அபலைகள் மீதான உலகத்தின் யுத்தம்!




கண்ணெதிரே ஒரு கொடூரம் நடக்கும்போது அறச்சீற்றத்தோடு அதைத் தட்டிக் கேட்காமல் மௌனம் காப்பதும் குற்றமே என்கின்றன நீதி நூல்கள். அப்படியானால், அந்தக் கொடூரத்துக்குத் துணை போவது எவ்வளவு பெரிய குற்றம்? அதைத்தான் செய்கின்றன உலக நாடுகள். ஈழத்தில் நம் சொந்தங்கள் கொத்துக் கொத்தாக கொன்று போடப்பட்டது போன்ற ஒரு கொடூரம் சிரியாவில் தினம் தினம் நிகழ்கிறது. ரசாயன ஆயுதங்களால் தாக்கி குழந்தைகள், பெண்கள் என தூங்கிக் கொண்டிருந்த 1300 பேரைக் கொன்றது போன்ற கொடூரங்களுக்குத் துணை போவது வல்லரசுகள்தான்!

*  துனிஷியாவில் ஆரம்பித்த அரபு வசந்தம் என்கிற புரட்சி அலை, ஒவ்வொரு நாடாக நகர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிரியாவில் மையம் கொண்டிருக்கிறது. அந்த வசந்தம் எந்த நாட்டிலும் ஜனநாயகத்தையோ, மக்களுக்கு நிம்மதியையோ தந்துவிடவில்லை. துனிஷியாவில் தினம் தினம் கலவரங்கள், எகிப்தில் இன்னமும் ரத்த ஆறு ஓடுகிறது, லிபியாவில் மக்களுக்கு நிம்மதியற்ற நிலை - சர்வாதிகாரியாக இருந்தாலும் கடாபியே தேவலாம் என மக்கள் நினைக்கும் நிலை.

*  அரபு வசந்தம் அதிகம் பேரை சாகடித்தது சிரியாவில்தான். ஐம்பது ஆண்டுகளாக பாத் கட்சி அங்கு ஆட்சியில் இருக்கிறது. பஷார் - அல் - ஆசாதின் குடும்பம் 43 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறது. அவரது ஆட்சியை அகற்றுவதற்காக வெடித்த கலவரம், இலக்கில்லாத போராக நகர்கிறது.

*  ஐ.நா சபையில் ஆசாதுக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டுவந்த தீர்மானங்களை எதிர்த்து, ரஷ்யாவும் சீனாவும் அவரைக் காப்பாற்றி வருகின்றன.

*  அரபு நாடுகளில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதைத் தீர்மானிக்கும் மறைமுக யுத்தமாக இது கருதப்படுகிறது. முஸ்லிம்களில் இரு பெரும் பிரிவினர்களுக்கு இடையேயான இந்த யுத்தத்தில், சிரியா அரசு படைகளில் இருந்த பெரும்பாலானவர்கள் விலகி புரட்சிக்காரர்களுடன் சேர்ந்துவிட்டார்கள். அவர்களுக்கு துருக்கி நாடு அடைக்கலம் கொடுத்து, ஆயுதங்களும் கொடுத்து, பயிற்சி கொடுத்து சண்டை போட அனுப்பி வைக்கிறது.

*  சிரிய அரசு எதிர்ப்பாளர்கள் என்பவர்கள் ஒரே குழுவாக இல்லை என்பதுதான் பிரச்னை. கிட்டத்தட்ட 20 குழுக்கள் தனித்தனியாக ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு வருகின்றன. அவர்களுக்குள்ளும் அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன. வீதியில் துப்பாக்கியோடு வரும் ஒரு இளைஞனுக்கு யார் எதிரி, யார் நண்பன் என புரிவதில்லை. சகோதர சண்டைகளும் ஏராளம்.

