திக் திக் நிமிடங்களை தித்திக்க வைத்த இளையராஜா

‘‘கவிஞர் வாலி, படாபட் ஜெயலட்சுமியுடன் நான் ரிலாக்ஸாக இருக்கும் இந்தப் படத்துக்குப் பின்னாடி இரண்டு அவஸ்தைகள் இருக்கு’’ என அதுபற்றி அசை போட்டார் கதாசிரியரும் இயக்குனருமான காரைக்குடி நாராயணன்.

‘‘1977ல் நான் இயக்கி தயாரிச்ச ‘அச்சாணி’ பட பூஜையில் எடுத்த படம் இது. முத்துராமன் - லட்சுமி ஹீரோ, ஹீரோயினாக நடிச்ச படத்துக்கு இளையராஜா இசை, பாடல்கள் வாலி. முத்துராமனோட தங்கை கேரக்டருக்கு படாபட் ஜெயலட்சுமி ஒப்பந்தமானார். படத்தோட பூஜை அன்னிக்கு, ‘சார்... ‘சட்டம் என் கையில்’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்திட்டேன். அதை முடிச்சிட்டு வந்திடவா’ன்னு ஜெயலட்சுமி திடீர்னு கேட்டதும் எனக்கு ஷாக். என்ன பண்றதுன்னு யோசிச்சப்ப, ‘ஷோபான்னு ஒரு பொண்ணு இருக்கு. நல்லா நடிக்கக்கூடிய பொண்ணு’ன்னு லட்சுமி சிபாரிசு செய்தார். தங்கை கேரக்டரில் ஷோபாவை நடிக்க வைத்தேன். அதே சமயத்தில் ஷோபா ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் நடித்தார் என்றாலும், டைட்டிலில் அறிமுகம் என்று அவர் பெயரைப் போட்டேன்.

‘அச்சாணி’க்காக ஒரே கால்ஷீட்டில் இரண்டு பாடல்களை முடித்துத் தருவதாக இளையராஜா சொன்னார். அருணாசலம் ஸ்டூடியோவில் ஸ்டீரியோ தொழில்நுட்பத்தில் பாடல்களைப் பதிவு செய்ய முடிவானது. காலை 7 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணிக்குள்ள ரெக்கார்டிங்கை முடிப்பதாகத் திட்டம். எஸ்.பி.பி, பி.சுசீலா, ஜானகி எல்லாரும் காத்திருக்காங்க. ரெக்கார்டிங் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே ஸ்டீரியோ தொழில்நுட்பத்தில் கோளாறு வந்திடுச்சு. அதை சரி செய்ய எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிஞ்சிச்சு. முதல் நாளிலேயே இப்படி தடங்கல் ஏற்படுறதை அபசகுனமா நினைச்சி பைனான்சியர் படத்தை நிறுத்திடுவாரோங்கற டென்ஷன் வந்திடுச்சு. இளையராஜா முகத்தைப் பார்த்தேன். ‘கவலைப்படாதீங்க, சாயங்காலத்துக்குள்ள முடிச்சிடலாம்’னு பதற்றமே இல்லாம சொன்னார்.

பாடகர்களை மதியம் இரண்டு மணிக்கு பிரசாத் ஸ்டூடியோவுக்கு வரச் சொன்னார் ராஜா. பதற்றமும் டென்ஷனும் எனக்குள்ள தவில் வாசிக்க, 2லிருந்து 4 மணிக்குள்ள எஸ்.பி.பி - பி.சுசீலா பாடிய பாட்டையும், 5லிருந்து 6.30க்குள்ள ஜானகி பாடிய பாட்டையும் எடுத்து முடிச்சு ஆச்சர்யம் தந்தார் ராஜா. பிரசவ வேதனையுடன் பெற்றெடுத்த அந்த அற்புதப் பாடல் குழந்தைகள்தான் ‘தாலாட்டு... பிள்ளை ஒன்றைத் தாலாட்டு...’, ‘மாதா உன் கோயிலில்...’ ’’
- அமலன்