செய்கிறோம் என்றால் அதற்கான பணத்தை ரூபாயாகக் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். உலகம் முழுவதும் செல்லுபடியாகக்கூடிய பொதுவான ஒரு பணமாகத் தரவேண்டும். அதுதான் அமெரிக்க டாலர். இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனைக்கு அமெரிக்க டாலரைத்தான் பயன் படுத்துகின்றன. அதனால் எல்லா நாடுகளுமே அமெரிக்க டாலரை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதனால் டாலருக்கு டிமாண்ட் உண்டு.
ஒரு நாட்டில் ஏற்றுமதியும் இறக்குமதியும் சமமாக இருக்கும் பட்சத்தில் வரவும், செலவும் சமமாக இருக்கும். அதனால் டாலர் இருப்பில் பாதிப்பு ஏற்படாது. உள்நாட்டுப் பணத்தின் மதிப்பிலும் மாற்றம் இருக்காது. ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகமானால் கூடுதலாக கையில் இருந்து டாலர் செலவிட வேண்டிவரும். அப்போது டாலரின் தேவை அதிகரிக்கும். இந்தியா ஆண்டுக்கு சுமார் 300 பில்லியன் டாலருக்கு (1 பில்லியன் டாலர்=சுமார் 6,500 கோடி ரூபாய்) ஏற்றுமதி செய்கிறது. சுமார் 320 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்கிறது. ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் ‘நடப்புக்கணக்கு பற்றாக்குறை’ ஏற்படுகிறது.

இன்னொரு பக்கம் பணவீக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கடந்த வருடம் 60 ரூபாய் கொடுத்தால் 1 லிட்டர் பெட்ரோல் கிடைத்தது. இந்த ஆண்டு அதே 60 ரூபாய்க்கு 800 மி.லி பெட்ரோல்தான் கிடைக்கிறது. பொருட்களின் மீதான பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதுதான் பணவீக்கம். உள்நாட்டிலேயே பணத்தின் மதிப்பு குறைவது ஒருபுறம், கூடுதல் இறக்குமதி காரணமாக டாலரின் தேவை அதிகரிப்பது ஒருபுறம், ஆக இரண்டுமாகச் சேர்ந்து டாலரின் விலையை ஏற்றுகிறது.
இங்கு நடுத்தர மக்கள் தங்கத்தில் முதலீடு செய்யவே விரும்புகிறார்கள். அதனால் கணிசமாக இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. அண்மைக்காலமாக இங்கு நிலக்கரி உற்பத்தி குறைந்ததால், அதையும் பெருமளவு இறக்குமதி செய்கிறார்கள். விவசாய உற்பத்தி குறைந்ததால் உணவுப்பொருள் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியைக் குறை சொல்ல முடியாது. ஆனால் செல்போன் முதல் டைல்ஸ் வரை ஏராளமான வெளி நாட்டு ஆடம்பரப் பொருட் களையும் வாங்குகிறோம். அதனால் டாலரின் தேவை அதிகமாகிறது.
நம்நாட்டின் இறக்குமதியில் நூறில் 40 ரூபாய் கச்சா எண்ணெய்க்காக செலவிடுகிறோம். பெட்ரோல் விலை அதிகமாகும்போது எல்லாப் பொருட்களுமே விலையேறும். மேலும் யூக வணிகம் எனப்படும் ஆன்லைன் வர்த்தகத்தில் கரன்சிகளை வைத்து விளையாடுகிறார்கள்.
அமெரிக்காவில் பொருளாதாரத் தேக்கநிலை ஏற்பட்டபோது, அந்நாடு ‘பாண்ட் பையிங் புரோகிராம்’ என்ற பெயரில் ஏகப்பட்ட டாலரை அச்சடித்து புழக்கத்தில் விட்டது. பல அமெரிக்க நிறுவனங்கள் அந்த டாலரின் ஒரு பகுதியை இந்தியா போன்ற நாடுகளில் கொண்டு வந்து முதலீடு செய்தார்கள். இப்போது அந்நாட்டில் பொருளாதாரச் சிக்கல் தீர்ந்து வருகிறது. டாலர் அடிப்பதைக் குறைத்து விட்டார்கள். அதனால் டாலரின் மதிப்பு கூடியிருக்கிறது. டாலரின் மதிப்பு கூடியதால் இங்கு முதலீடு செய்த வெளிநாட்டவர்கள் பங்குகளை விற்றுவிட்டு டாலராக தங்கள் நாட்டுக்குக் கொண்டு போகிறார்கள். அதனால் இங்கு புழக்கத்தில் இருந்த டாலர்கள் குறைகின்றன.