*  சவூதியும் கத்தாரும் யாருக்கு வேண்டுமானாலும் ஆயுதங்களைத் தூக்கிக் கொடுக்கின்றன. குறிப்பாக போர்வெறியோடு வலம் வரும் ஜிகாதி தீவிரவாதிகள்தான் இந்தப் போரில் பிஸியாக இருக்கிறார்கள். அரபு மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வந்த இந்த இளைஞர்கள், லிபிய போரின் ரத்தம்கூட உதிராத நிலையில் சிரியாவுக்கு வந்துவிட்டார்கள். பயங்கரமான ஆயுதங்கள் இவர்கள் கைக்குப் போயிருக்கிறது.

*  அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த கலகக்காரர்களுக்கு உணவும் மருத்துவ சிகிச்சையும் கொடுக்கின்றன. பிரிட்டன் இவர்களுக்காக சிரிய ராணுவத்தின் நகர்வுகளை உளவு பார்த்துச் சொல்கிறது.

*  சவூதியும் கத்தாரும் ஆசாத்துக்கு எதிராக தோள் தட்டுகின்றன என்றால், அவருக்கு ஈரான் சப்போர்ட். தனது ராணுவத்தின் சிறப்புப் பிரிவை உதவிக்கு அனுப்பியிருக்கிறது. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு, தனது படைகளை சிரியாவுக்குள் நுழைத்திருக்கிறது. இப்படி இன்னும் ஒரு டஜன் கலகக் குழுக்கள் அரசுக்கு சப்போர்ட். அரசு சார்பாகவே வெளிநாட்டு ஆயுதக் குழுக்கள் போர் புரியும் ஒரு விநோதச் சூழல் சிரியாவில் மட்டுமே நிகழ்கிறது.



*  போர் ஆரம்பித்த நாளிலிருந்து இப்போதுவரை சிரியாவுக்குத் தேவையான அத்தனை ஆயுதங்களையும் சப்ளை செய்கிறது ரஷ்யா. ரஷ்ய அதிகாரிகள் படையும் களத்தில் இருந்து நிலைமையைக் கண்காணிக்கிறது. குறிப்பாக ரஷ்யாவில் இருக்கும் ஒரு ஆயுத நிறுவனம், ஒரே நேரத்தில் சிரிய அரசுக்கும் ஆயுதங்களை சப்ளை செய்கிறது; அமெரிக்க ராணுவம் வழியாக கிளர்ச்சிக்காரர்களுக்கும் சப்ளை செய்கிறது.

*  அநேகமாக சிரியாவின் அனைத்து நகரங்களும் குண்டுவீச்சில் சிதைந்துவிட்டன. ‘‘போர் முடிந்தபிறகு சிரிய மக்கள் நிமிர்ந்து பார்த்தால், அவர்கள் குடியிருக்க ஒரு வீடுகூட இருக்காது’’ என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். அமெரிக்கா நேரடியாகக் களத்தில் இறங்கி, சிரியாவை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுகின்றன.  ஆனால், ‘‘ஆசாத் அரசுக்கு எதிராகப் போர் புரிபவர்கள் கையில் அதிகாரம் வந்தால், அவர்கள் எங்களுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள். எனவே அமெரிக்கா எதுவும் செய்யாது’’ என தெளிவாகச் சொல்லியிருக்கிறார் அமெரிக்க ராணுவத் தளபதி மார்ட்டின் டெம்ப்ஸி.

*  போர் துவங்கிய நாளிலிருந்து சிரியா எண்ணெய் ஏற்றுமதி செய்ய தடை வந்துவிட்டது. கலகக்காரர்களில் ஜபாத் அல் - நுஸ்ரா என்ற குழுவின் கட்டுப்பாட்டில் பல எண்ணெய்க்கிணறுகள் வந்துவிட, அவர்களிடம் இப்போது எண்ணெய் வாங்குகிறது ஐரோப்பிய யூனியன். இதனால் எல்லா கோஷ்டிகளும் எண்ணெய்க் கிணறுகளைத் தேடி அலைகின்றன.

*  இன்றுவரை போரில் ஒரு லட்சம் பேர் செத்துவிட்டார்கள். 18 லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை பற்றி அக்கறைப்பட யாருக்கும் நேரமில்லை. ஆயுதங்களும் எண்ணெயும் வர்த்தகமானால் போதுமே!
- அகஸ்டஸ்