புரந்தரதாசர் ரஜினி! : சூப்பர்ஸ்டாரின் அடுத்த சினிமா அவதாரம்





இன்றைக்கும் ஹீரோயிசம் எடுபடும் என்றால், அது ரஜினிக்கு மட்டும்தான். செல்வத்திலும் செல்வாக்கிலும் உச்சம் தொட்டால் என்ன... அகில இந்திய சூப்பர்ஸ்டார் என பட்டம் பெற்றாலும்தான் என்ன... ரஜினியின் ஆன்மிக தாகம் அனைத்தையும் தாண்டியது. அதனால்தான் இந்தச் செய்தியை நம்மால் புறக்கணிக்க முடியவில்லை. ‘ஸ்ரீராகவேந்திரரர்’, ‘பாபா’ வரிசையில், கர்நாடக இசைக் கலைஞரும் ஆன்மிகவாதியுமான புரந்தரதாசராக ரஜினி நடிக்கப் போகிறார் என்பதுதான் அந்தச் செய்தி!

‘‘இது நாங்களோ, ரஜினியோ எடுத்த முடிவில்லை சார். அதுக்கும் மேல ஒரு சக்தி முடிவெடுத்தாச்சு. கண்டிப்பா, புரந்தரதாசர் வேஷத்தில் ரஜினி நடிப்பார்!’’ என நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறார் பெங்களூருவில் உள்ள ஸ்ரீபுரந்தர இன்டர்நேஷனல் அறக்கட்டளையின் செயலாளர் சுவர்ணா மோகன். இப்படியொரு ப்ராஜெக்டை முன் வைத்து, அதில் ரஜினியை நடிக்க வைக்க முயன்று வருவது இந்த அமைப்புதான்.

‘‘14ம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்நாடக இசைக் கலைஞரும், ஸ்ரீகிருஷ்ண பக்தருமான புரந்தரதாசரின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் சேவையை நாங்கள் செய்து வருகிறோம். அவர் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு நெடுங்காலமாக இருந்தது. மூன்றாண்டுகளுக்கு முன் என் கனவில் புரந்தரதாசரே காட்சியளித்தார். ஒரு நிமிடம் திடுக்கிட்டு எழுந்தேன். மீண்டும் உறங்கியபோதும் திரும்பத் திரும்ப அதே காட்சி என் கண் முன் நிழலாடியது.



கனவில் தோன்றிய அந்த உருவத்தை ஓவியமாக வரைந்து கொடுக்கும்படி, எங்கள் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஓவியர் ஒருவரிடம் கூறினேன். அவர் அடையாளங்களை எல்லாம் கேட்டுக்கொண்டு, ஒரு வாரத்தில் ஓவியத்தை வரைந்து கொண்டு வந்தார். பார்த்ததும் நான் ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டேன். அப்படியே அது அச்சு அசலாக ரஜினியின் உருவத்தில் இருந்தது. நான் ரஜினி படங்கள் பார்த்ததில்லை. அவருடன் எந்தத் தொடர்பும் எங்களுக்குக் கிடையாது. அப்படியிருக்கும்போது இந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி எனத் தெரியவில்லை. ரஜினிக்கு இதைத் தெரியப்படுத்தியே ஆக வேண்டும் என முயற்சித்தோம்’’ என்கிற சுவர்ணாவும் அவரது அமைப்பினரும் முதலில் பிடித்தது ரஜினியின் உயிர் நண்பர் ராஜபகதூரைத்தான்.

‘‘பெங்களூருவில் வசித்தாலும் ராஜபகதூரைப் பிடிப்பது சிரமம். ரொம்பக் கஷ்டப்பட்டு அவரைப் பிடித்து விஷயத்தைச் சொன்னோம். புரந்தரதாசராக ரஜினியின் படத்தைப் பார்த்ததும் அவர் வியந்து போனார். திரைப்படம் எடுக்கும் திட்டம் பற்றிச் சொன்னதும், தானே ரஜினியிடம் இதுபற்றிப் பேசுவதாகச் சொன்னார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட ரஜினி, நிச்சயம் இதில் ஆர்வம் காட்டி நடிப்பார் என அவர் நம்பிக்கையோடு எங்களிடம் சொன்னார்.

சமீபத்தில் இதற்காகவே சென்னைக்குப் போய் ரஜினியைச் சந்தித்துப் பேசியதாகவும், ‘விரைவில் பெங்களூர் வந்து ஆலோசனை நடத்தியபின் நடிப்பது குறித்து முடிவு செய்வேன்’ என்று ரஜினி சொன்னதாகவும் ராஜபகதூரே சொன்னார். ரஜினி ஒப்புக்கொண்டால் அந்தப் படம் முழுக்க தமிழிலும், பாடல்கள் மட்டும் கன்னடத்திலும் இருக்குமாறு உருவாக்கப்படும்’’ என்கிறார் சுவர்ணா உறுதியாக.

யாருக்குத் தெரியும்... ராகவேந்திரர் போல புரந்தரதாசரையும் ரஜினியின் உருவிலேயே இளைஞர்கள் பார்க்கும் காலமும்வரலாம்!
- ஏ.வீ.மதியழகன்

பக்த புரந்தரதாசர்
கடந்த 500 ஆண்டுகளுக்கு முன், மொழிவழி மாநிலங்களாக பிரிந்திருக்காமல், அகண்ட புண்ணியபூமியாக இந்தியா இருந்தது. அந்தச் சூழலில் 1484-1564ம் ஆண்டுகளில் வாழ்ந்தவர் புரந்தரதாசர். தற்போதைய கர்நாடக மாநிலம், தீர்த்தஹள்ளி தாலுகா, கேஷம்புரா கிராமத்தில் ஒரு வைணவக் குடும்பத்தில் பிறந்த இவர், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மீது பக்தி கொண்டு பல பாடல்களை எழுதிப் பாடினார். தற்போது மகாராஷ்டிராவில் உள்ள புகழ்பெற்ற புண்ணியத்தலமான பண்டரீபுரத்தில் குடிகொண்டிருக்கும் பாண்டுரங்கனைப் பாடிப் புகழ் பெற்றதால், பக்தர்களால் புரந்தரதாசர் என்று அழைக்கப்பட்டார். அவர் சுமார் 4 லட்சத்து 75 ஆயிரம் பாடல்களை பாண்டுரங்க விட்டல, ஸ்ரீகிருஷ்ணா, திருப்பதி-திருமலை வெங்கடேச பெருமாள் மீது பாடியுள்ளதாகவும், அதில் 4 ஆயிரம் பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்!