இதைச் சரிசெய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியத் தொழிலதிபர்கள் வெளிநாட்டில் முதலீடு செய்யும் வரம்பு 2 லட்சம் டாலரில் இருந்து 75 ஆயிரம் டாலராக குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் டாலராக டெபாசிட் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறக்குமதியிலும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார்கள். தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியா முழுவதும் நல்ல மழை பெய்துள்ளதால் விவசாய உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதனால் விரைவில் ரூபாய் மீண்டு வரும்’’ என்கிறார் சோம.வள்ளியப்பன்.
டாலர் உயர்ந் தால் என்ன..? ரூபாய் சரிந்தால் என்ன என்கிறீர்களா..?
எல்லாவற்றுக்கும் விலை கொடுக்கப்போவது நாம்தான். ரூபாய் மதிப்பு குறைந்தால் இறக்குமதிக்கு அதிக செலவு செய்ய வேண்டும். உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டும். பொருட்களின் விலை உயரும். மானியங்கள் நிறுத்தப்படும். இறுதியில், மிஞ்சியிருக்கிற கோவணமும் காணாமல் போய்விடும்.
- வெ.நீலகண்டன்
10 கட்டளைகள்* இந்தியத் தயாரிப்புகளையே வாங்குங்கள். முடிந்தவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களைத் தவிர்த்து விடுங்கள்.
* பக்கத்து தெருவுக்குக்கூட பைக்கில் பறப்பதைத் தவிர்த்துவிடுங்கள். முடிந்தால் நடந்து போங்கள். வாய்ப்பிருக்கும் பட்சத்தில் பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துங்கள். நீங்கள் மிச்சம் செய்யும் ஒவ்வொரு துளி பெட்ரோலும், ரூபாய்க்கு வலு சேர்க்கும்; உங்கள் பர்ஸும் இளைக்காது.
* எரிபொருளுக்கு அடுத்து அதிகம் இறக்குமதியாவது தங்கம்தான். அத்தியாவசியத் தேவைக்கு ஆபரணம் வாங்கலாம்; தப்பில்லை! ஆனால் தங்கத்தில் முதலீடு செய்வதைத் தவிருங்கள். அது ஆக்கபூர்வமான முதலீடு இல்லை.
* இரண்டாம் தர விளையாட்டுப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் சீனா இந்தியச் சந்தையில் கொண்டு வந்து கொட்டுகிறது. வாழ்க்கைக்கு அவசியமற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்குவதைத் தவிருங்கள்.
* சிக்கனமாக வாழ்வது வீட்டுக்கு மட்டுமல்ல, தற்சமயம் நாட்டுக்கும் தேவை. மின்சார உற்பத்திக்கு ஏகப்பட்ட எரிபொருள் செலவாகிறது. நிலக்கரியை பெருமளவு இறக்குமதியே செய்கிறோம். எனவே தேவையில்லாமல் ஏ.சி., மின்விளக்குகள், காற்றாடிகள் பயன்படுத்தாதீர்கள். எல்லாப் பொருட்களையுமே அளவோடும், அவசியத்தோடும் பயன்படுத்துவது நல்லது.
* ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கும், டாலர் மதிப்பு உயர்வுக்கும் ஆன்லைன் வர்த்தகமே முக்கியக் காரணம். கரன்சிகளை வைத்து யூகவணிகம் செய்வதாலும், பதுக்குவதாலும் கூட மேலும் டாலரின் மதிப்பு உயர்கிறது. சூதாட்டம் போல நடக்கும் யூகவணிகத்தை முறைப்படுத்துவது அவசியம்.
* விவசாய வீழ்ச்சி காரணமாகவும் இறக்குமதியின் தேவை அதிகரிக்கிறது. எண்ணெயில் இருந்து வெங்காயம் வரை எல்லாவற்றையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை. இளம் தலைமுறை விவசாயத்தில் தீவிரம் காட்ட வேண்டும். நவீன உத்திகளைக் கடைப்பிடித்து மரபு வழி விவசாயம் செய்தால் கணிசமாக லாபம் கிடைக்கும். ஏற்றுமதி வாய்ப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். நம் பாரம்பரிய அரிசி ரகங்கள், இயற்கை வழி வேளாண் பொருட்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு.
* இந்தியாவில் ஆண்டுக்கு பல லட்சம் பொறியாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் இருந்தே கணிசமான இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே பொறியாளர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், தேவைக்கும் தகுந்தவாறு கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.
* கல்லூரிகளும், மேலாண்மை நிறுவனங்களும் மாற்று எரிபொருள் சார்ந்த ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும். தாவர எரிபொருள், கழிவுகளில் இருந்து எரிபொருள் எடுக்கும் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தலாம். எரிபொருளில் இந்தியா தன்னிறைவு அடைந்துவிட்டால் ரூபாயின் மதிப்பு தன்னால் உயர்ந்து விடும்.
* வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியையாவது லாப - நஷ்ட கணக்குப் பார்க்காமல் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்.